இலவச அரசுப் பேருந்து பயணம்: விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக் தமிழகம் முழுக்க வேலை செய்யுமா? பலன் தருமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலவச அரசுப் பேருந்து பயணத் திட்டத்தில் புதிய பாய்ச்சலை காட்ட துடிக்கிறது தவெக. தற்போது நடைமுறையிலுள்ள திமுகவின் திட்டத்தைக் காட்டிலும், இன்னும் ஒருபடி மேலே போய் அனைத்துப் பேருந்துகளையும் இலவசமாக்குவோம் என்ற விஜய்யின் தேர்தல் வாக்குறுதியானது, தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஆனால், இந்த அதிரடி வாக்குறுதி நடைமுறைக்குச் சாத்தியமா அல்லது வெறும் தேர்தல் காலத்து அரசியல் கணக்கா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

தமிழக அரசியல் களத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவித்திருக்கும் அந்த 'அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம்' என்கிற அதிரடி வாக்குறுதி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Free Government Bus Travel

அரசு பேருந்து இலவச பயணம்

திமுக அரசின் விடியல் பயணம் திட்டத்திற்குப் போட்டியாக விஜய் இதை அறிவித்திருந்தாலும், இது வெறும் அறிவிப்போடு நின்றுவிடுமா அல்லது நிஜமாகவே நடக்குமா என்கிற விவாதம் ஊர் முழுக்க ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்போதைய நிலவரப்படி, சாதாரண ஒயிட் போர்டு பேருந்துகளில் மட்டும்தான் பெண்களுக்கு இலவசம். ஆனால் விஜய் சொல்வதோ, ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குச் செல்லும் எக்ஸ்பிரஸ், ஏசி பஸ் என அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்குக் கட்டணம் கிடையாது என்பதுதான்.

இலவச பஸ் பேருந்து பயணம்

அதாவது, திமுகவின் பிங்க் பஸ்களில் பெண்கள் மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதாகவும், அந்த பேருந்துகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்றும் எழும் புகார்களை விஜய் சரியாகக் கையில் எடுத்திருக்கிறார். பெண்களின் வாக்குகளை தன் பக்கம் இழுக்க இது ஒரு வலுவான அரசியல் அஸ்திரம் என்று, இந்த வாக்குறுதியை அறிவித்தபோதே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியிருந்தனர். விஜய் போட்ட அந்த மாஸ்டர் ஸ்ட்ரோக், நல்ல பலனையும் பெண்கள் தரப்பிலிருந்து ரிசல்ட் மூலம் தெரியவந்துள்ளது.

ஆனால், இந்த அறிவிப்பின் பின்னாடி இருக்கிற பணச்சுமையை அவ்வளவு சீக்கிரம் நம்மால புறக்கணிக்க முடியாது. ஏற்கனவே நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் போக்குவரத்துத் துறைக்கு, இது ஒரு பெரிய இமாலய சுமை என்றே சொல்லலாம்.

நீண்ட தூரம் இலவசம் சாத்தியமா

நீண்ட தூர எக்ஸ்பிரஸ் பேருந்துகளிலிருந்து கிடைக்கும் வருமானம்தான் அந்தத் துறையை ஓரளவாவது முட்டுக் கொடுத்து தாங்கிக்கொண்டிருக்கிறது. அதையும் மொத்தமாக இலவசமாக்கினால், ஒவ்வொரு மாசமும் அரசு பல நூறு கோடிகளைத் தூக்கிக் கொடுக்க வேண்டியிருக்கும். இது போக்குவரத்துத் துறையின் முதுகெலும்பையே ஆட்டம் காண வைக்கும் ஒரு பெரிய முடிவு என்றே சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இதில் இன்னொரு பெரிய கேள்வியும் உள்ளது.. ஒரு பக்கம் மதுவிலக்கு கொண்டு வருவோம்னு சொல்ற விஜய், இன்னொரு பக்கம் பெரிய வருமானம் வர்ற எக்ஸ்பிரஸ் பஸ்களையும் இலவசமாக்குவேன் என்கிறார். அதாவது வருமானம் வரும் வழியை அடைச்சுட்டு, செலவு செய்யும் வழியைத் திறந்து விட்டால் மாநிலத்தோட பொருளாதாரம் என்னவாகும்?

50 சதவீத இடங்கள் பெண்களுக்கு

ஒருவேளை பஸ்களில் 50 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்குவது போன்ற சில சமரசங்களைச் செய்தால்தான் இது ஓரளவாவது சாத்தியப்படும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

வாக்கு அரசியலில் இது நன்றாக வேலை செய்திருந்தாலும், நிஜமாகவே இதை செயல்படுத்தும்போது நிதி மேலாண்மை ஒரு பூதாகரமான சவாலாக வந்து நிற்கும். விஜய்யின் இந்த "வெற்றிப் பயணம்" நிஜமாகவே பெண்களுக்கு வெற்றியைத் தருமா அல்லது வெறும் தேர்தல் காலத்து மேடைப் பேச்சோடு நின்றுவிடுமா?
சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை இலவச பயணம் சாத்தியமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+