Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

’திராவிட நாடு’ முதல் ‘நம்நாடு’ வரை.. முரசொலி To ‘இளஞ்சூரியன்’ வரை.. திமுகவை வளர்த்த பத்திரிகைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவை ஆதரித்தும் திராவிட இயக்கத்தை ஆதரித்தும் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான பத்திரிகைகள் வெளிவந்துள்ளன. அதில் முக்கியமான பத்திரிகைகள் என்ன? அதன் பங்களிப்பு என்ன என்பதைப் பார்ப்போம்.

திமுக தனது பவள விழாவை இன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றது. அதாவது 1949 அண்ணாதுரையால் தொடங்கப்பட்ட இந்தக் கட்சி 75 ஆண்டுகள் இந்திய அரசியல் களத்தில் இடைவெளி இல்லாமல் இயங்கி வருகிறது. இந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான உதயசூரியனை ஒருமுறை கூட இந்தக் கட்சி இதுவரை இழந்தது இல்லை. திமுக உருவான காலகட்டத்திலிருந்த பல தேசிய கட்சிகளே இன்று காணாமல் போய்விட்டன. அந்தளவுக்குப் பழமையான கட்சி திமுக.

dmk dmk pavala vizha

அண்ணாதுரை தொடங்கி மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் என்று இந்த இயக்கம் தளர்நடை இல்லாமல் வேக நடைப் போட்டு வருவது பெரிய சாதனைதான். இந்தக் கட்சியிலிருந்து சம்பத், எம்.ஜிஆர்., சிவாஜி, வைகோ எனப் பலர் பிரிந்து சென்று புதிய கட்சியைத் தொடங்கிய பிறகும் வலு இழக்காமல் இது இன்றும் உயிர்ப்புடன் உள்ளது.

இன்றைய இணையக் கால உலகத்திற்கும் ஈடு கொடுத்து திமுக தலைமுறை இடைவெளி இல்லாமல் இயங்கி வருகிறது. திமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தை 9 லட்சத்து 41 ஆயிரத்திற்கும் மேலான பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தை 3.8 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். மு.கருணாநிதி மறைவதற்கு முன்பே அவர் இணைய வழி செயல்பாட்டைத் தொடங்கினார். அவருக்கு என்று 2012இல் ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டது. அதனை 4 லட்சத்து 77 ஆயிரத்திற்கு மேலான தொண்டர்கள் பின்பற்றி வந்தனர்.

இவை அல்லாமல் மு.க. ஸ்டாலின், கலைஞர் மு.கருணாநிதி, திமுக என தனித்தனியாக இணையப் பக்கங்கள் இயங்கி வருகின்றன. கூடவே கலைஞர் தொலைக்காட்சி, கலைஞர் செய்திகள் கட்சியின் குரலாக ஒலித்து வருகின்றன. மேலும் இன்ஸ்டாகிராம் பக்கம், LinkedIn, Quora எனப் பல சமூக வலைத்தளங்கள் திமுகவின் சாதனங்களாகச் செயல்பட்டு வருகின்றன. இவற்றைக் கடந்து திமுகவின் ஐடி விங் என்று ஒரு மிகப்பெரிய மீடியா ஒன்றும் மாவட்டம், நகரம் என்று கிளைப் பரப்பிச் செயல்பட்டு வருகிறது. திமுக மற்றும் திமுக ஆதரவு யூடியூப்கள், இன்ஸ்டா பக்கங்கள் கூட இயங்கி வருகின்றன.

dmk dmk pavala vizha

இந்த இணைய உலகம் இல்லாத போது திராவிட கொள்கையை வளர்க்க இளம் வயதிலேயே அதாவது 1942இல் 'முரசொலி'யை கையெழுத்து பத்திரிகையாக ஆரம்பித்தார் மு.கருணாநிதி. 1949இல் தான் திமுக உதயமானது. அதற்கு முன்பே அண்ணாவின் கொள்கைக்கு உறுதுணையாக விளங்கியது இந்த ஏடு. அப்போது திமுகவின் நிறுவனர் அண்ணாதுரை கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க 'திராவிட நாடு' என்ற பத்திரிகையை ஆரம்பித்தார்.

இந்தியா சுதந்திரம் கேட்டு வெள்ளையனிடம் போரிட்ட காலத்தில், 'திராவிட நாடு' கோரிக்கையை முன்வைத்து முழங்கினார் அண்ணாதுரை. அப்போது இந்தக் கோரிக்கையை அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு கடுமையாகச் சாடினார். அதே காலகட்டத்தில் திமுக ஒரு பிரிவினைவாத கட்சி என்று வடநாட்டில் உள்ளவர்களும் தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அண்ணாதுரை அதை மறுத்து தனிநாடு கேட்கவில்லை என்று விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். இதே காலகட்டத்தில் சீனா போர் மூண்டது. அப்போது இந்தியாவுக்குப் பலமாக இருக்கவேண்டும். ஒற்றுமை வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. உடனே அதனை ஆதரித்து, 'வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும். நாடுதான் முக்கியம்' என்று எளிய விளக்கத்தை முன்வைத்து திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார் அண்ணாதுரை. அதன்பின்னர் திராவிட நாடு என்ற பெயரில் பத்திரிகை நடத்துவது கொள்கை முரண் என்று அதை மூடிவிட்டு 'காஞ்சி' என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.

அன்றைக்கு 'காஞ்சி’ என்ற ஒரு மடத்தின் அடையாளம் இருந்தது. அதை மாற்றி திமுகவின் தலைமையகம் 'காஞ்சி’ என்று அடையாளத்தைக் கட்டி எழுப்பினார் அண்ணாதுரை. காஞ்சித் தலைவன் என்று பெயரில் பின்னாளில் எம்ஜிஆர் படத்தின் தலைப்பு வைக்கும் அளவுக்குக் காஞ்சிபுரம் திமுகவினரின் தாயகமானது. அதற்கு அடுத்து 'மாலை மணி’ பத்திரிகையை திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடாக அறிவித்தார் அண்ணா. ஆங்கிலத்தில் ஹோம்லேண்ட் என்றும் ஒரு பத்திரிகையை அண்ணாதுரை கொண்டுவந்தார்.

dmk dmk pavala vizha

திமுகவினரால் நாவலர் என்று அன்பாக அழைக்கப்பட்ட இரா.நெடுஞ்செழியன் 'மன்றம்' என்ற பெயரில் மாதம் இருமுறை வரும்படியான பத்திரிகையை 1953 தொடங்கினார். இதுவும் திமுகவின் குரலாக ஒலித்தது. திமுகவின் மற்றொரு அதிகாரப்பூர்வமான ஏடாக 'போர்வாள்' வெளியானது. இதனைக் காஞ்சி மணிமொழியார் நிர்வாக ஆசிரியராக இருந்து நடத்தினார். மா. இளஞ்செழியன் ஆசிரியராக இருந்தார். இதுவும் திராவிட நாடு கொள்கையை முன்வைத்த பத்திரிகையாகும். இது 1947இல் தொடங்கப்பட்டது. அதாவது திமுக தோன்றுவதற்கு முன்பே உருவான திராவிட இயக்கப் பத்திரிகை என இதைச் சொல்லலாம்.

இராம. அரங்கண்ணல் என்பவர் 'அறப்போர்’ என்ற பெயரில் பத்திரிகை நடத்தினார். 1953இல் 'நம்நாடு’ என ஒரு பத்திரிகையை அண்ணாதுரை தொடங்கினார். இதையே தலைப்பாக எம்ஜிஆர் ஒரு படத்திற்கு வைத்தார். திராவிட இயக்கத்தையும் அண்ணாவையும் ஆதரித்த மற்றொரு பத்திரிகை பொன்னி. இது 1947 முதல் 1954 வரை வெளியானது. திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான என்.வி.நடராசன் 'திராவிடன்’ என ஒரு பத்திரிகையை நடத்தினார். இதேபோல் கே.ஏ.மதியழகன் 'தென்னகம்’ என ஒரு இதழை நடத்தினார். சலகண்டபுரம் ப. கண்ணன் என்பவர் பாரதிசாதனின் நெருங்கிய நண்பராக வலம் வந்தார். அவர் 'பகுத்தறிவு’ என ஒரு பத்திரிகையை நடத்தினார்.

திமுகவின் ஆதரவாளராக இருந்த கவிஞர் கண்ணதாசன் 'தென்றல்' என ஒன்றை நடத்தினார். அண்ணாவுக்கும் ஈவெகி சம்பத்திற்கு முரண்பாடு வந்தபோது இந்தப் பத்திரிகை அண்ணாவை எதிர்த்து எழுதியது. பின்னர் சம்பத் தமிழ்த் தேசியக் கட்சி எனப் புதிய கட்சியைத் தொடங்கியபோது கண்ணதாசன், நெடுமாறன் ஆகியோர் இதில் இணைந்தனர். அண்ணாதுரை காலத்தில் பேராசிரியர் என மதிக்கப்பட்ட க. அன்பழகன் பின்னாளில் திமுகவின் கொள்கைகளைப் பேசவும் அதற்கு முன்பாக தனது கருத்துகளையும் பேச வேண்டி 'புது வாழ்வு' என்ற ஒரு மாத இதழை 1948 தொடங்கினார். பின்னாளில் திமுகவின் கொள்கையைத் தாங்கிப் பிடிக்க ஆற்காடு வீராசாமி கூட 'அலையோசை' என ஒரு இதழைத் தொடங்கினார். 'இனமுரசு'ம் இவர் நடத்தியதுதான்.

திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தில்லை வில்லாளன் என்பவர் சிதம்பரம் பக்கத்திலிருந்தார். அவர் அண்ணாதுரை தனது தொண்டர்களைத் தம்பி என அழைப்பதை மனதில் கொண்டு தனது பத்திரிகைக்கு தம்பி என்றே பெயர் வைத்து நடத்தினார். எஸ்.எஸ். தென்னரசு என்பவர் அவரது பெயரிலேயே ஒரு பத்திரிகையை நடத்தினார். ஏவிபி ஆசைத்தம்பி 'தனி அரசு' என ஒரு ஏட்டை கொண்டுவந்தார். மேற்கொண்டு டி. .கே.சீனிவாசன் 'தாய்நாடு' , மு.க.ஸ்டாலின் 'இளஞ்சூரியன்' , முரசொலி செல்வம் 'தமிழன்' என திமுகவை ஆதரித்து அந்தக் காலத்தில் கிட்டத்தட்ட 84 பத்திரிகைகள் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று வேலை செய்தன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+