வெள்ளை உடை..தலித் போராளி! நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களை உருவாக்கிய ஆம்ஸ்ட்ராங்! அரசியல் பின்னணி..!?
சென்னை: சென்னையில் நேற்று கொடூரமாக வெட்டிக் கொலை செய்யட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் தலித் மக்களுக்காக நிறைய போராட்டங்களை முன்னெடுத்தவர் என்றும், நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களை உருவாக்கியர் என சோகம் ததும்ப கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பேசு பொருளாக மாறி இருக்கிறது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங்கின் கொலை சம்பவம். வெள்ளிக்கிழமை மாலை தனது வீட்டு அருகே ஆம்ஸ்ட்ராங் பேசிக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது.

ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங்கை அருகில் இருந்தோர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஐந்து தனிப்படைகளை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு இடையே உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களைப் போல உடை அணிந்து வந்த மர்ம கும்பல் அவரை வெட்டியது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்த நிலையில் எட்டு பேர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்ட எட்டு பேர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன், சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் ஒரு தேசியக் கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளதால் தமிழக காவல்துறையும் உளவுத்துறையும் தோல்வியடைந்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதற்கிடையே கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் என்பதோடு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நிறைய போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பதும் நிறைய வழக்கறிஞர்களை அவர் உருவாக்கி இருக்கிறார் என சமூக வலைதளங்களில் சோகமாக பதிவிட்டு வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
ஆம்ஸ்ட்ராங் யார் அவரது அரசியல் பின்னணி என்ன என்பது குறித்து பார்க்கலாம்.. தொழில்முறை வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங் அப்பகுதி மக்களுடன் மிக எளிமையாக பழகி வந்துள்ளார். தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்தாலும் தெருக்களில் சாதாரணமாக நடமாடுவது, மக்களோடு மக்களாக பழகுவது என சாதாரண நபர் போலவே இருந்துள்ளார்.
பெரம்பூரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகனான ஆம்ஸ்ட்ராங் சிறுவயதில் இருந்தே தீவிர அரசியலில் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். 14 வயதில் பள்ளிக்காலத்திலேயே அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்றுகிறார். சட்டம் பயின்று வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங் 2000ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் கால் பதித்தவர்.
அம்பேத்கர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர் டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேசன் என்ற அமைப்பை 2006 ஆம் ஆண்டு உருவாக்கினார் . அதே ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி 96 வார்டில் போட்டியிட்டு முதன்முறையாக மாமன்ற உறுப்பினர் ஆனார். 2007 ஆம் ஆண்டு அமைந்தகரையில் மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி அதற்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரான மாயாவதியை அழைத்து வந்து பிரமிக்க வைத்தார்.
அதே ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். சுமார் 17 ஆண்டுகளாக சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவராக இருக்கும் இவர் வடசென்னை அல்லாது புறநகர் பகுதிகளிலும் ஏராளமான தலித் மக்களின் பிரச்சினைக்காக போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார்.
மேலும் தான் வழக்கறிஞர் என்பதோடு மட்டுமல்லாமல் மேலும் பல வழக்கறிஞர்களை அவர் உருவாக்கியதாக கூறப்படுகிறது. ஏழை எளிய மக்களுக்கு உதவுவதோடு தான் உருவாக்கிய வழக்கறிஞர்கள் மூலம் மேலும் பல தாழ்த்தப்பட்ட, தலித் மக்கள் சட்டம் படிக்க உதவியிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை சட்டக் கல்லூரிகளில் சேர்த்து படிக்க வைத்திருக்கிறார். அவர்களுக்கான கல்விச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
குறிப்பிட்ட சமூக பின்னணியை கொண்டவராக இருந்தாலும் அனைத்து சமுதாய மக்களுடன் எளிமையாகவும் இனிமையாகவும் பழகும் குணம் கொண்ட அவர் ,எப்போதும் வெள்ளை பேண்ட் சட்டையுடன் காட்சியளிப்பார். அவரது உடை போலவே அவரது மனமும் வெண்மைதான் என சோகம் ததும்ப கூறி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள். இவர் மீது பல வழக்குகள் இருந்த நிலையில் அவை அனைத்திலிருந்தும் அவர் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications