நிர்மலா சீதாராமனுடன் முன்னாள் எம்பி கேசி பழனிசாமி திடீர் மீட்டிங்! கவனிக்கும் அதிமுக.. நடப்பது என்ன?
சென்னை: சென்னை வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, முன்னாள் எம்பியான கேசி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். அதிமுக ஒருங்கிணைந்தால் வெற்றிக்கு வாய்ப்பு என்று தொடர்ந்து பேசி வந்த கேசி பழனிசாமி திடீரென நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதிமுகவில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் சம்பவங்கள் மீண்டும் அக்கட்சியில் உள்கட்சி பிரச்சினை ஏற்படக்கூடும் என கருதும் அளவுக்கு அடுத்தடுத்து அதிரடிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அத்திக்கடவு அவினாசி திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார்.

நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
அப்போது இருந்து எடப்பாடி பழனிசாமியை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்து வரும் செங்கோட்டையன் கடந்த வாரம் திடீரென்று டெல்லி பயணம் மேற்கொண்டார். இந்த டெல்லி பயணத்தின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. அதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்புதான் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு அதிமுக - பாஜக கூட்டணி அமைவது உறுதி செய்யப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமியை சந்தித்த சில நாட்களில் செங்கோட்டையனை அமித்ஷா சந்தித்தது ஏன்? என்பது தொடர்பாகவும் பல்வேறு யூகங்கள் கொடி கட்டி பறந்தன. குறிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடனான கூட்டணிக்கு அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டை போட்டால், செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவை கட்டமைப்பது குறித்தும் கூட விவாதித்து இருக்கலாம் என்று கூட அரசியல் விமர்சகர்கள் கூறினர்.

அது மட்டும் இன்றி, கட்சி ஒருங்கிணைப்பை விரும்பும் செங்கோட்டையனிடம் அதிமுக ஒருங்கிணைப்பை தீவிரப்படுத்துமாறு பாஜக அறிவுறுத்தி இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ பன்னீர் செல்வத்தை மீண்டும் சேர்க்க கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். ஆனால், அனைவரும் ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் கூறி வருகிறார்கள்.
உற்று கவனிக்கும் அதிமுக
இத்தகைய சூழலில் தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கேசி பழனிசாமி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதிமுக ஒருங்கிணைந்தால் வெற்றிக்கு வாய்ப்பு என்று தொடர்ந்து கேசி பழனிசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தி வரக்கூடிய சூழலில் கேசி பழனிசாமி - நிர்மலா சீதாராமன் இடையேயான சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதிமுகவும் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிகிறது. முதலில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது கேசி பழனிசாமியும் சந்தித்து இருப்பது அதிமுக வட்டாரத்திலும் பரபரப்பையும் பல்வேறு யூகங்களுக்கும் வித்திட்டுள்ளது.












Click it and Unblock the Notifications