மின் கட்டணம்.. 'சாமி வரம் கொடுத்தும்'.. மூன்று மாடிகளுக்குள் உள்ள வீடுகளில்.. புலம்பும் மக்கள்
சென்னை: மூன்று மாடிகள் அல்லது அதற்கும் குறைவாக, லிப்ட் வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு மின்கட்டணத்தை தமிழக அரசு குறைத்த போதிலும், மின்வாரிய அதிகாரிகள் அதனை மாற்றியமைக்காததால், பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மின் கட்டணம்
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை பொறுத்தவரை அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. 100 யூனிட் முதல் 500 யூனிட் வரை மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில் சாதாரண அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அதாவது லிப்ட் உள்ளிட்ட வசதிகள் இல்லாத சாதாரண அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின கட்டணம் ரூ.5.50 இருக்கிறது.

முன்னதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2022-ம் ஆண்டு செப்.10-ம் தேதி மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது. தற்காலிக இணைப்புக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ.12.00, தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ. 6.50, அரசு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ.7.00, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.7.50, கடைகள் வணிக நிறுவனங்களுக்கு ரூ. 8.50 மற்றும் மாதம் நிலையான கட்டணம் ரூ.550 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணத்தை பொறுத்தவரை 100 யூனிட்டிற்கு எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. ஆனால் 101 - 200 யூனிட்களுக்கு முன்பு ரூ.170 ஆக இருந்த கட்டணம் ரூ.225 ஆக உயர்ந்தப்பட்டது. 201 - 300 யூனிட்களுக்கு முன்பு ரூ.530 ஆக இருந்த கட்டணம் 2022 செப்டம்பர் முதல் ரூ.675 ஆக உயர்த்தப்பட்டது. 301 - 400 யூனிட்களுக்கு முன்பு ரூ.830 ஆக இருந்த கட்டணம் ரூ.1,125 ஆக உயர்த்தப்பட்டது. 401-500 யூனிட்களுக்கு முன்பு ரூ.1,130 ஆக இருந்த கட்டணம் 2022ல் ரூ.1,725 ஆக உயர்த்தப்பட்டது. இந்த சூழலில்
இதில் பொது சேவை பிரிவுக்கு '1-டி' என்ற புதிய கட்டண விகிதம் அமல்படுத்தப்பட்டது. அந்தப் பிரிவுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.8-ம், மாதநிரந்தர கட்டணமாக கிலோ வாட்டுக்கு ரூ.100-ம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்படி தமிழகம் முழுவதும் 10 லட்சம் பொது சேவை மின் இணைப்புகளுக்கு புதிய கட்டண விகிதத்தை அமல்படுத்தி மின்வாரிய ஊழியர்கள் உத்தரவிட்டனர்.
இந்த சூழலில் கடந்த ஜூலை மாதம் மீண்டும் மின் கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டது. இதன்படி பொது சேவை பிரிவுக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15-ம், நிரந்தர கட்டணம் ரூ.102 ஆகவும் உயர்த்தப்பட்டது. இது அடுக்குமாடி உள்ளிட்ட வாடகை வீடுகளில் குடியிருப்போரை கடுமையாக பாதித்தது. மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, 10 வீடுகள் அல்லது அதற்குக் குறைவாகவும், 3 மாடிகள் அல்லது அதற்குக் குறைவாகவும், லிப்ட் வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு பொது சேவை பிரிவுக்கான கட்டணம்ஒரு யூனிட் ரூ.5.50 ஆகக் குறைக்கப்பட்டது. இதற்கு '1-இ'என்ற புதிய கட்டண விகிதம் ஏற்படுத்தப்பட்டது. இக்கட்டண விகிதம் கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இதையடுத்து, '1-டி' பிரிவுக்கு மாற்றப்பட்ட மின் இணைப்புகளை ஆய்வு செய்து, அரசு நிபந்தனையில் இடம் பெறும் குடியிருப்புகளுக்கு '1-இ' மின்கட்டண விகிதத்தை மாற்றும் பணியைக் கடந்த டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிக்க மின்வாரியம் உத்தரவு பிறப்பித்திருந்தது- .
ஆனால், பல குடியிருப்புகளில் மின்கட்டண விகிதம் இன்னும் மாற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், ஒரு யூனிட்டுக்கு ரூ.5.50 ஆக மின்கட்டணம் குறைக்கப்பட்ட நிலையிலும் மின்நுகர்வோர் ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15 செலுத்தும் நிலையே உள்ளதாக அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். திருத்தப்பட்ட இந்த மின்கட்டண விகிதத்தை உடனடியாக மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications