பொன்முடியை வீடு தேடிச் சென்று சந்தித்த மு.க.அழகிரி! கூடவே முரசொலி செல்வம், தமிழரசு என பெரிய படை!
சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.
அவரைத் தொடர்ந்து முரசொலி செல்வமும், முதலமைச்சர் ஸ்டாலினின் மற்றொரு சகோதரருமான தமிழரசும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடி இல்லத்துக்கு நேரில் சென்று அவரிடம் பேசினர். பொன்முடியை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று காலை சந்தித்து பேசிய நிலையில் இன்று இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதனிடையே பொன்முடி வீட்டிலிருந்து மு.க.அழகிரி, மு.க.தமிழரசு, முரசொலி செல்வம் ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் வெளியே வந்ததும் அவர்கள் மூவரும் ஒரே காரில் அங்கிருந்து புறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பொன்முடி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் அழகிரி பேசியிருக்கக் கூடும் எனத் தெரிகிறது. மேலும், கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதியிடம் சொல்லி கனிமவளத்துறையை பொன்முடிக்கு பெற்றுக்கொடுத்ததே மு.க.அழகிரி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இடையே தனது சகோதரர் முக ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பொன்முடியுடனான நட்பை துண்டித்திருந்தார் முக அழகிரி.
இப்போது பொன்முடிக்கு பேரிடரான நேரம் என்பதால் மனம் கேட்காமல் ஓடி வந்து நேரில் பார்த்து ஆறுதல் சொல்லிச் செல்கிறார் முக அழகிரி. அழகிரி உள்ளே சென்றதும் பொன்முடி வீட்டு கேட் உடனடியாக மூடப்பட்டது. விழுப்புரத்திலிருந்து வந்திருக்கும் கட்சிக்காரர்கள் உட்பட யாரையும் பொன்முடி சந்திக்கவில்லை. அவரது மகன் அசோக் சிகாமணி தான் அவர்களை சந்திக்கிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொன்முடி கடந்த 2 நாட்களாக தனது வழக்கறிஞர்கள் குழுவுடன் இரவு பகலாக ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இந்த வாரம் முழுவதும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை என்பதால் ஒரு வாரம் கழித்து பொன்முடி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications