தமிழக அரசு லேப்டாப்புடன்.. இலவச AI வசதியும் இருக்காம்.. உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!
சென்னை: புத்தாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் கல்லூரிக்கு வந்தவுடன் லேப்டாப்கள் வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். லேப்டாப்களுடன் Preplexity ரொ AI வசதி 6 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், கணினி நிபுணர் எடப்பாடி பழனிசாமி கதை விடுவதாகவும் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இலவச லேப்டாப் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. இதன்பின் கொரோனா பரவல் காரணமாக இலவச லேப்டாப் திட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் இலவச லேப்டாப் திட்டம் மீண்டும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன.

டெண்டர் பணிகள் முடிவடைந்து லேப்டாப் வழங்குவதற்கான பணிகளை திமுக முடுக்கிவிட்டுள்ளது. இதனை தேர்தல் நெருங்குவதால் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பாக ஜனவரி முதல் லேப்டாப் வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின், லேப்டாப் வழங்கும் திட்டத்தை எப்படியாவது சீர்குலைத்துவிட முடியாதா என்று எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் கனவு ஒருபோதும் பலிக்காது. தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இப்போது ஏன் லேப்டாப் கொடுக்கிறீர்கள் என்ற கேள்வியை திடீர் 'கணினி நிபுணர்' எடப்பாடி பழனிசாமி அவர்கள் எழுப்பி இருக்கிறார்.
இன்னும் சில வாரங்களில் மாணவர்கள் கரங்களுக்கு லேப்டாப் சென்று சேரவுள்ள நிலையில், இந்தக் கேள்வியை எதிர்க்கட்சித்தலைவர் எழுப்பியுள்ள நோக்கம் என்ன என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், மாணவர்களுக்கும் நன்றாக தெரியும். தன் அரசியல் லாபத்திற்காக, கல்லூரி மாணவர்கள் பயன்பெற இருக்கும் ஒரு திட்டத்துக்கு எதிராக அவதூறுகளை பரப்ப வேண்டும் என்பதே அவருடைய எண்ணம்.
தமிழ்நாட்டு மாணவர்கள் படித்து முன்னேறிவிடக் கூடாது என்ற பாசிச பாஜகவின் எண்ணத்தை, அவர்களின் வழிகாட்டுதலின்படி எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே அறநிலையத்துறை நிதியில் கல்லூரி ஆரம்பிக்கலாமா என்று கேட்டு, தமிழ்நாட்டு மக்களிடமும் மாணவர்களிடமும் வாங்கிக்கட்டிக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, இப்போது, "கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஆண்டின் நடுவில் ஏன் லேப்டாப் கொடுக்கிறீர்கள்," என்கிறார்.
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கிடைப்பதை வரவேற்கும் பரந்த மனப்பான்மை கூட இல்லாத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்தத் திட்டத்தை எப்படியாவது சீர்குலைத்துவிட முடியாதா என்று முயற்சிக்கிறார். இதை எடப்பாடி பழனிசாமி அல்ல, அவர்களது டெல்லி ஓனர்கள் நினைத்தாலும் தடுக்க முடியாது. லேப்டாப் ஏதோ தேர்தலுக்காக திடீரென கொடுக்கப்படுகிறது போன்ற ஒரு பொய் பிம்பத்தை ஏற்படுத்த எடப்பாடி பழனிச்சாமி முயல்கிறார்.
2025-2026 நிதிநிலை கூட்டத்தொடரின் போதே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. அதாவது, "20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்" என்று தெளிவாக நிதிநிலை அறிக்கையில் உள்ளது. 'கணினி நிபுணர்' எடப்பாடி பழனிசாமி அந்த நிதிநிலை அறிக்கை அவருக்கும் வழங்கப்பட்டு இருந்தது. எதிர்க்கட்சித்தலைவர் அதை படித்துப் பார்த்தாரா, இல்லை, வழக்கம் போல வீட்டிலேயே வைத்துவிட்டாரா என்பது அவருக்கே வெளிச்சம்.
நான் இதுவரை எடப்பாடி பழனிசாமியை சேக்கிழார் எழுதிய கம்ப இராமாயணத்தைப் படித்த தமிழ்ப் புலவர் என்று மட்டும்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் தமிழ்ப் புலவர் மட்டுமல்ல. அவர் சிறந்த Computer Expert என்பதும் இப்போது தான் தெரிந்தது. அரசின் லேப்டாப் மாணவர்களின் கரங்களுக்கு இனி தான் சென்ற சேர இருக்கிறது. அதற்குள்ளாக, நம்முடைய 'கணினி நிபுணர்' எடப்பாடி பழனிசாமி, லேப்டாப்பில் தொழில்நுட்பம் போதவில்லை - Configuration சரி இல்லை என்று கதைவிடுகிறார்.
கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவுக்கு (AI) ஏற்றவாறு, அதிவேக Processor மற்றும் நீண்டநேரம் தாங்கும் Battery என அத்தனை நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த லேப்டாப் இருக்கிறது. அமெரிக்காவின் Perplexity AI நிறுவனத்தோடு எல்காட் நிறுவனம் ஒரு சிறப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அதன்படி 6 மாத காலத்திற்கு Preplexity Pro AI வசதி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications