தடையை மீறி உணவகங்களில் மீண்டும் மயோனைஸ்? உணவு பாதுகாப்புத்துறை எடுத்த அதிரடி முடிவு!
சென்னை: பச்சை முட்டையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தடையை மீறி உணவகங்களில் மயோனைஸ் வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிரடி முடிவை எடுத்துள்ளது.
மேலை நாட்டு உணவு வகைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது மயோனஸ். இது தற்போது இந்தியாவிலும் அதிகமான மக்களால் விரும்ப்பப்படும் உணவாகி விட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மயோனைஸை விரும்பி சாப்பிடுகின்றனர். பெரும்பாலும் மயோனைஸ் முட்டையை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. தந்தூரி, கிரில், பார்பிக்யூ, ஷவர்மா வகைகள், பொரித்த சிப்ஸ்கள், பிரென்ச் பிரைஸ் உள்ளிட்டவைகளுடன் மயோனைஸ் பயன்படுத்தப்படுகிறது.

பச்சை முட்டையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மயோனைஸில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மயோனைஸ் மாசுபடுவதால் முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும், மையோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை. இந்தத் தடை உத்தரவு ஏப்ரல் 8 ஆம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மயோனைஸ் தயாரிப்பில் பச்சை முட்டைகளைப் பயன்படுத்துவதால் சால்மோனெல்லா போன்ற நோய்க் கிருமிகளால் மாசுபடும் அபாயம் அதிகமாக உள்ளதால், உணவு விஷமாக மாறவும் வழிவகுக்கும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் தரமற்ற மயோனைஸ் சாப்ப்பிட்ட பெண் ஒருவர் பலியானதால் அதிரடி ஆய்வுகள் நடத்தப்பட்டு இந்த தடை அமல்படுத்தப்பட்டது.
முட்டையைப் பயன்படுத்தி மயோனைஸ் தயாரிப்பதற்கும் விற்பனைக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்ட நிலையில், தடையை மீறி ஒரு சில உணவகங்களில் மீண்டும் பச்சை முட்டையை கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸ் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து மயோனைஸ் பயன்படுத்துவதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடையை மீறி மயோனைஸ் பயன்படுத்தும் கடையின் உரிமத்தை ரத்து செய்து அபராதம் விதிக்க உணவு பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications