ஓபிஎஸ் பாதையே மாறுதே.. அப்படி சொன்னாரே.. தேனியில் தாமரையா.. புதிய திருப்பம்?
சென்னை: பாஜக கூட்டணியில் தான் தொடர்கிறோம் என்று கூறி முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் இணைவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தேனி தொகுதி ஒருவேளை ஓபிஎஸ்க்கு வழங்கப்பட்டால் தாமரையில் அவர் மகன் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம், நீதிமன்ற படியேறி போராடி வருகிறார். ஆனால் நீதிமன்றங்களில் இதுவரை வந்த தீர்ப்பும் அவருக்கு சாதமாக இல்லை.. ஆனாலும் மனம் தளராமல் வீடாமல் தொண்டர்களை சந்திப்பது போன்ற பணிகளை செய்து வருகிறார் ஓ பன்னீர்செல்வம்.. அதிமுக தொண்டர்கள் உரிமைமீட்புக் குழு என்ற பெயரில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கூட்டம் நடத்தி வருகிறார்.

அண்மையில் திண்டுக்கல்லில் கூட்டம் நடத்திய ஓபிஎஸ் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்தியா கூட்டணி ஆண்டி மடம்' என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள். இந்தியாவை வலிமை மிக்கதாக உருவாக்க பிரதமர் மோடி பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். வரும் மக்களவைத் தேர்தலில் அவர் மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற கருத்து நாடு முழுவதும் வலுப்பெற்றுள்ளது. தற்போது பாஜக தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறும். எங்கள் கூட்டணியின் தலைமை பாஜக தான்.
அதிமுக கொடியை பயன்படுத்த ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனக்கு மட்டும்தான் தடை விதித்துள்ளார்கள். ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு தடை இல்லை. தமிழகத்தில் பழனிசாமி தலைமையில் கூட்டணி அமையாது. மக்களவைத் தேர்தலில் ஓரிடத்தில் கூட பழனிசாமி அணி வெற்றி பெறாது என்றார்..
இதேபோல் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ பன்னீர்செல்வம், ஒற்றைத் தலைமைதான் வேண்டுமெனக் கூறி தங்களிடம் உள்ள பண பலத்தைப் பயன்படுத்தி, சிலர் ஒன்று சேர்ந்து சதி வேலை செய்தார்கள். அதை எதிர்த்துதான் இந்த தர்மயுத்தம் நடத்தி வருகிறேன்.
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலராகப் பொறுப்பேற்ற பிறகு ஈரோட்டில் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இத்தோல்விக்கு காரணமான எடப்பாடி பழனிசாமிதான் இக்கட்சியின் அழிவுக்கும் காரணமாக உள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும்போது யாருடன் கூட்டணி என்பது முறையாக அறிவிப்போம். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டபோது, அது ஆண்டிகள் கூடிக் கலையும் மடமாகத்தான் இருக்கும் என்றேன். அது இப்போது நிகழ்ந்து இருக்கிறது.. எடப்பாடி பழனிசாமி அல்லாத டிடிவி தினகரன், சசிகலா உள்பட அ.தி.மு.க.,வில் உள்ள அனைவரும் இணைந்து தேர்தல் களத்தில் நின்றால், இக்கழகத்தை வெல்வதற்குத் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் இல்லை. இக்கட்சி ஒன்றிணைவதற்கு முடியாது எனக் கூறும் ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி தான்" என்றார்.
ஓ பன்னீர்செல்வத்தின் இந்த இரண்டு ஸ்டேட்மெண்டுகளை பார்க்கும் போது, அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே தான் தான் வெளியேற்றப்பட்டதாக உறுதியாக நம்புகிறார். எடப்பாடி உடன் இணைய ஏற்கனவே வாய்ப்பு இல்லை என டிடிவி தினகரன் அறிவித்துள்ளதால், டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூவரும் பாஜக உடன் சேரவே அதிக வாய்ப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
தேனியில் தாமரை: அதேநேரம் ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டால் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்ற கேள்வியும் இருக்கிறது. ஏனெனில் ஓபிஎஸ் தனி கட்சி தொடங்கவில்லை. அமமுகவிலும் இணையவில்லை.. எனவே பாஜகவின் தாமரை சின்னத்தில் மகன் ரவீந்திரநாத்தை தேனியில் நிறுத்துவாரா என்ற கேள்விகள் எழுகிறது.. பாஜக இனி என்ன செய்ய போகிறது என்பதை பொறுத்தே ஓபிஎஸ்சின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என தெரிகிறது..












Click it and Unblock the Notifications