தக்காளி சாதம் கேட்டால் சண்டை வருது! எனக்கே இந்த நிலை தான்! விலை கிடு கிடு! ஜெயக்குமார் கல கல!
சென்னை: தக்காளி சாதம் கேட்டால் சண்டைக்கு வரும் காலம் இது என்றும் தனது வீட்டிலேயே தனக்கு தக்காளி சாதம் செய்து கொடுக்க முடியாது என கூறிவிட்டார்கள் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சரி தக்காளி சாதம் தான் சாப்பிட முடியவில்லை, ஒரு வெங்காய பச்சடியாவது சாப்பிடலாம் எனக் கேட்டால் வீட்ல சண்டைக்கு வர்ராங்க என்றும் விற்கிற விலைவாசிக்கு 200 ரூபாய் கொடுத்து யாரால் வெங்காயம் வாங்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தனக்கே வீட்டில் தக்காளி சாதம் சாப்பிட முடியாத நிலை தான் இருப்பதாக கூறி சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை பொறுத்தவரை வாரத்திற்கு 2 நாட்களாவது செய்தியாளர்களை சந்தித்து விடுவார். அவ்வாறு அவர் பிரஸ்மீட் நடத்தும் போதெல்லாம் மிகவும் எனர்ஜிட்டாக காணப்படுவதுடன் உற்சாகம் ததும்ப பேசக்கூடியவர். அந்த வகையில் தக்காளி விலை உயர்வை பற்றி அவர் பேசும் போது, தக்காளி சாதம் கேட்டால் வீட்ல செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க எனத் தெரிவித்து கலகலப்பாக்கினார்.
காய்கறி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை பற்றி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எந்த கவலையும் இல்லை என்றும் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்கமாட்டோம் என கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் கூறுகிறார் அவருக்கு கண்டனம் தெரிவிக்காமல் ஸ்டாலின் மவுனம் காத்தது ஏன் என வினவினார்.

பெங்களூரிலேயே சிவக்குமாரிடம் நேருக்கு நேர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் அவர் ஏன் அது போல் செய்யவில்லை எனவும் வினவினார். நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் காய்கறிகள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய ஜெயக்குமார், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications