மலைத்த தமிழ்நாடு.. முதல்முதலாக முதலமைச்சர் தலைமையில் இன்று நடக்கிறது பல்கலை. துணைவேந்தர்கள் கூட்டம்
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்கான இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. அதுமட்டுமல்ல, முதல்முறையாக முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்களின் கூட்டம் நடைபெற உள்ளது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2 முறை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருந்த ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விரிவான விசாரணைகள் நடைபெற்று வந்தன. இதன் மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8 ம் தேதி நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினர்.
10 மசோதாக்கள்
அந்த தீர்ப்பில், "ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. அரசியலமைப்பு சாசனம் 200வது பிரிவின்படி ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாக்கள் அனுப்பி வைக்கப்படும்போது ஆளுநருக்கு முன் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தலாம். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்த முடியாது. 2வது முறையாக அனுப்பி வைக்கப்படும் மசோதா வேறுபட்டால் மட்டுமே ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க முடியும். 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்" என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, இந்த தீர்ப்பு குறித்து திமுக வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் ஆளுநர் வேந்தராக செயல்படுவதை ரத்து செய்து முதல்வரையே வேந்தராக நியமித்தல், துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இன்று ஆலோசனை கூட்டம்
உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதலமைச்சரே வேந்தராக செயல்படலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று திமுக வழக்கறிஞர் வில்சன் கூறியிருந்தார்.
அதுமட்டுமல்ல, இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தொடர்ந்து, இந்த சட்டங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக அமல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிட்டிருந்தது.
இந்த பரபரப்பான சூழலில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் ஏப்ரல் 16ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.. தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்கான இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் அரசு அறிவித்திருந்தது.
முதல்முறையாக அதிரடி
அதன்படியே இன்று 16ம் தேதி சென்னை, தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாட்டில் உயர்க்கல்வியை மேம்படுத்தும் வகையில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.
அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் கலந்துகொண்டு தமிழ்நாட்டின் உயர்க்கல்வியை மேம்படுத்த ஆலோசனை வழங்கி வருகின்றனர். முதல்முறையாக முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்களின் கூட்டம் நடைபெற்றிருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications