கனவெல்லாம் பலிக்குதே.. கண் முன்னே நடக்குதே.. வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில்... நடந்திடுச்சு
சென்னை: சென்னை வேளச்சேரி- பரங்கிமலை இடையே ரூ.730 கோடி மதிப்பீட்டில் நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் வழித்தடத்தில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் 17 வருடங்கள் கழித்து நிறைவடைந்தது. அந்த வழித்தடத்தை மின்மயமாக்கும் உள்ளிட்ட அனைத்து பணிகளும் கிட்டத்தட்ட நிறைவு பெற்றறது. இதனால் பல வருட தாமதத்திற்குப் பிறகு, வேளச்சேரிக்கும் பரங்கிமலை (மவுண்ட்டுக்கும்) இடையிலான நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் வழித்தடம் இறுதியாக டிசம்பர் மாதத்தில் செயல்பாட்டுக்கு வர போகிறது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு பகுதி மக்களின் கனவு திட்டம் என்றால் வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் தான். அந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்திருந்தால், இந்நேரம் கோடிக்கணக்கான மக்கள் பல கோடி பணத்தை சேமித்து இருப்பார்கள். எளிதாக ஐடி நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று வந்திருப்பார்கள். பலர் ரயிலில் வேலைக்கு சென்று வர தொடங்கியிருப்பார்கள் என்பதால், போக்குவரத்து நெரிசலும் பெரிய அளவில் குறைந்திருக்கும்.

ஐந்து கிமீ நீட்டிப்பு
சென்னையின் எந்த பகுதி மக்களும் மெட்ரோவில் ஏறி அப்படி பரங்கிமலை வந்து, பறக்கும் ரயிலில் ஏறி ஐடி நிறுவனங்களில் வேலைக்கு சென்று வர முடிந்திருக்கும். ஆனால் வேளச்சேரி பரங்கிமலை இடையேயான ஐந்து கிமீ இணைப்பு பல வருடங்களாக கொண்டுவரப்படவில்லை..
2013ம் ஆண்டு முடிந்திருக்க வேண்டிய திட்டம்
உண்மையில் இந்த திட்டம் நிலப்பிரச்சனை ஏற்படாமல் இருந்திருந்தால், சொல்ல வேண்டும். 2013ம்ஆண்டே முடிந்திருந்திருக்கும். சென்னையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும். ஏனெனில் தற்போது வேளச்சேரியில் இருந்து தாம்பரம் செல்ல பூங்கா அல்லது கோட்டை சென்று மாற வேண்டிய நிலை உள்ளது. இதனால் நீண்ட நேரம் ஆகிறது. வேளச்சேரி, பெருங்குடி, தரமணியைச் சுற்றித்தான் சென்னையின் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் உள்ளன.
2008ம் ஆண்டு தொடங்கியது
சென்னையில் ஓஎம்ஆர் , ஈசிஆர், அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி போன்ற சென்னையின் மையப்பகுதிகளுக்கு புறநகர் பகுதி மக்கள் செல்ல, பரங்கிமலை வேளச்சேரி ரயில் வழித்தடம் வேண்டும். இந்த வழித்தடப்பணிகள் 495 கோடியில் 2008ம் ஆண்டு தொடங்கியது. 90 சதவீத பணிகள் வெறும் 3 ஆண்டுகளில் நடந்து முடிந்தது. ஆனால் ஆதாம்பாக்கம் தில்லை கங்கா நகர் பகுதியில் வெறும் 500 மீட்டர் தூரத்திற்கு நிலத்தை கையகப்படுத்துவதில் பிரச்சனை பல வருடங்களாக இழுத்தது. இதனால் பல ஆண்டுகளாக பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனிடையே உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்னரே பரங்கிமலை வேளச்சேரி ரயில் வழித்தட பணி ஆரம்பிக்கப்பட்டது.
730 கோடி தேவைப்பட்டது
ஆனால் பல வருட தாமதம் காரணமாக தெற்கு ரயில்வே திட்டத்திற்கான மதிப்பீடு அதிகமாகி விட்டதாகவும், பணிகளை தொடர முடியாத நிலை இருப்பதாகவும் கூறியது. 495 கோடியாக இருந்த திட்டம் காலப்போக்கில் 730 கோடியாக உயர்ந்தது. அதன்பிறகு ஒரு வழியாக ரயில்வே முழு தொகை தந்தது. தொடர்ந்து ஆதம்பாக்கம் பகுதியில் விறுவிறுப்பாக பணிகள் நடந்தன. மிக வேகமாக பணிகள் நடந்ததால் அந்த பகுதியிலும் பணிகள் நடந்த முடிந்தது. அதன்படி வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் பறக்கும் ரயில் பாதை அமைக்கப்பட்டுவிட்டது. மின்சாரம் தரும் பணிகளும் அண்மையில் முடிந்தது.
சரக்கு ரயில் சோதனை ஓட்டம்
இதையடுத்து வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடத்தில் சரக்கு ரயில் பெட்டிகளை கொண்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. நேற்று நடந்த சோதனை ஓட்டம் 5 பெட்டிகள் கொண்ட முழுநீள சரக்கு ரயில் மூலம் மேற்கொள்ளப்பட்டது. வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை வரை, ஒவ்வொரு நிலையத்திலும் நிறுத்தி ரயிலின் இயக்கம், பிரேக் சிஸ்டம், மின் இணைப்புகள், சிக்னல் இணைப்புகள் ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. சோதனை ஓட்டம் எந்தவித தடங்கலும் இல்லாமல் நடைபெற்றுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிசம்பரில் வேளச்சேரி பரங்கிமலை ரயில் ஓடும்
மின்சார இயக்கம், சிக்னல் அமைப்பு, பாதுகாப்பு சோதனை ஆகியவை அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. எனவே அடுத்து பயணிகள் ரயில்களைவைத்து சோதனை செய்வார்கள். அந்த சோதனைக்கு பின்னர் பாதுகாப்பு பரிசோதனை முடிந்த பின்னர், ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளிப்பார். அதன்பிறகு ரயில்கள் வேளச்சேரி பரங்கிமலை இடையே ஓட தொடங்கிவிடும். இந்த ரயில்கள் வரும் டிசம்பர் முதல் ஓடத் தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ரயில்வே அதிகாரிகள் விளக்கம்
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் மேலும் கூறுகையில், பறக்கும் ரயில் திட்டத்தில் 2-ம் கட்டமாக வேளச்சேரி முதல் ஆதம்பாக்கம் வரை ரூ.405 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான சுமார் 6 கிலோ மீட்டருக்கு திட்டப்பணிகள் முடியும் நிலையில் உள்ளன. அதனையடுத்து அத்திட்ட ரயில் பாதை எந்த அளவுக்கு சுமைகளைத் தாங்குகிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு ரயில் என்ஜின் மற்றும் 5 பெட்டிகளை இணைத்து அந்த ரயில் பாதையில் வெள்ளோட்ட பரிசோதனை இன்று (நேற்று) மாலை நடத்தினோம். இது தண்டவாள தாங்கு திறனை அறியும் வகையிலான பரிசோதனையாகும். ஆனால், ரயில் பாதையில் ரயிலை இயக்குவதற்கான சோதனை என கூறுவது சரியாக இருக்காது. அதேநேரம் ரயில் பாதையின் பாதுகாப்பு, செயல்பாடுக்கு அது தயாராக உள்ளதா? என்பதை அறிவதற்கான ஆரம்ப கட்ட பரிசோதனையாக இதனை கருதலாம் என்று கூறினார்கள்.












Click it and Unblock the Notifications