Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ள நிவாரணம் ‘பிச்சை’.. ஜல்லிக்கட்டு புராணம்..! கலெக்டருக்கு திட்டு.. நிர்மலா சர்ச்சைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு கொடுத்த வெள்ள நிவாரண தொகையைப் பிச்சை என்று கூறியது முதல்.. மணிப்பூர் பற்றி ஓடி ஒளியமாட்டேன் என்று நிர்மலா சீதாராமன் பேசியது வரை அவர் சந்தித்த சர்ச்சைகள் என்ன?

கடந்த 2 நாட்கள் முன்னதாக கோவையில் நடந்த தொழில்முனைவோர் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். அக்கூட்டத்தில் பங்கேற்ற அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசன், 'இனிப்புக்கு 5% ஜிஎஸ்டி, காரத்திற்கு 12% ஜிஎஸ்டி எனப் போடுவது வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனே எங்கள் கடைசியில் இனிப்பு சாப்பிட்டுவிட்டு இந்த வேறுபாடு பற்றி கேள்வி எழுப்புகிறார்.

nirmala sitharaman annapurna

வடநாட்டில் உள்ளவர்கள் இனிப்பு அதிகம் சாப்பிடுவதால் ஜிஎஸ்டி குறைவாகப் போடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் உள்ளவர்கள்தான் காரம் அதிகம் சாப்பிடுகிறார்கள். எனவே அதற்கு அதிக ஜிஎஸ்டி போட்டுள்ளார்கள் என்று வானதி சீனிவாசன் ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். அதை நான் கூட மறுத்தேன். எனவே இந்த வேறுபட்டைச் சரி செய்து கொடுக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருந்தார். உணவக உரிமையாளர் சீனிவாசனின் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியது. அதன்பின்னர் வேறு ஒரு செய்தியாளர்கள் சந்திப்பின்போது, 'ஜிஎஸ்டி பற்றி ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு நான் அங்கே பதிலளிக்கவில்லை. உடனே ஊறுகாய் மாமியைப் பதில் கொடுக்கவிடாமல் மடக்கிவிட்டார்' என்று சிலர் பேசுகிறார்கள். இதைப் பற்றி எல்லாம் எனக்குக் கவலையில்லை' என்று கூறியிருந்தார்.

அடுத்த நாள் சீனிவாசன் தனி அறையில் நிதியமைச்சரைச் சந்தித்து, 'நான் எந்தக் கட்சியையும் சேராதவன். ஆகவே நடத்தை விசயத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்று பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அது ராகுல்காந்தி வரை சென்றது. உடனே எதிர்க்கட்சியின இதை ஒரு சர்ச்சையாகக் கையில் எடுத்தன. அதை உணர்ந்த அண்ணாமலை பாஜக சார்பாக தான் வெளியான வீடியோவிற்கு மன்னிப்புக் கேட்பதாகத் தெரித்திருந்தார்.

இதனிடையே கடந்த 2 நாட்கள் முன்னதாக மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற நிர்மலா, மணிப்பூரைப் பற்றி கேள்வி எழுப்பிய செய்தியாளரைப் பார்த்து, 'நான் மணிப்பூரைப் பற்றி பதில் சொல்கிறேன். நான் பாய்ந்து ஓடுகிற ஆள் கிடையாது. நான் பேசும் போது குறுக்கே குதர்க்கமாகக் கேள்வி கேட்க வேண்டாம்' என்று ஆவேசமாகப் பேசினார். நேற்று கூட ஒரு செய்தியாளர் கேள்வியை முன்வைத்ததற்கு டெல்லி வாருங்கள் பதில் கொடுக்கிறேன் என்று கூறியதும் சர்ச்சையாக மாறியுள்ளது. இவ்வாறு தொடர்ந்து நிர்மலா சீதாராமன் பேச்சுக்குக் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் கூட, அன்னபூர்ணா உரிமையாளரை மன்னிப்பு கேட்ட வைத்ததைக் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் இதுவரை நிர்மலா சீதாராமன் சந்தித்து வந்த சர்ச்சைகள் பற்றி கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். இந்த வருடம் ஜனவரி பொங்கல் பண்டிகை திருநாளை ஒட்டி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. அதைப் பற்றிப் பேசும் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரது எக்ஸ் பக்கத்தில் பக்கத்தில், புராணமும் இதிகாசமும் ஜல்லிக்கட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு மிகக் கடுமையான விமர்சனத்தை மதுரை எம்பி சு, வெங்கடேசன் தெரிவித்திருந்தார். தமிழர் பண்பாட்டை ஏன் இவர் புராணத்துடன் ஒப்பிடுகிறார் என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதேபோல அதேபோல கடந்த 2 ஆண்டுகள் முன்னதாக தெலங்கானா மாநிலத்தில் உள்ள நியாய விலை கடைகளில் ஆய்வு நடத்திய நிர்மலா சீதாராமன், மாவட்ட ஆட்சியரிடம் 'ரேஷன் கடைகளில் ஏன் மோடியின் படம் வைக்கவில்லை' என்று ஆவேசமாகப் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியதை யாரும் எளிதில் மறந்து இருக்க முடியாது. ஒரு ஆட்சியரை நிர்மலா சீதாராமன் பொதுவெளியில் வைத்துச் சாடியது வெட்கக் கேடானது என்று சுப்பிரமணியன் சாமி கூட கண்டித்து இருந்தார்.

கடந்த 4 ஆண்டுகள் முன்னர் கொரோனா தொற்று நோய் பரவியபோது, 'கொரோனா என்பது கடவுளின் செயல்' என்று சொன்னார். அதுவும் சர்ச்சையானது. 2019 இல் வெங்காயம், பூண்டு விலைவாசி கிலோ 140 ரூபாக்கு மேல் இருந்தபோது நடந்த விவாகத்திற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், "நான் வெங்காயம், பூண்டு இவற்றைச் சாப்பிடுவதில்லை. எங்கள் வீட்டுச் சமையலறையில் வெங்காயத்தைப் பயன்படுத்துவது இல்லை. வெங்காயத்துடன் அதிகம் தொடர்பில்லாத குடும்பத்திலிருந்து நான் வந்திருக்கிறேன்" என்று சொன்னார். இது நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை உருவாக்கியது.

nirmala sitharaman annapurna

அதேபோல் கடந்த 8 மாதங்கள் முன்னதாக உதயநிதி, 'உங்க அப்பன் வீட்டுப் பணத்தையா கேட்கிறோம். எங்கள் வரிப் பணத்தைத்தான் கேட்கிறோம்' என்று பேசி இருந்தார். அதைத் தான் ஒன்றும் சொல்லவில்லை. முன்பு முதல்வராக மோடி இருந்தபோது காங்கிரஸ் கட்சியைப் பார்த்து அவர் கேட்டார். அதைத்தான் நாங்கள் கேட்கிறோம் என்று சொல்லி இருந்தார். அதற்குப் பதிலளித்த நிர்மலா, 'அவர்கள் பாஷை அப்படித்தான் இருக்கும். சனாதன தர்மம் பற்றிப் பேசும்போது உதயநிதி அழிக்க அல்ல, ஒழிக்க வந்திருக்கிறோம் என்று பேசினார். ஆக, அவர் அவர் பாஷை அப்படித்தான் இருக்கும். அப்பன் வீட்டுப் பணமா என்று பேசுகிறவர் இன்று அவர் அப்பன் வீட்டுப் பதவியை வைத்துக் கொண்டு சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறாரா? அப்படி என்று சொல்ல முடியுமா? கேட்க முடியுமா?' என்று பேசி இருந்தார்.

கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு அளித்த வெள்ள நிவாரணம் பற்றி போது அரசு வழங்கும் தொகையை 'பிச்சை' என்றார் நிர்மலா சீதாராமன். அது சர்ச்சையானது. அவர் இது பற்றிப் பேசும்போது, "வெள்ளம் வந்தால், வீடு இடிந்து விழுந்தால் 500 ரூபாய், 1000 ரூபாய் தருகிறார்கள். இத்தகைய நடவடிக்கையால் நாடு முன்னேறாது. எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம் வாழத் தேவை இல்லை" என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், "பட்டினியை அனுபவித்தவனுக்குத்தான் பசியின் கொடுமை புரியும்.வெயிலின் கொடுமையைப் பார்த்தவனுக்குத்தான் கூரையின் அருமை தெரியும். மானம் மறைக்கக் கந்தல் ஆடை இல்லாதவனை இழிவாகப் பார்ப்பவர்களுக்கு ஏழையின் வறுமை புரியாது.நிர்மலா சீதாராமனின் ஆணவம் ஏழைகளை முன்னேற்றாது. வயிறார உணவு, ஒழுகாத கூரை வீடு,அடிப்படை வசதிகள்,கல்வி,சுகாதாரம் போன்றவை அடிப்படை உரிமைகள் என்பதைத் தத்துவமாகக் கொண்ட சமதர்ம கொள்கையே திமுகவின் கொள்கை" என்று கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+