கப்பல் இயக்கி...செக்கிழுத்து...கைகளில் வழிந்த ரத்தம்...மறக்க முடியுமா வஉசியை!!
சென்னை: செக்கிழுத்த செம்மல், ஆங்கிலேயர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பியவர் வ. உ. சிதம்பரம் பிள்ளை. 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவராக திகழ்ந்தவர்.
தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவையை துவக்கி வைத்தவர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக துணிந்து தனது கருத்துக்களை கூறி வந்ததால், இவரது 'பாரிஸ்டர் பட்டம்' பறிக்கப்பட்டது. தமிழ்நாட்டில்'கப்பலோட்டிய தமிழன்' என்று அறியப்பட்டவர்.
தமிழ்நாட்டில் ஓட்டப்பிடாரத்தில் 1872 செப்டம்பர் 5ஆம் தேதி பிறந்தார். தனது தந்தை உலகநாதன் பிள்ளையைப் போன்றே இவரும் வழக்கறிஞருக்கு படித்தார். வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார்.

பாரதி தூண்டுதல்
1905ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைத்தூக்கிய நேரம் அது. ஆங்கிலேயர்களின் ஆதிக்க வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர் ஆகியோர் போராடி வந்தனர். சுப்ரமணிய சிவா மற்றும் சுப்ரமணிய பாரதி இருவரும் சுதேசி இயக்கத்தில் இணைந்து போராடி வந்தனர். இவர்களது செயலால் ஈர்க்கப்பட்டு காங்கிரசில் சேர்ந்தார். அவர்கள் சென்னை மாகாணத்திலிருந்து போராடினார்கள். இதுவே, வ.உ.சியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேரவும் தூண்டியது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சேலம் மாவட்ட அமர்வுக்கு தலைமை பொறுப்பு ஏற்றார்.

தூத்துக்குடி-கொழும்பு
கப்பல் போக்குவரத்தில் ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தை முறியடிக்க 1906ல், சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை துவக்கினார். இதற்கு இரண்டு கப்பல்களை வாங்கினார். ஆங்கிலேயர்களின் கோபத்தை தாண்டி தூத்துக்குடி-கொழும்பு இடையே கப்பல் வர்த்தகத்தை துவக்கினார். பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்துக்கு போட்டியாக சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் உருவெடுத்தது. ஈடுகொடுக்க கட்டணத்தை ஆங்கிலேயே நிறுவனம் குறைத்தது. இறுதியில் பல்வேறு இலவச அறிவிப்புகளால் ஆங்கிலேயர்களின் கப்பல் நிறுவனத்துடன் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் போட்டியிட முடியவில்லை.

நிதி சேகரிப்பு
சுதேசி இயக்கத்தை விரிவாக்கம் மற்றும் ஆங்கிலேய அரசாங்கத்தின் ஆதிக்கம் குறித்து இந்தியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு முயற்சித்தார். இதனால் இவர் மீது 1908 ஆம் ஆண்டில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர். இவரை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கு இந்தியர்கள் நிதி சேகரித்தனர்.

கோவை சிறை
வ.உ.சியின் பாதுகாப்புக்காக தென் ஆப்ரிக்காவிலிருந்து மகாத்மா காந்தியும் நிதி வசூல் செய்து அனுப்பினார். கோயம்புத்தூரில் இருக்கும் மத்திய சிறையில் ஜூலை 9, 1908 முதல் டிசம்பர் 1, 1910 வரை வஉசி அடைக்கப்பட்டு இருந்தார். இவருக்கு ஆங்கிலேய அரசாங்கம் ஆயுள் தண்டனை விதித்தது. உடல்நலம் குன்றினார்.

சிறையில் வஉசி
சிறையில் வ.உ.சி. கடுமையான வேலைகளைச் செய்தார். சணல் நூற்றார். இதனால் அவரது உள்ளங்கைகளில் இருந்து ரத்தம் கசிந்தது. கல் உடைத்தார். மாடுகள் இழுக்கும் செக்கை இழுத்தார். இதனால் அவரது உடல்நலம் மிகவும் மோசமானது. இதனால், சிறையில் இருந்து 1912 டிசம்பர் 12ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். பாரிஸ்டர் பட்டம் பறிக்கப்பட்டதால், இவறால் சிறையில் இருந்து வெளியே வந்து வழக்கறிஞர் தொழிலும் செய்ய முடியவில்லை.

மனைவி குழந்தைகள்
1911க்குப் பின்னர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்னையில் குடியேறினார். பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளின் தலைவராக பொறுப்பு ஏற்றார். 1920ல், இந்திய தேசிய காங்கிரஸின் கொல்கத்தாவுக்கு பிரிவுக்கு தலைவரானார்.

இரண்டாவது திருமணம்
1895ல் வள்ளியம்மையை மணமுடித்தார். வள்ளியம்மை 1901ல் இறந்தார். இதையடுத்து, சில ஆண்டுகளுக்குப் பின்னர் மீனாட்சி அம்மையாரை திருமணம் செய்தார். அவர்களுக்கு நான்கு மகன்களும், நான்கு மகள்களும் இருந்தனர். இவரது வாரிசுகள் இன்றும் உள்ளனர்.

கப்பலோட்டிய தமிழன்
தூத்துக்குடியிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில், நவம்பர் 18, 1936ல் வஉசியின் உயிர் பிரிந்தது. கப்பலோட்டிய தமிழன் என்ற தமிழ் படம் இவரது கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. சிவாஜி கணேசன் இதில் வஉசி ஆகவே வாழ்ந்து காட்டி இருப்பார்.












Click it and Unblock the Notifications