ஜெயலலிதா முடிவுக்கே எதிர்ப்பா? எடப்பாடி இப்படி செய்திருக்க கூடாது.. கொந்தளித்த பாஜக மைத்ரேயன்!
சென்னை: ஜெயலலிதா ஆதரித்த பொது சிவில் சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வருத்தம் அளிக்கிறது என அண்மையில் பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.பி மைத்ரேயன் விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று அண்மையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தினார். மத்திய பாஜக அரசு கொண்டுவரும் பொது சிவில் சட்டத்தை அதன் கூட்டணி கட்சிகளில் ஒன்றான அதிமுக கடுமையாக எதிர்த்துள்ளது.

பொது சிவில் சட்டத்துக்கு அதிமுக எதிராகவே உள்ளது. 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் குறித்த எங்களது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளோம். பொது சிவில் சட்டத்தை எந்த வடிவத்திலும் நிறைவேற்றக் கூடாது எனத் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி. பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுகவின் இந்த முடிவு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், அதிமுக 20 ஆண்டுகளுக்கு முன்னர் பொது சிவில் சட்டத்தை ஆதரித்தது. கடந்த 2003ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, நாடு முழுவதிலும் ஒரே மாதியான சிவில் சட்டம் கொண்டு வரப்படுவது அவசியமானது. அதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இந்த சட்டம் அவசியமான ஒன்று. இதனால் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்தார் ஜெயலலிதா.

ஆனால், இப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்ற எம்.பியாக இருந்த மைத்ரேயன், தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். அவர் எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மைத்ரேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் குற்றவியல் சட்டங்களும், தண்டனைகளும் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால், திருமணம், விவாகரத்து, வாரிசு, சொத்துப் பகிர்வு, தத்தெடுப்பு போன்ற உரிமையியல் சட்டங்கள் சாதி, மத, இன, கலாச்சாரத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு, திருமணம், விவாகரத்து, வாரிசு, சொத்துப் பகிர்வு, தத்தெடுப்பு உள்ளிட்ட பல விவகாரங்களுக்கான பொதுவாக சட்டம்தான் பொது சிவில் சட்டம். இந்த சட்டம் குறித்து அம்பேத்கர் வடிவமைத்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44 வது பிரிவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், 73 ஆண்டுகள் கடந்தும், பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாஜகவின் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இது வாக்குறுதியாக இடம்பெற்றுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டால், இஸ்லாமியப் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்பதை மறந்து, முதல்வர் ஸ்டாலினும், திமுக கூட்டணிக் கட்சிகளும் வாக்குவங்கி அரசியலை மனதில் வைத்து பேசுவது கண்டனத்துக்குரியது.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வருத்தம் அளிக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக கடந்த 2003ஆம் ஆண்டே குரல் கொடுத்தார். பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications