Flash Back: சேது கால்வாய்: கருணாநிதியின் ஒரு கேள்வி; தலையை சீவ சொன்ன சாமியார்- சிதைந்த பாஜக ஆபீஸ்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தீர்மானம் நிறைவேற்றினார். தமிழ்நாட்டில் மீண்டும் சேது சமுத்திர திட்டம் என்ற சேது கால்வாய் திட்டம் மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறது.
சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்னர் 2007-ம் ஆண்டு சேது கால்வாய் திட்ட விவகாரம், தமிழ்நாட்டில் பெரும் புயலையே கிளப்பியது. 2007-ம் ஆண்டு செப்டம்பர் 16-ல் ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் மறைந்த தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் கருணாநிதி பேசிய பேச்சு பெரும் புயலைக் கிளப்பியது.

கருணாநிதியின் பேச்சு: திமுகவை அழிக்கும் குள்ளநரிகளில் சில கூறுகின்றன. 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதன், அவன் பெயர் ராமனாம். அவன் கட்டிய பாலம் ராமர் பாலமாம். அந்தப் பாலத்தின் மீது யாரும் கை வைக்கக் கூடாது என்கிறார்கள். அந்த ராமன் எந்த பொறியியல் கல்லூரிக்கு சென்று படித்துவிட்டு வந்து இந்த பாலத்தைக் கட்டினான்? அதற்கு ஆதாரம் இருக்கிறதா?. இவ்வாறு கருணாநிதி கேட்டார்.
கருணாநிதியின் இந்தப் பேச்சுக்கு இந்துத்துவா அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம்விலாஸ் வேதாந்தி என்ற சாமியார், ராமரை இழிவாக பேசிவிட்டார் கருணாநிதி. கருணாநிதியின் தலை, நாக்கை துண்டித்து வருவோருக்கு தங்கம் பரிசாக வழங்கப்படும் என்றார். இதற்கு எதிராக திமுக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள தமிழ்நாடு பாஜக அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. திமுகவின் மூத்த தலைவர்களாக இருந்த பரிதி இளம்வழுதி, பலராமன், ஜெ.அன்பழகன், இன்றைய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பாஜக அலுவலகம் முன்பாக ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். அந்த பாஜக அலுவலகம் முன்பாகவே வேதாந்தியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அத்துடன் ஆத்திரமடைந்த திமுகவினர், பாஜக அலுவலகம் மீது பாறங்கற்களை சரமாரியாக வீசினர். பாஜகவின் கொடி கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டது.

அத்துடன் முடியவில்லை. சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி தமிழ்நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஒரு மாநில அரசே முழு அடைப்பு நடத்தியதால் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம், திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய நேரிடும் என எச்சரித்தது. ஆனால் உச்சநீதிமன்ற எச்சரிக்கையை மீறி அக்டோபர் 1-ந் தேதி சேது கால்வாய் திட்டத்துக்காக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications