அணிலாக இருந்து வேலை பார்க்கனும்.. நான் ’அந்த’ அணிலை சொல்லலை! தவெக விஜயை விளாசிய செல்லூர் ராஜு!
மதுரை: தமிழக வெற்றி கழகத்திற்கு வரக்கூடிய கூட்டம் எல்லாம் அவருடைய ரசிகர்கள் மட்டுமே வருகிறார்கள், ஆனால் உறுப்பினர்களாக வரவில்லை. அந்தக் கூட்டத்தில் கட்டுக்கோப்பும் இல்லை என விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, எம்ஜிஆர் வருகை தந்த பொழுது தமிழ்நாடு கொந்தளித்தது எனவும், விஜய்க்கு வரும் இந்தக் கூட்டத்தை வைத்து நான் முதலமைச்சராக வந்து விடுவேன் என்று சொன்னால் அதெல்லாம் முடியவே முடியாது எனக் கூறியுள்ளார்.
திமுகவை, தவெக தலைவர் விஜய் மிகக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அதிமுக குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியும் விஜயுடன் பேசியதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே விஜயின் பிரச்சாரத்திற்குப் பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அவ்வப்போது விஜய் குறித்து விமர்சனங்களைத் தொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஆர்பி உதயகுமார் நேற்று விஜய் விமர்சித்திருந்த நிலையில், செல்லூர் ராஜூவும் விஜய்க்கு வரும் கூட்டம் குறித்து விமர்சித்திருக்கிறார்.

செல்லூர் ராஜு
குறிப்பாக விஜய்க்கு வருவது ரசிகர் கூட்டம் மட்டுமே என்றும், கட்சித் தொண்டர்கள் இல்லை எனக் கூறியிருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. அதில் பேசிய அவர், "தற்சமயம் பத்திரிகையும் ஊடகங்களும் விலை போய் உள்ளது. இந்த கட்சியில் மூன்றாம் தலைமுறை வருகை தந்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எந்தக் கூட்டத்தையும் பார்த்து பயப்பட வேண்டாம்.
விஜய் பிரசாரம் கூட்டம்
எம்ஜிஆர் கூட்டத்தை எவனாலும் வெல்ல முடியாது. நாம்தான் அடுத்தது வெல்லப் போவது. நமது கட்சி எழுச்சியோடு உள்ளது. கடந்த 52 மாதங்களில் திமுக அரசு எதையும் செய்யவில்லை. விளம்பரம் மட்டுமே செய்துள்ளது. நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் போட்டு வருகிறார்கள். வாயில் நுழையாத பல திட்டங்கள் உள்ளன. ஆனால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. விலைவாசி அளவுக்கு அதிகமாக உள்ளது. பல்வேறு துறைகளில் பல கோடிகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.
திமுக கூட்டணி
நாம் வளர்க்கும் நாய்க்கும் வரி போட்டார்கள். எதிர்ப்பு வந்தவுடன் தான் நிறுத்தினார்கள். சதுரங்க வேட்டை திரைப்படம் போல மக்களின் ஆசையைத் தூண்டித் தூண்டி விடுகிறார்கள். ஆனால் திமுகவிற்கு எந்த விதத்திலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். திமுகவின் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கொள்கைகளை அடமானம் வைத்துவிட்டார்கள். கூட்டணிக் கட்சிகள் எல்லாம் ஆட்டம் கண்டு வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரக்கூடிய கூட்டம் எல்லாம் அவருடைய ரசிகர்களாக மட்டுமே வருகின்றன. ஆனால் உறுப்பினர்களாக வரவில்லை.
எம்ஜிஆர்
அந்தக் கூட்டத்தில் கட்டுக்கோப்பும் இல்லை. இது என்ன எழுச்சி? எம்ஜிஆர் வருகை தந்தபொழுது தமிழ்நாடு கொந்தளித்தது. இந்தக் கூட்டத்தை வைத்து நான் முதலமைச்சராக வந்துவிடுவேன் என்று சொன்னால் அதெல்லாம் முடியுமா? முடியவே முடியாது. நமது தலைவன் எம்ஜிஆர் மாதிரி ஒருவன் பிறக்கவே முடியாது. எம்ஜிஆரின் சாணக்கியத்தனம் விஜயிடம் கிடையவே கிடையாது. பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தார்கள். அவர்களுக்கெல்லாம் கூடாத கூட்டமா? டி ராஜேந்தர், பாக்கியராஜ் உள்ளிட்டோரெல்லாம் வந்தார்கள். அப்பொழுதும் கூட்டம் வந்தது.
ரசிகர்கள் கூட்டம்
நாமும் குள்ளமணி உள்ளிட்ட பல்வேறு நடிகர்களை வைத்துப் பிரச்சாரம் செய்தோம். ஆனால் அப்பொழுது யாரும் ஓட்டுப் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தவக்களை என்கிற குள்ளமணி வராத இடத்தில் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் நாம் முன்னிலையில் இருந்தோம். சிலருக்குக் கூடுகிற கூட்டத்தை வைத்து நாம் ஏமாந்துவிடக் கூடாது. ராமர் பாலத்தைக் கட்டியது அணில். அதுபோல நமது ஆட்சி அமைய நீங்கள் உதவ வேண்டும். அதே நேரத்தில் நீங்கள் வேறு அணிலை நினைத்துவிடாதீர்கள்" எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications