ரத்தத்தில் ஊறிய கம்யூனிசம்.. விடாத போராட்ட குணம்! யார் இந்த திண்டுக்கல் CPM வேட்பாளர் சச்சிதானந்தம்?
சென்னை: திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர் வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 2 இடங்களில் போட்டியிடுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் உள்ள மற்ற கட்சிகளை போல அல்லாமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு முறை தனித்துவமானதாக இருக்கும். லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் மாநில குழு உறுப்பினர்கள்தான் முழுக்க முழுக்க தேர்ந்தெடுக்கிறார்கள். அதை வழிமொழியும் இடத்தில் மாநில தலைமை இருக்கிறது.

அப்படித்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட, ஆர். சச்சிதானந்தத்தை தேர்வு செய்திருக்கிறது. 53 வயதான இவர், கடந்த 37 ஆண்டுகளாக கட்சியின் உறுப்பினராக இருக்கிறார். அதேபோல, 30 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராகவும் பணியாற்றி வருகிறார்.
பி.எஸ்.சி. பட்டதாரியான இவர், கடந்த 1987ம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தில்(SFI) மாவட்ட துணை செயலாளராகவும், திண்டுக்கல் நகர தலைவராகவும் பணியாற்றியவர். 1992ம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்து 1994-2002 வரை மாவட்ட செயலாளராக, மாநில செயற்குழு உறுப்பினராக, மாநில துணை செயலாளராக பணியாற்றியுள்ளார்.
2004-2007 வரை ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்கள் இணைந்த கட்சியின் திண்டுக்கல் தாலுகா செயலாளராகவும், அதன்பின்பு ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 2007-2018 வரை தமிழ்நாடு விவசாய சங்கத்தில் மாவட்ட செயலாளர், மாநில துணை செயலாளர் மற்றும் அகில இந்திய கிசான் கவுன்சில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். மக்களிடம் சரியாக அணுகும் முறை, அரசியல் அனுபவம், சிறந்த தலைமை பண்பு ஆகியவை இவரை 26 வயதிலேயே தேர்தலை நோக்கி நகர்த்தியிருக்கிறது.
26 வயதில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சிமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு 1996-2006 வரை இரண்டு முறை மக்கள் பிரதிநிதியாக சிறப்பாக பணியாற்றியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு முதல் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார்.
விவசாய சங்கத்தில் பணியாற்றிய காலத்தில் பழனி வட்டத்தில் உபரி நில மீட்பு போராட்டத்தை நடத்தி ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்த நிலத்தை மீட்டு ஏழை விவசாயிகளுக்கு கொடுக்கும் போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்தி வெற்றி கண்டது, இவரது அரசியல் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
கூடலூர், லந்தக்கோட்டை, கருங்கல் கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்களிலிருந்து சிப்காட்டிற்கு நிலம் எடுப்பதை தடுத்து நிறுத்துவதற்கு கட்சியின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி அத்திட்டத்தை கைவிட செய்து விவசாய விளை நிலங்களை பாதுகாத்திருக்கிறார்.
அதேபோல புலையன் இனத்தை மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கொடைக்கானல் துவங்கி சென்னை வரை அம்மக்களை திரட்டி போராட்டம் நடத்தியிருக்கிறார். இப்படியான பல போராட்டங்களில் கைதாகி சிறைக்கும் சென்றிருக்கிறார்.
சச்சிதானந்தம், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் காமாட்சிபுரம் கிராமம் கட்டச்சின்னாம்பட்டியைச் சேர்ந்தவர். இவருக்கு எஸ்.கவிதா என்ற மனைவியும், ஆர்.எஸ். வைசாலி (திருமணமானவர்), ஆர்.எஸ். மிருணாளினி (பத்தாம் வகுப்பு மாணவி) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
மேலே குறிப்பிட்டதைப்போல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தேர்வு முறை மிகவும் தனித்தன்மை வாய்ந்தது என்பதை, சச்சிதானந்த்தின் தேர்வு காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏனெனில் திண்டுக்கல் மாவட்டம் என்று சொன்னால் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோரின் பெயர்கள் நினைவுக்கு வரும்.
ஆனால், பிரபலங்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தாமல் கட்சிக்கு தொடர்ச்சியாக பணியாற்றி வரும் சாதாரண நபர்களையும் அடையாளப்படுத்தும் விதமாக இந்த தேர்வு அமைந்திருக்கிறது என்றும், சிபிஎம் கட்சியை பொறுத்த அளவில் நபர்களை விட கட்சிக்கும், அதன் கொள்கைக்கும்தான் முதலிடம் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications