ஜனவரி முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்கள் அடியோடு மாறுது.. ரயில்வே மேஜர் முடிவு
சென்னை: 2025 ஜனவரி மாதம் முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஓடும் மின்சார ரயில்களில் ஏ சி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக புறநகர் மின்சார ரயில்களின் வடிவமைப்பே ஒட்டுமொத்தமாக மாறும் என்று தெரிகிறது. ஏனெனில் தற்போதைய நிலையில் முதல் வகுப்பு பெட்டிகள் இருந்தாலும் பெரிதாக மக்களை கவரவில்லை.
தமிழ்நாட்டில் எங்குமே இல்லாத வசதி உள்ள நகரம் என்றால் அது சென்னை தான். சென்னையில் உள்ள மின்சார ரயில் வசதி வருவதற்கோ, மெட்ரோ ரயில் வசதி வருவதற்கோ, கோவை, மதுரைக்கு இன்னும் எத்தனை பத்தாண்டுகள் ஆகும் என்று தெரியாது. ஏனெனில் அந்த அளவிற்கு சென்னையின் கட்டமைப்புகள் வேறு மாதிரி வளர்ந்துவிட்டன. சென்னையில் மின்சார ரயில்கள் ஓடாவிட்டால், ஒட்டுமொத்த சென்னையும் ஸ்தம்பித்து போகும். அந்த அளவிற்கு மின்சா ரயில் சேவைகள் இன்றியமையாதது ஆகும். சென்னையில் மின்சார ரயில் சேவைகள் தான் புறநகர் ரயில் பயணிகளுக்கு முதல் போக்குவரத்து ஆகும்.

தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல்- அரக்கோணம்-திருத்தணி வழித்தடத்திலும், சென்னை கடற்கரை-திருவெற்றியூர்-கும்மிடிப்பூண்டி வழித்தடத்திலும், சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்திலும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் கடற்கரை முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை (வேளச்சேரி வழித்தடம்) ரயில்கள் தற்காலிகமாக பராமரிப்பு பணிகள் காரணமாக செல்வது இல்லை. அதேநேரம் மற்ற வழித்தடங்களில் வழக்கம் போல் செல்கின்றன.
சென்னையில் ஒட்டுமொத்தமாக தினமும் 600-க்கும் மேற்பட்ட முறை மின்சார ரயில் இயக்கப்படுகின்றன. சென்னையில் மெட்ரோ ரயில்களில் உள்ளது போன்று ஏசி ரயில் பெட்டி வசதி இல்லை. இந்த ஏக்கம் ரயில் பயணிகளுக்கு நீண்ட காலமாக உள்ளது. இதுதவிர கோடை காலத்தில் சென்னையில் வெயில் மிக கடுமையாக இருக்கும். எனவே அப்போது மின்சார ரெயில்களில் ஏ சி பெட்டிகளை இணைத்து இயக்கினால் சிறப்பாக இருக்கும் என்று பல பயணிகள் நீண்ட நாட்களாக தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனால் சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் ஏ சி ரெயில் பெட்டியை இணைப்பது குறித்து ஆய்வு செய்யுமாறு தெற்கு ரெயில்வேக்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரை செய்திருந்தது. இது ஒருபுறம் எனில், ரயில்களில் ஏசி வசதிகள் இருந்தால், பலர் கார்களில், சொந்த வாகனங்களில் பயணிக்காமல், மின்சார ரயில்களில் பயணிக்க ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் அதை கொண்டுவருவது குறித்து தெற்கு ரயில்வே பரிசீலித்து வந்தது.
இதன் காரணமாக மின்சார ரெயில்களில் ஏசி பெட்டிகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை தெற்கு ரயில்வே ஆய்வு செய்தது. பின்னர், ஏசி பெட்டிகளை இணைக்க முடிவு செய்து பெட்டிகளை தயாரிப்பதற்கான பணியை தெற்கு ரயில்வே தொடங்கியது. சென்னை பெரம்பூரில் உள்ள ஐ சி எப் தொழிற்சாலையில் ஏசி ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
ஏசி பெட்டிகளுடன் கூடிய மின்சார ரயில்களை சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே முதற்கட்டமாக அறிமுகம் செய்ய முடிவு செய்தது. இதற்காக வரும் நவம்பர் மாதத்தில் இதற்கான சோதனை ஓட்டத்தை நடத்த தெற்கு ரெயில்வே முடிவு செய்திருக்கிறது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏ சிபெட்டிகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
தற்போது சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் மும்பை புறநகர் மின்சார ரயிலுக்காக ஏசி பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தெற்கு ரயில்வேக்கு 12 ஏசி பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளதாக ஐசிஎப் வட்டாரங்கள் சொல்கின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைத்து இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாகவும், அதில் முதற்கட்டமாக சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ சி வசதி கொண்ட மின்சார ரயில் பெட்டிகளுடன் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications