கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்! யார் இந்த இனயத்துல்லா? அப்படி என்ன செய்துவிட்டார் இவர்?
முதல்வரிடம் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் பெற்ற இனயத்துல்லாவின் பின்னணி
சென்னை: குடியரசுத் தினத்தையொட்டி கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்தை கோவையை சேர்ந்த இனயத்துல்லா என்பவருக்கு வழங்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்தை பெறக் கூடிய வகையில் இனயத்துல்லா அப்படி என்ன செய்து விட்டார், அவரது பின்னணி என்பது பற்றி பார்க்கலாம்.
இது தொடர்பாக அரசு விடுத்துள்ள குறிபின் விவரம் வருமாறு;

கோட்டை அமீர்
மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோட்டை அமீர் அவர்களின் பெயரால் 'கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்' என்ற பதக்கத்தினை தோற்றுவித்து, ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்காக சிறந்த சேவையாற்றி வரும் ஒருவருக்கு அப்பதக்கத்தை வழங்கி வருகிறது. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு பதக்கமும், ரூ.25,000/-ற்கான கேட்புக் காசோலையும் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

மத நல்லிணக்கத்திற்காக
இவ்வாண்டு (2023) 'கோட்டைஅமீர் மத நல்லிணக்கப் பதக்கம்'கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.எம்.ஏ.இனயத்துல்லா அவர்களுக்கு வழங்கப்படுகிறது. திரு. எம்.ஏ. இனயத்துல்லா த/பெ. திரு. எம்.வி. அப்துல் சுபான் ராவுத்தர் என்பவர் கோயம்புத்தூர் மாவட்டம் தெற்கு உக்கடம், கோட்டைமேடு, S.S.கோவில் தெரு, கதவு 24எண்.40 என்ற முகவரியில் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் பகுதியில் மத நல்லிணக்கத்திற்காகப் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார்.

எம்.ஏ. இனயத்துல்லா
எம்.ஏ. இனயத்துல்லா என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக அனைத்து சமய மக்களிடமும் நட்புடன் பழகி வருவதுடன் கோயம்புத்தூர் பகுதியில் ஏற்பட்ட பல்வேறு பதட்டமான சூழ்நிலைகளின்போது காவல் துறையுடன் இணைந்து பொது அமைதி மற்றும் மத நல்லிணக்கம் பராமரிக்கப்பட பணியாற்றியுள்ளார். கோவை மாவட்டசுன்னத் ஜமாத் கூட்டமைப்பின் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மத வேறுபாடின்றி கல்வி நிதி உதவி வழங்கி வந்துள்ளதுடன் மனிதநேயம், மத ஒற்றுமை மற்றும் கல்வி மேம்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

கோயம்புத்தூர் கோட்டைமேடு
கோயம்புத்தூர் கோட்டைமேடு பகுதியில் ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லீம் இளைஞர்களால் நடத்தப்படும் மத நல்லிணக்க விழாக்களில் கலந்து கொண்டு, இந்து, கிறித்துவ மத குருக்களோடு இணைந்து மத நல்லிணக்கத்தை உருவாக்க பணியாற்றி வருகிறார். மேலும், கடந்த 23.10.2022 அன்று கோயம்புத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடித்த சம்பவத்தின் தொடர்ச்சியாக கடந்த 03.11.2022 அன்று திரு.எம்.ஏ.இனயத்துல்லா அனைத்து சுன்னத் ஜமாத் அமைப்பு நிர்வாகிகளுடன் கோட்டைஈஸ்வரன் கோவிலுக்கு சென்று கோவில் நிர்வாகிகள் மற்றும் அலுவலர்களை சந்தித்து, அச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன் கோயம்புத்தூர் நகரில் இந்து மற்றும் முஸ்லீம் சமூகத்தினரிடையே சகோதரத்துவம் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருவதற்கு ஒத்துழைப்பு நல்குவதாக தெரிவித்தனர்.

மத நல்லிணக்கப் பதக்கம்
கோயம்புத்தூர் பகுதியில் மதநல்லிணக்கம் மற்றும் இந்து முஸ்லீம் சமூகத்தினரிடையே ஒற்றுமை மற்றும் அமைதி நிலவவும் அவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இவ்வாறு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு வரும் திரு.எம்.ஏ.இனயத்துல்லா அவர்களைப் பாராட்டும் வகையில், இவருக்கு 2023-ஆம் ஆண்டிற்கான 'கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்' வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications