'கட்டாலங்குளம் அழகு முத்து சேருவைகாரன்'.. முதல் விடுதலை போராளி- யார் இந்த மாவீரன் அழகுமுத்து கோன்?
சென்னை: இந்திய நிலத்தில் ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராக தீரமிகு யுத்தம் நடத்தி வீரமரணம் அடைந்த முதலாவது விடுதலைப் போராளி மாவீரன் அழகுமுத்து கோன் (கி.பி.1710- கி.பி. 1755 (1759). பிறந்த நாள் இன்று.
" தமிழ்நிலத்தின் தலைவணங்கா வீரத்துக்கும் தலைசான்ற தியாகத்துக்கும் தன்னிகரற்ற அடையாளமாக விளங்கும் மாவீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாள்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இந்தியாவின் பல பகுதிகளும் கிளர்ந்தெழுவதற்கு முன்பே அதைச் செய்து, விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த அழகு முத்துக்கோனின் வாழ்வும் போராட்டமும் என்றும் புகழ்மங்காது ஒளிவீசிடும்!"

- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவனுக்கு முன்னதாக ஆங்கிலேயருடன் வீரச்சமர் புரிந்து வீரமரணம் அடைந்தவர்தான் திருநெல்வேலி சீமை கட்டாலங்குளம் வீரன் அழகுமுத்து கோன். கி.பி. 1710-ம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 11) அழகுமுத்துகோன் - அழகு முத்தமாள் தம்பதியர் மகனாக பிறந்தவர் அழகுமுத்து கோன். தமிழ்நாட்டின் சில இடங்களில் தாத்தா, தந்தை பெயரே மகனுக்கு வைப்பது இன்றும் தொடருகிறது. மல்லையன் மகன் மல்லையன் அவரது மகன் மல்லையன், திருமலைசாமி மகன் திருமலைசாமி, அவரது மகன் திருமலைசாமி, சவடமுத்து மகன் சவடமுத்து, அவரது மகன் சவடமுத்து என்பது இன்றளவும் நடைமுறையில் உள்ளது. 1750-ம் ஆண்டு கட்டாலங்குளத்து மன்னராக முடி சூட்டியவர் சரித்திரம் போற்றும் வீரன் அழகுமுத்துகோன்.
கிபி 1700களின் மத்தியில் தமிழ்நாட்டு நிலம் பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு பாளையக்காரர்கள் எனும் குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. பாஞ்சாலங்குறிச்சியில் பொல்லா பாண்டிய கட்ட பொம்மு, நெற்கட்டும்சேவலில் பூலித்தேவன் குறுநில மன்னர்களாக இருந்தனர். இவர்களில் பொல்லா பாண்டிய கட்டபொம்முவின் பேரனே பின்னாளைய வீரபாண்டிய கட்டபொம்மன்.
அழகுமுத்துகோன், பூலித்தேவன் காலத்தில்தான் தான், ஆங்கிலேயர் இந்தியர்களிடம் வரி வசூல் உரிமையை நவாபுகளிடம் இருந்து பெற்றிருந்தனர். ஆனால் ஆங்கிலேயருக்கு வரியோ கப்பமோ செலுத்த முடியாது என்கிற முதல் விடுதலை குரல் தமிழ்நாட்டு நிலத்தில்தான் எழுந்தது. தமிழ்நிலத்து மன்னர்களிடம் கப்பம் பெறுவதற்காக ஆங்கிலேய தளபதி ஹாரன் தலைமையிலான பெரும் படை தென் தமிழ்நாடு நோக்கி புறப்பட்டது. திருச்சி அருகே மணப்பாறை லட்சுமிநாயக்கர் இந்த பெரும்படையை எதிர்த்து முதலில் வீரச்சாவடைந்தார். அப்போது ஆங்கிலேயர் படையினர் தளபதியாக இருந்தவர் கான்சாகிப் மருதநாயகம்.. பின்னர் ஆங்கிலேயரை எதிர்த்து மாவீரன் மருதநாயகம் எனப் போற்றப்பட்டவர்.
ஆங்கிலேய தளபதி ஹரான் தலைமையிலான படை அட்டூழியங்களை அரங்கேற்றியபடியே நெல்லை சீமையில் கட்டாலங்குளம் அழகுமுத்து கோனுடன் மோதுகிறது. கி.பி. 1755-ல் பெத்தநாயக்கனூரில் மிக கடுமையான யுத்தம் நிகழ்ந்தது. இந்த யுத்தத்தின் முடிவில் மாவீரன் அழகுமுத்துகோனும் அவரது தளபதிகளும் ஆங்கிலேய கும்பலால் சிறைபிடிக்கப்படுகின்றனர். அதே இடத்தில் மாவீரன் அழகுமுத்து கோனும் 100க்கும் மேற்பட்ட தளபதிகளும் பீரங்கிகள் முன்னால் நிறுத்தப்பட்டு சுட்டு படுகொலை செய்யப்பட்ட அன்று பெத்தநாயக்கனூர் ரத்த ஆறாய் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது!
இந்திய நிலத்தின் முதல் விடுதலைப் போர் 1857 என்கிறது நாம் படிக்கும் பாடங்கள். ஆனால் அதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னரே விடுதலை யுத்தம் நடத்தி வீரமரணம் அடைந்தவர்கள் தமிழர்கள் என்பதுதான் நிஜ சரித்திரம்!












Click it and Unblock the Notifications