இலவச மின்சாரம்.. மீட்டரே வேண்டாம்.. ஃப்ரீயாகவே நவீன பம்ப்செட்கள்.. திமுக அறிவிப்பால் விவசாயிகள் குஷி
சென்னை: தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக, மின்வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது... ஆனாலும் தமிழக அரசும் நிதி நெருக்கடியில் உள்ளது.. அதனால்தான், ஒவ்வொரு வருடமும் அரசு அனுமதிக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப, விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) மூலம் விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது..
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 1.5 லட்சம் புதிய இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதும் தட்கல் போன்ற சிறப்புத் திட்டங்கள் மூலம் முன்னுரிமை அடிப்படையில் புதிய இணைப்புகள் வழங்கப்படுகின்றன.. இதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாயை மின்சார வாரியத்திற்கு மானியமாக வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கிறது..

இலவச மின்சாரம்
நவீன மற்றும் எரிசக்தி சேமிப்பு திறன் கொண்ட பம்ப்செட்டுகளை ஊக்குவிக்க தமிழக அரசு பல்வேறு மானியத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. குறிப்பாக, வேளாண் பொறியியல் துறை மூலம் பழைய பம்ப்செட்டுகளை மாற்றி புதிய மின் சிக்கன பம்ப்செட்டுகளை அமைக்க 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக 15,000 ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.
மேலும், பிரதமர் கிசான் ஊர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மஹாபியான் (PM-KUSUM) திட்டத்தின் கீழ், 7.5 HP வரையிலான சூரிய சக்தியால் இயங்கும் சோலார் பம்ப்செட்டுகளை அமைக்க விவசாயிகளுக்கு 70 சதவீதம் வரை (மத்திய மற்றும் மாநில அரசின் பங்கு) மானியம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது..
மின் மோட்டார்கள்
அதுமட்டுமல்ல, நீர்நிலைகளில் வறட்சி ஏற்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் இல்லாத காலங்களில் பயிர்களுக்கு மின் மோட்டார்கள் மூலமே நீர் இறைத்து விவசாயிகள் பாய்ச்சுகிறார்கள். எனவே, இலவச மின்சார திட்டம் என்பது விவசாயிகளின வாழ்வாதாரத்துக்கு அவசியமானதாக அமைந்து வருகிறது. இதற்காகவே ஒவ்வொரு மின் இணைப்புக்கும் வருடத்துக்கு ரூ.30,000 மின்சார துறைக்கு, வேளாண்துறை வழங்கி வருகிறது.
ஆனாலும், இடங்களில் பழைய மற்றும் அதிக மின்சாரத்தை உறிஞ்சும் மோட்டார்கள் பயன்பாட்டில் உள்ளன.. இதனைச் சரிசெய்யும் விதமாக, எந்த வித மின் மீட்டர்களும் பொருத்தப்படாத, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய பம்ப்செட்டுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க திமுக தற்போது வாக்குறுதி அளித்துள்ளது..
நவீன பம்ப்செட்கள்
இந்த நவீன பம்ப்செட்கள் குறைந்த மின்சாரத்தில் அதிக நீரை இறைக்கும் திறன் கொண்டவை என்பதால், மின் விரயம் பெருமளவு தவிர்க்கப்படும்.. மேலும், மீட்டர்கள் பொருத்தப்படாது என்பதால், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான நீரை எந்தவிதமான கட்டுப்பாடுமின்றி தடையின்றிப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.. இது விவசாயிகளின் மின்சாரக் கட்டண சுமையை முழுமையாக நீக்குவதுடன், சாகுபடிப் பணிகளை எந்தவிதமான தடங்கலுமின்றி மேற்கொள்ள வழிவகுக்கும்..
இந்த நவீன பம்ப்செட்கள் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு கூடுதல் வசதிகளும் நன்மைகளும் கிடைக்கின்றன.. பழைய மோட்டார்கள் அடிக்கடி ரிப்பேராகி விவசாயிகளுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும் நிலையில், இந்த நவீன பம்ப்செட்கள் நீண்ட காலம் உழைக்கக்கூடியவை மற்றும் பராமரிப்பு செலவு மிகக் குறைவானவை..
முக்கியமாக லோ வோல்டேஜ் ஏற்பட்டுவிட்டாலும், பாதிப்பின்றி இயங்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளதால், பயிர்களுக்கு தேவையான நீர் பாசனம் சரியான நேரத்தில் கிடைப்பது உறுதி செய்யப்படும்.. இதனால் விவசாயிகளின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதுடன், அவர்களின் பொருளாதார நிலையும் மேம்பட வாய்ப்புள்ளது.. அதனால் திமுகவின் தற்போதைய தேர்தல் வாக்குறுதி விவசாயிகளின் கவனத்தை வெகுவாகவே ஈர்த்துள்ளது..!!












Click it and Unblock the Notifications