ஓய்வுபெற்ற நீதிபதி ஜனார்த்தனம் மறைவு! வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியவர்! முதல்வர் இரங்கல்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசரும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான எம்.எஸ். ஜனார்த்தனன் காலமானார். 3.5% இஸ்லாமியர் உள் இடஒதுக்கீடு, 3% அருந்ததியர் உள் இடஒதுக்கீடு ஆகிய சட்டங்கள் இவரது பரிந்துரையின்படி மேற்கொள்ளப்பட்டவை.
ஓய்வுபெற்ற நீதியரசர் ஜனார்த்தனம் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நீதியரசர் ஜனார்த்தனம் மறைவு
நீதியரசர் ஜனார்த்தனம் பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார். குறிப்பாக பட்டியலின வகுப்பினருக்கான உள் இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் அவரது தீர்ப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 2008ல், அருந்ததியர்களின் சமூக, கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, 3 சதவீத உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இந்த முடிவு ஜனார்த்தனம் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதியரசர் ஜனார்த்தனம் காலமானார்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
முதக்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ஓய்வு பெற்ற நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் உளம் வருந்தினேன். நீதித்துறையின் மாண்பையும், சீரிய மரபையும் காத்துவந்தவர் என்பதுடன், கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது அருந்ததியருக்கு 3 விழுக்காடு உள்ஒதுக்கீடு கொண்டு வருவதற்கான பரிந்துரையை அளித்த குழுவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவராக இருந்த போது, பிற்படுத்தப்பட்டோருக்கான தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான அறிக்கையினையும் தயாரித்து அளித்தவர் ஆவார்.
நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களின் மறைவு நீதித்துறைக்கு மட்டுமின்றி சமூகநீதி கருத்தியல் தளத்தில் இயங்கும் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர். உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நீதித்துறை சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் இரங்கல்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் செய்திக் குறிப்பில், "சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசரும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனன் காலமானார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த நீதியரசர் ஜனார்த்தனன் கடுமையான உழைப்பால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தவர். 1988 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரலாற்று சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கியவர்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக 2006 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட அவர், 2015 ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் நீடித்தார். இவரது பரிந்துரையின் அடிப்படையில் தான் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு, கிறித்தவர்கள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் இட ஒதுக்கீடு ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டன. வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை பரிந்துரைத்தவரும் இவர் தான்.
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ஒருவர் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர். சமூகநீதி வரலாற்றில் தமது முத்திரையை மிகவும் ஆழமாக பதித்தவர் இவர். நீதியரசர் ஜனார்த்தனத்தின் மறைவு சமூகநீதித்துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.
நீதியரசர் ஜனார்த்தனம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், நீதித்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சமூகநீதிக்கு அவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்த தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications