பிளாட்ஃபார்மில் படுத்துத் தூங்கிய விகேடி பாலன்.. சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிய சாதனை மனிதர்!
சென்னை: மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் விகேடி பாலன் இன்று காலமானார். சென்னைக்கு வந்து, எழும்பூர் ரயில் நிலைய பிளாட்ஃபார்மில் படுத்துத் தூங்கிய விகேடி பாலன், பின்னாளில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்துக்கு அதிபர் ஆனார். அவரது வாழ்க்கை பலருக்கு நம்பிக்கை அளிக்கும் பாடம்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பிறந்த தனபாலன், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஒடுக்குமுறைகளைச் சந்தித்த அவர், வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு 1981 ஆம் ஆண்டு சென்னைக்கு புறப்பட்டார். திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வெறும் கையோடு வந்து சேர்ந்தார் தனபாலன்.

தங்குவதற்கு செலவழிக்கவோ, சாப்பிடவோ காசில்லாத சூழலில் எழும்பூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வசித்தார். அங்கிருந்து வேலை கேட்டு பல்வேறு நிறுவனங்கள், கடைகளுக்குச் சென்றார். ஆனால், அவருக்கு வேலை கொடுக்க யாரும் தயாராக இல்லை. பகல் முழுவதும் வேலை தேடி அலைவது, இரவில் எக்மோர் ரயில் நிலைய பிளாட்ஃபார்மில் தூக்கம் என சில நாட்களைக் கழித்தார்.
எழும்பூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் படுத்திருப்பவர்களை, போலீசார் அவ்வப்போது தொந்தரவு செய்வார்களாம். ஏதாவது வழக்கை போட்டு அவர்களை கைது செய்வது வாடிக்கையாக இருந்துள்ளது. அப்படி ஒருமுறை மாட்டிக்கொண்ட தனபாலன், போலீஸிடமிருந்து தப்பித்து ஒரு இடத்திற்கு ஓடியுள்ளார். அங்கு சாலையோரம் நடைபாதையில் ஏற்கனவே சிலர் படுத்து இருந்த நிலையில், அவரும் அங்கு படுத்துத் தூங்கி உள்ளார்.
காலையில் எழுந்தபோது, அவருக்கு முன்பும் பின்பும் பலர் வரிசையில் நின்றுள்ளனர். அவருக்கு அங்கு என்ன நடக்கிறது என்றே ஒன்றும் புரியவில்லை, அப்போது ஒருவர் வந்து, "உன் இடத்தை எனக்குத் தருகிறாயா? 2 ரூபாய் தருகிறேன்.." எனக் கேட்டுள்ளார். அப்போதுதான், தனபாலனுக்கு விஷயம் புரியத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க விசா வேண்டி வருபவர்கள், நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க வேண்டி முந்தைய நாளே இதுபோல் வந்து படுத்துக்கொள்வார்கள். அப்படி வர முடியாதவர்களுக்கு இடம் பிடித்துக் கொடுக்கவும் சிலர் இருந்தனர். அப்படி தனபாலனும் யதேச்சையாக படுத்துத் தூங்கி, முதல் நாளிலேயே 2 ரூபாய் சம்பாதித்தார்.
அதையடுத்து, தொடர்ந்து அதையே தொழிலாகச் செய்து காசு பார்க்க ஆரம்பித்துள்ளார். நேரத்துக்கு சாப்பிட வருமானம் கிடைத்தது. தான் வரிசையில் நிற்பதோடு, கல், துண்டு ஆகியவற்றையும் போட்டு சீட் பிடித்து, அமெரிக்க விசா வேண்டுபவர்களிடம் வரிசைக்கு காசு வாங்கி சம்பாதித்து வந்துள்ளார்.
பாலன், தான் பார்த்த வேலையில் காட்டிய உற்சாகத்தையும் துடிப்பையும் கவனித்த ஒரு டிராவல்ஸ் நிறுவன முதலாளி அவரை தன்னிடம் வேலைக்கு வரச்சொல்லிக் கேட்கிறார். நீ செய்யும் இதே வேலையைச் செய்யலாம். 5 ரூபாய் தருகிறேன். இரவில் இங்கு வரிசையில் தூங்கு.. பகலில் என்னிடம் வேலைக்கு வா" எனக் கூறியுள்ளார். இதையடுத்து, பாலன் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு வேலைக்குச் சென்றார்.
அந்த டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனத்தில் கடுமையாக உழைக்கத் தொடங்கிய பாலன், அந்தத் தொழிலில் இருக்கும் நுட்பங்களை நாள்தோறும் கற்றுக்கொண்டு, தன்னை மேம்படுத்தி வந்தார். டிராவல்ஸ் ஏஜென்சி வேலையின் வித்தைகளை எல்லாம் கற்றுக்கொண்டு, 1986ல் 'மதுரா டிராவல்ஸ்' என்ற பெயரில் தனது சொந்த நிறுவனத்தை தொடங்கினார்.
இன்றைக்கு, மதுரா டிராவல்ஸ் நிறுவனம் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக விரிவடைந்துள்ளது. தென்னிந்தியாவின் மிக முக்கியமான பயண முகவர்களில் ஒன்றாக வி.கே.டி.பாலன் அவர்களின் மதுரா ட்ராவல்ஸ் விளங்குகிறது. சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து வந்து தன் உழைப்பின் மூலமாக முன்னேறி சுற்றுலா பயணத்திட்ட சேவைத் துறையிலும் பொருளாதாரத்திலும் உச்சம் தொட்டவர் விகேடி பால. அவரது வாழ்க்கையும் அனுபவங்களும் தற்போதைய இளைய தலைமுறைக்கு மிகப்பெரிய நம்பிக்கை ஊட்டும் பாடம்.












Click it and Unblock the Notifications