சென்னையில் 160 இடங்களில் தேங்கிய வெள்ளம்..எந்தெந்த இடங்களில் பாதிப்பு..புகார் கூற தொலைபேசி எண்
சென்னை: நேற்றிரவு தொடங்கி விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சென்னையில் பல சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள கல்லூரிக்கு செல்பவர்களும், அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலைகளில் தேங்கியுள்ள வெள்ள நீரினால் அலுவலகத்திற்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் புகார் கூற கட்டணமில்லா தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் நள்ளிரவு தொடங்கிய கனமழை தற்போது வரை நீடித்து வருகிறது. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சென்னை தரமணியில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல் ஜமீன் கொரொஅட்டூர் பகுதியில், 8.4 செ.மீ. மழையும், பூந்தமல்லியில் 7.4 செ.மீ. மழையும், நுங்கம்பாக்கத்தில் 7 செம்.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இதேபோல் புறநகர் பகுதிகளான கிளம்பாக்கத்தில் 17 மி.மீ. மழையும் தாம்பரத்தில் 14 மி.மீ. மழையும், மாமல்லபுரத்தில் 8 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மட்டுமல்லாது போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பிரதான சாலைகளிலும் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலை 9 மணியில் இருந்து அலுவலகம் மற்றும் வேளைக்கு செல்வோர் சாலை மார்க்கமாக செல்லும் நிலையில், இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் போக்குவரத்து இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். மழை காரணமாக வாகனங்கள் மெதுவாக இயக்கப்படும் நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வடசென்னையில் புளியந்தோப்பு பகுதியில் 3 அடி வரை சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதே போல தென் சென்னை பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் கத்திப்பாரா சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. வெள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும், தூய்மை பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். மழைநீத் தேங்குவது தொடர்பாக புகார்கள் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் 160 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
பெரம்பூர் முரசொலி மாறன் சுரங்கப்பாதையில் தேங்கிய வெள்ளநீரில் வாகனங்கள் சிக்கியுள்ளன. இதனால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் 1913 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் கூறலாம். கழிவு நீர் அகற்ற மாநகராட்சி தொலைபேசி எண் 044 4567 4567 அறிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தொடர்பான புகார்களை 1916 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.












Click it and Unblock the Notifications