ராஜாஜி-காமராஜர்-கருணாநிதி என 3 முதல்வர்களுடன் பணி! 101 வயதில் காலமான மாஜி சீஃப் செக்ரட்ரி சபாநாயகம்!
சென்னை: ராஜாஜி, காமராஜர், கருணாநிதி என மூன்று முதலமைச்சர்களுடன் பணியாற்றிய முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் காலமானார்.
கடந்த 11ஆம் தேதி தான் 100 வயது நிறைவுற்று 101-வது வயதில் அடியெடுத்து வைத்தார் சபாநாயகம். இந்நிலையில் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நூற்றாண்டு நாயகர் சபாநாயகம் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் மறைவையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் குறிப்பு வருமாறு;

''மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், தலைவர் கலைஞர் உள்ளிட்ட முதலமைச்சர்களுடன் பணியாற்றிய நூற்றாண்டு நாயகர் - முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
விடுதலைக்கு முன்பான ஐ.சி.எஸ் காலத்தில் இருந்து தற்போதுள்ள ஐ.ஏ.எஸ் முறை வரை 70 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இந்திய ஆட்சிப்பணி வரலாற்றின் அடையாளமாகத் திகழ்ந்தவர். ஆட்சிப்பணிக்கு வருவதற்கு முன்பாக இராணுவத்திலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
நேர்மையும் துணிச்சலும் தலைமைப் பண்பும் செயல்திறனும் ஒருங்கே அமையப்பெற்ற சபாநாயகம் அவர்கள், கலைஞரின் நன்மதிப்பைப் பெற்றவர்.

கடந்த ஆண்டு அவரது நூறாவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அவரது சிறப்புகளை எடுத்துக்கூறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மிகப்பெரும் பேறு.
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி, வாழ்வாங்கு வாழ்ந்து நிறைந்துள்ள அன்னாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications