கொங்குவில் உதித்த "சூரியன்".. வரலாறு படைத்த திமுக.. கோவை மேயராக கல்பனா.. "சாதித்த" செந்தில் பாலாஜி
திமுகவின் முதல் கொங்கு மேயராக கல்பனா அறிவிக்கப்பட்டுள்ளார்
சென்னை: கோவை மேயர் வேட்பாளராக கல்பனா அறிவிக்கப்பட்டுள்ளார்.. முதல் முறையாக கொங்கு கோட்டையில் திமுக கொடி நாட்டப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் நேற்றைய தினம் பதவியேற்று கொண்டனர்.
மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பு மனுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

திமுக கூட்டணி
இந்த தேர்தலில் திமுக கூட்டணியே 90 சதவீதம் இடங்களை லட்டு போல கைப்பற்றியது... இந்நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்கள் குறித்த அறிவிப்பை லிஸ்ட்டாக வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவை மேயர் வேட்பாளராக கல்பனா அறிவிக்கப்பட்டுள்ளார்.. முதல் முறையாக கொங்கு கோட்டையில் திமுக கொடி நாட்டப்பட்டுள்ளது.

தெம்பு
இந்த தேர்தலில் மற்ற பகுதிகளின் வெற்றியைவிட கொங்குவின் வெற்றியே திமுக தரப்பில் அதிகமாக ஈர்க்கப்பட்டு வருகிறது.. இது திமுகவுக்கு தெம்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.. ஓட்டுஎண்ணிக்கையின்போதே, கொங்குவில் அபார வெற்றி என்றதுமே, அடுத்த மேயராக திமுகவில் இங்கு யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.. இதுவரை பிற கட்சிகளை சேர்ந்தவர்கள்தான் கொங்குவில் மேயராக இருந்திருக்கின்றனதே தவிர திமுகவில் யாரும் மேயரானது இல்லை.

மூப்பனார்
1996-ல் நடந்த கோவை மாநகராட்சி தேர்தலில் தமாகாவை சேர்ந்த வி.ஜி. என்றழைக்கப்பட்ட கோபாலகிருஷ்ணன் கோவையின் முதல் மேயராக தேர்வானார். திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மூப்பனாருக்காக கோவை மாநகராட்சி மேயர் பதவியை கூட்டணிக் கட்சிக்கு கொடுத்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. இவருக்கு அடுத்ததாக 2001-ம் ஆண்டு நடைபெற்ற கோவை மாநகராட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதுடன் அக்கட்சியை சேர்ந்த மலரவன் கோவை மாநகராட்சியின் 2-வது மேயரானார்.

மலரவன்
சாதாரண பூக்கடை நடத்தி வந்த மலரவனுக்கு மேயர் பதவியை கொடுத்து சொந்தக் கட்சியினரை மட்டுமல்லாமல் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளையும் திக்குமுக்காட வைத்தார் ஜெயலலிதா. இதையடுத்து 2006-ல் நடந்த மாநகராட்சி தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக வார்டுகளில் வெற்றிபெற்றதால் அப்போது திமுகவுக்கு கோவை மேயர் பதவியை கைப்பற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கொடுத்த குடைச்சலால் அந்த முறையும் கோவை மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுத்தார் கருணாநிதி.

நீலகிரி பிரபு
முன்னாள் மத்திய அமைச்சரும், ராஜீவ்காந்தியின் நெருங்கிய நண்பருமான நீலகிரி பிரபு (இவர் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்) மூலம் காலனி வெங்கடாசலம் கோவை மாநகராட்சியின் 3-வது மேயரானார். அவரைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் மறுபடியும் அதிமுக அமோக வெற்றிபெற்றது. முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமியை கோவை மாநகராட்சியின் 4-வது மேயராக்கினார் ஜெயலலிதா. பிறகு அவரது செயல்பாடுகளின் மீது கொண்ட அதிருப்தி காரணமாக 2014-ம் ஆண்டே மேயர் பதவியை அவரை ராஜினாமா செய்ய வைத்து அதிமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார் என்பவரை கோவை மாநகராட்சியின் 5-வது மேயராக்கினார் ஜெயலலிதா.

முதல் வாய்ப்பு
இதற்கு பிறகு 2016-ம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 6 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் நடந்து முடிந்துள்ளது.. கோவை மாநகராட்சி மேயர் பதவியில் அமர்வதற்கான வாய்ப்பு இரண்டு முறை கிடைத்தும் அதனைக் கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்கொடுத்த திமுக தலைமை.. ஆனால், இந்தமுறை அதுபோல் செய்துவிடக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்து வந்தது.. அதன்படியே கோவை மேயர் வேட்பாளராக கல்பனா தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்..

வரலாறு
19-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கல்பனா, 30-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யா, 36-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தெய்வயானை ஆகியோரது பெயர்களும் அடிபட்டு வந்த நிலையில், கல்பனா பெயரே தேர்வாகி உள்ளது.. இதன்மூலம் கோவையின் முதல் பெண் மேயராகவும், திமுகவின் முதல் கோவை மேயராகவும் வரலாறு படைக்க போகிறார்...!

செந்தில் பாலாஜி
இவர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ளவர் என்கின்றனர்... ஆனால், மிக எளிமையான குடும்பத்தை சார்ந்தவராம்.. போதுமான வசதியின்மை காரணமாக, கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், கழகத் தலைவரை சந்திப்பதற்காக சென்னைக்கு பஸ்ஸிலேயே வந்து சென்றவர்.. அந்த அளவுக்கு எளிமையான பின்னணி கொண்டவரை தேர்ந்தெடுத்துள்ளது திமுக அரசுக்கு பெருமை சேர்த்து வருகிறது.

துணை மேயர்
அதே போல துணை மேயர் பதவிக்கு 92Tவது வார்டில் போட்டியிட்ட வெற்றி செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் சொந்த வார்டு என்பது குறிப்பிடத்தக்கது. எளிய பின்னணியை சேர்ந்த இருவருக்கும் மேயர் மற்றும் துணை மேயர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. இந்த முறை வசதிபடைத்தவர்கள், செல்வாக்கு படைத்தவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, திறமையையும், உழைப்பையும் நம்பி வாய்ப்பு தந்துள்ளது திமுக மேலிடம்.












Click it and Unblock the Notifications