வீட்டை சுற்றி வெள்ளம்... பிரசவித்த தாயையும் பச்சிளம் குழந்தையையும் மீட்ட பேரிடர் மீட்புக்குழுவினர்
குழந்தை பெற்றுடுத்து சில நாட்களே ஆன பெண், மழை நீரில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த தாய் சேயை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர்.
சென்னை: மழை வெள்ளத்தில் சிக்கித்தவித்த தாயையையும் பிறந்து 2 நாட்களே ஆன சிசுவையும் பேரிடர் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டு நிவாரண முகாமில் தங்க வைத்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 130கி.மீ தொலையிலும், புதுச்சேரியிலிருந்து வடகிழக்கு திசையில் 150 கி.மீ தொலைவிலும் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

இதனால் நேற்று இரவிலிருந்தே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை இன்னும் சிலமணி நேரங்கள் நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடந்துசெல்ல உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
சென்னை முழுவதும் பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழையால் தியாகராயர் நகர், மேற்கு மாம்பலம், சூளைமேடு, புரசைவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை நகர்பகுதிகளில் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளிலும் வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கன மழையின் காரணமாக தாழ்வான பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவு முதல் இடுப்பளவு வரை மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. குறிப்பாக தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், நூத்தஞ்சேரி பகுதியில் குடியிருப்புகளை மட்டுமல்லாது வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
வீடுகளுக்குள் வெள்ளநீரில் சிக்கி வெளியேற முடியாமல் தவிப்பவர்களை படகுகள் மூலமும் ரப்பர் மிதவைகள் மூலமும் பேரிடர் மீட்புப் படையினர் மீட்டு வருகின்றனர். ஏராளமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் உணவு, மருந்து மாத்திரைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
பெரும்பாக்கம், இந்திரா நகர் ஏரியை ஒட்டிய பகுதியில் அதி கன மழையின் காரணமாக இடுப்பளவிற்கு மழை நீர் தேங்கி, குடியிருப்பு பகுதிகளையும் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளுக்குள் உள்ளவர்கள் வெளியில் வர முடியாமல் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் குழந்தை பெற்ற ஒரு பெண் கைக் குழந்தையுடன் வெளியில் வர முடியாமல் தவித்து வந்தார். தகவலறிந்து சென்ற பேரிடர் மீட்பு குழுவினர் நாற்காலியில் அமர வைத்து தாய் சேய் இருவரையும் பத்திரமாக மீட்டு அருகில் உள்ள முகாமில் தங்க வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications