சூறாவளி காற்று.. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்.. எச்சரிக்கும் மீன்வளத்துறை!
சென்னை: இன்று முதல் 12ம் தேதி வரை கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், தற்போது வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் அலர்ட்
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக 12ம் தேதியன்று வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். அதனைத்தொடர்ந்து நாளை முதல் 13ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூறாவளி காற்று
இதனிடையே இன்று முதல் 12ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள் தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வரையிலான வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.

கன்னியாகுமரி மீனவர்கள்
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு மீன்வளத்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை சார்பாக சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த விசைபடகு மீனவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. மீனவர்கள் இன்று முதல் 12ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் மீன்பிடித்து வரும் மீனவர்கள் கரைக்கு வேகமாக திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீன்வளத்துறை எச்சரிக்கை
இதனால் இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் நேற்று முதலே மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications