வஞ்சிரமே..வஞ்சிரமே..சிலுப்பிகிட்டு போகுது சீலா.. நகர மாட்டேங்குது நகரை! பாக்கெட் நாளைக்கு காலி தான்!
சென்னை: தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி இருக்கும் நிலையில் சென்னை காசிமேடு முதல் தூத்துக்குடி திரேஸ்புரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்களின் விலை அதிகரித்து வருகிறது. சிறிய வகை படகுகள் மூலம் மட்டுமே மீன்கள் பிடிக்கப்படும் நிலையில் போதிய வரத்து இல்லாததால் மீன்கள் விலை ஆயிரம் ரூபாய் வரை எட்டி உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன்களின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை எண்ணூரில் தொடங்கி கன்னியாகுமரி வரை இருக்கும் வங்க கடலிலும், கன்னியாகுமரி மேற்கு பகுதியில் இருக்கும் அரபிக் கடலிலும் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை தொடங்கி ராமநாதபுரம் வரையில் சுமார் 8 மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். கட்டுமரம், ஃபைபர் படகுகள், சிறிய வகையிலான தோணிகள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு பெரிய படகுகள் என பல்வேறு வகைகளில் மீன் பிடி தொழில் நடந்து வருகின்றன.

கடலில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்திற்கு கரை வலை மற்றும் பத்து நாட்களுக்கு மேல் தங்கி இருக்கும் ஆழ்கடல் மீன்பிடிப்பு உள்ளிட்டவற்றில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு பிடிக்கப்படும் மீன்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பொதுவாக மீன்கள் கோடைகாலத்தில் இனப்பெருக்கம் செய்யும் நிலையில் ஆழ்கடல் மீன்பிடிப்பு உள்ளிட்டவற்றால் அவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். இதன் காரணமாக மீன்பிடி தடைக்காலம் நீண்ட காலமாகவே அமலில் இருக்கிறது. சுமார் 60 நாட்கள் மீன்பிடித்தடை காலத்தில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள்.
அப்போது படகுகளை சீரமைத்தல் புதிய வலைகள் பின்னுதல் மற்றும் ஏற்கனவே பழுதான வலைகளை சரி செய்யும் பணிகளில் ஈடுபடுபவர்கள். மீன்பிடி தடைக்காலத்தின் போது மீனவர்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கியது. ஜூன் பதினொன்னாம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடை அமலில் இருக்கும் நிலையில் 15000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை.
தொடர்ந்து அவை ஆழம் குறைந்த பகுதிகளில் நங்கூரம் இடப்பட்டு பழுது நீக்கும் பணிகளை மீனவர்கள் தொடங்கி இருக்கின்றனர். சிறிய வகை நாட்டு படகுகள் மற்றும் சைபர் படகுகள் மூலம் கரை வலை மீன் பிடித்து அவற்றை விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் போதிய வரத்து இல்லாததால் தமிழகத்தில் பிரதான மீன் சந்தைகளில் மீன்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்திருக்கிறது. ராமேஸ்வரத்தை பொருத்தவரை தற்போது ஒரு கிலோ சீலா மீன் 900 ரூபாய் வரையிலும், விலை மீன் 400 ரூபாய்க்கும், ஊளி மற்றும் பாறை 500 ரூபாய்க்கும், நகரை மீன் 350க்கும், சூடை மீன் 150 ரூபாய்க்கும், கணவாய் 500 ரூபாய்க்கும், நண்டு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் தூத்துக்குடி திரேஷ்புரம் மீன்கள் விற்பனை நிலையத்தில் சீலா மீன் ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதே போல விலை மீன் 600 ரூபாய்க்கும், ஊளி மீன் 500 ரூபாய்க்கும், சூரை மீன் 250 ரூபாய்க்கும், சிறிய பாறை ஒரு கூடை 2500 க்கும் விற்கப்படுகிறது. சாளை மீன்கள் ஒரு கூடை 3000 ரூபாய் வரை விற்பனையாவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன்கள் விலை இன்னும் அதிகரிக்கும் என்கின்றனர் மீனவர்கள்.












Click it and Unblock the Notifications