Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக மீது அட்டாக்..கள்ளக்குறிச்சி ஆக்சன்! கொடநாட்டுக்கும் ஒரு ட்விஸ்ட்.. முதல்வர் ஸ்டாலின் சிக்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மானியக் கோரிக்கைகள் தொடர்பான தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின், கடைசி நாள் கூட்டம் இன்று காலை கூடியது. அப்போது காவல்துறைக்கான மானியக் கோரிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள், தேர்தல் வெற்றி, கள்ளக்குறிச்சி சாராய பலி விவகாரம், காவல்துறையினருக்கான திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

அவரது உரையில்,"நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியைப் பெற்ற பெருமிதத்துடன் (மேசையைத் தட்டும் ஒலி) இந்தப் பேரவைக்கு நாங்கள் வந்துள்ளோம் நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவில் நூற்றுக்கு நூறு வெற்றியைப் பெற்று புகழ் மாலையைச் சூட்ட வேண்டும் என்று நான் உறுதி எடுத்து பயணம் தொடங்கினேன். எடுத்த உறுதியில் வென்று நூற்றாண்டு நாயகருக்கு புகழ்மாலை சூட்டிய பெருமையோடு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

tamil nadu assembly session 2024 Mk Stalin kallakurichi

நடைபெற்றது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் என்னைக் குறி வைத்தும் இந்த திராவிட மாடல் அரசை விமர்சித்தும்தான் தேர்தல் களத்தில் அதிகம் பேசினார்கள். திராவிட மாடல் ஆட்சியின் செல்வாக்கைக் குறைத்துக்காட்ட அவர்கள் செய்த உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை மக்கள் முறியடித்து, செய்கூலி சேதாரம் இல்லாமல்" முழுமையான வெற்றியை வழங்கினார்கள். ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மேசையைத் தட்டும் ஒலி

நான் ஆட்சிப் பொறுப்பேற்ற காலம் முதல் ஒவ்வொரு நாளும். ஒவ்வொரு மணிநேரமும் நாட்டு மக்களுக்கு நல்ல பல திட்டங்களைத் தீட்டி வந்துள்ளேன் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்ததன் அடையாளம்தான் இந்த 100 விழுக்காடு வெற்றி சட்டமன்றத் தேர்தலில், வாக்களித்த மக்கள் வாக்களிக்காத மக்கள்' என்ற பாகுபாடின்றி, அனைவருக்கும் கடந்த மூன்றாண்டு காலத்தில் ஏராளமான நன்மைகளைச் செய்துள்ளோம். மேசையைத் தட்டும் ஒலி அதற்கான அங்கீகாரத்தை வாக்குகள் மூலமாக மக்கள் நமக்கு அளித்துள்ளார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நின்று. வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும் இரண்டாண்டு காலமும் இதே போன்ற ஈடு இணையற்ற திட்டங்களைத் தீட்டித் தந்து, 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம். இதனை மமதையோடு நான் சொல்லவில்லை மனச்சாட்சிப்படி செயல்படும் இந்த ஸ்டாலின் மீதும் திராவிட மாடல் அரசின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் துணிச்சலோடு சொல்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக ஆய்வு செய்தால், திமுக கூட்டணி 221 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. மக்கள் மனதில் யார் இருக்கிறார்கள்? யாரை மக்கள் அடியோடு புறக்கணித்து உள்ளார்கள்? என்பதையெல்லாம் இதன் மூலம் உணர முடியும் அதனால்தான், மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள் நமது முகத்தை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல், தினந்தோறும் இந்த அவைக்கு வந்து அவையின் மாண்புக்கும் குந்தகம் விளைவித்து சென்றுவிட்டார்கள்.

இந்தத் தேர்தல் தோல்வியை மறைக்க அவர்கள் போட்ட சதித்திட்டம்தான், நடவடிக்கை எடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து கிளப்பியது. கடந்த 19 ஆம் தேதி இந்த சம்பவத்தை நான் கேள்விப்பட்டதும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டேன். அது குறித்து இதே அவையில் 20 ஆம் தேதி முழுமையான அறிக்கையை தாக்கல் செய்துள்ளேன். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கான உண்மையான காரணத்தை அறிய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைத்தேன். சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிட்டேன். அமைச்சர்கள் உள்துறை செயலாளர். டி.ஜி.பி. ஆகியோரை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன்.

குற்றவாளிகளில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கள்ளச்சாராயம் விஷச்சாராயம் ஒழிப்பு மற்றும் குற்றவாளிகள் கைது நடவடிக்கைகள் தீவிரமாகத் தொடர்கிறது. இறந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கைப் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட நடவடிக்கைகளை 24 மணி நேரத்தில் எடுத்துள்ளோம். இதன் பிறகும் நடவடிக்கைகள் சரியில்லை என்று சொல்வது. அவர்கள் நடத்தும் திசைதிருப்பல் நாடகம்

எதை மறைத்தோம் என்று சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள்? 'சாத்தான்குளம் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கே சி.பி.ஐ. விசாரணை கேட்டீர்களே" என்று மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பேட்டி அளித்திருக்கிறார். மனித உயிர்கள் இறந்து போனால், இரண்டு பேரா. இருபது பேரா என்று பார்ப்பது இல்லை. ஒரே ஒருவர் இறந்தாலும் அது மாபெரும் இழப்புதான். சாத்தான்குளம் சம்பவத்தை அன்றைய அ.தி.மு.க. அரசு முழுக்க முழுக்க மறைக்க. திரிக்க நினைத்தது. அதனால் அப்போது சி.பி.ஐ விசாரணை கேட்டோம். ஆனால் இன்றைக்கு இந்த அரசு எதையும் மறைக்கவில்லை. குறுகிய காலத்திற்குள், குற்றவாளிகளைக் கைது செய்து, ஒருவர்கூட தப்ப முடியாது என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

விஷச்சாராய விற்பனை என்பது ஒரு சமூகக் குற்றம். விலை மதிப்பில்லாத மனித உயிர்களை பலி வாங்குகிற இதை முற்றிலுமாக ஒழிக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது என்பதை நான் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பிறகு மாவட்ட ஆட்சியர்கள். காவல் துறை எஸ்.பி.-க்கள் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய நான் இது தொடர்பாக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளேன். இனிமேல் எங்காவது கள்ளச்சாராய உயிர் பலி நடக்குமானால் அதற்கு அந்த மாவட்ட காவல் துறை அதிகாரியும் எல்லைக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரியும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை மிகவும் கண்டிப்புடன் சொல்லியிருக்கிறேன்

அதைப்போலவே போதைப் பொருள் நடமாட்டம் மற்றும் விற்பனையை முற்றிலுமாகத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இக்குற்றங்களில் கைது செய்யப்படுபவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக குற்றவாளிகளின் 18 கோடியே 5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 46 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயத்தை போலவே போதை மருந்து ஒழிப்பிலும் காவல் துறை அதிகாரிகள் உறுதியாக இருக்க வேண்டுமென்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறேன். மது, போதைப் பழக்கங்களுக்கு எதிராக குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை அரசு ஒரு பக்கம் எடுத்தாலும் இது தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் அதிகம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அரசு கருதுகிறது. போதை மருந்தின் பாதிப்புகளை உணர்த்துதல் குடிநோயாளிகளை மீட்பது ஆகியவற்றை ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறது. அந்த இயக்கத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து. மிக முக்கிய வழக்கான கொடநாடு வழக்கு குறித்து இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்த அவைக்குத் தெரிவிப்பதை எனது கடமையாகக் கருதுகிறேன். கொடநாடு வழக்கில் இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, எதிரிகள் பயன்படுத்திய 8 செல்போன்கள், 4 சிம் கார்டுகள் கோவை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 8 ஆயிரம் பக்கம் கொண்ட ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது, எதிரிகள் சிலருக்கு வெளிநாட்டு போன் அழைப்புகள் வந்துள்ளது. எனவே அதனை இண்டர்போல் உதவியுடன் விசாரிக்க வேண்டும். மேலும், சிலருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.

சட்டம்-ஒழுங்கைக் காப்பதில் தமிழ்நாடு அரசு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அனைத்து விழாக்களையும் அமைதியான முறையில் நடத்திக்காட்டி இருக்கிறோம். 18 ஆண்டுகளாக நின்று போயிருந்த சிவகங்கை கண்டதேவி அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டத்தை எந்தப் பிரச்சினையும் இன்றி சுமுகமாக நடத்திக் காட்டியிருக்கிறோம். அதற்காக அந்தப் பகுதி மக்கள் என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்கள்

40 லட்சம் பேர் திரண்ட திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.

2 லட்சம் பேர் பங்கெடுத்த மதுரை சித்திரைத் திருவிழா.

8 லட்சம் பேர் கூடிய திருச்செந்தூர் சூரசம்ஹாரம்

5 லட்சம் பேர் கூடிய பழனி தைப்பூசத் திருவிழா.

12 லட்சம் பேர் பங்கேற்ற குலசேகரப்பட்டினம் தசரா.

3 லட்சம் பேர் பங்கேற்ற வேளாங்கண்ணி தேவாலயக் கொடியேற்றத் திருவிழா.

20 ஆயிரம் பேர் பங்கேற்ற நாகூர் சந்தனக்கூடு திருவிழா உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் விழாக்கள் அனைத்தையும் அமைதியாக நடத்திக் காட்டியிருக்கிறோம்.

இன்றைக்குத் தமிழ்நாடு வளர்ச்சி மிகு மாநிலமாக இருக்கிறது என்றால் அமைதி மிகு மாநிலமாக அது இருப்பதால்தான். வளர்ச்சி மிகு மாநிலமாக இருக்கிறது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் அறிவார்கள்.

காவல் துறையில் கடந்த மூன்றாண்டு காலத்தில் மொத்தம் 190 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் 179 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மற்ற அறிவிப்புகளும் விரைவில் அரசாணையாக ஆகும் என்று உறுதி அளிக்கிறேன். கடந்த ஆண்டு மட்டும் காவல் துறையில் பல்வேறு சீர்திருத்த முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன.

* மாணவர்களைப் பண்படுத்தும் "சிற்பி திட்டம்" மூலமாக மாணவர்களுக்கு ஒழுக்கப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

* சிறு குற்றம் செய்யும் குற்றவாளிகளைத் திருத்தி அவர்களது எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றுவதற்கு "பறவை திட்டம்" தீட்டப்பட்டது.

* பதிவேடு குற்றவாளிகள் குறித்த தகவல்களை ஒருங்கிணைக்க "பருந்து திட்டம்" செயல்பாட்டில் உள்ளது.

* காவலர்களது நன்மைக்காக "ஸ்மார்ட் காவலர்" செயலி உருவாக்கப்பட்டது.
* விடுப்புகளை முறைப்படுத்த "விண்ணப்ப செயலி" அறிமுகம் செய்யப்பட்டது.

* காவலர்களின் மனஅழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சியாக "மகிழ்ச்சி" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது.

* மகளிர் காவலர்களுக்காக "ஆனந்தம் திட்டம்" அமலில் உள்ளது. வாகனத் திருட்டைக் கண்காணிக்க "ஐ.வி.எம்.எஸ். திட்டம்" நடைமுறைக்கு வந்துள்ளது.

* பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யவும், புகார்களை விரைந்து விசாரிக்கவும். நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும் இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

* குற்றங்களைக் குறைக்கும் துறையாக மட்டுமல்லாமல் குற்றங்களைத் தடுக்கும் துறையாக செயல்பட வேண்டுமென்று காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில். ஆலோசனைக் கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது அல்ல குற்ற எண்ணத்தைக் குறைப்பது காவல் துறையின் பணியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கட்டளையிட்ட வகையில் குற்றச்சூழல் கட்டுக்குள் உள்ளது. வருங்காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

தமிழ்நாடு இன்று இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக உயர்ந்து வருகிறது. தொழில் வளர்ச்சியில், கல்வி வளர்ச்சியில், உள்கட்டமைப்பில், மனித வளர்ச்சிக் குறியீட்டில் என எந்த வகையை எடுத்துக் கொண்டாலும் தமிழ்நாடு உயர்ந்து வருகிறது. மேசையைத் தட்டும் ஒலி அதன் தனித்தன்மையை தனிச்சிறப்பாக வளர்த்து வருகிறோம். இந்த வளர்ச்சி என்பது என்னால் மட்டும் ஆனதல்ல. என்னை முதலமைச்சராக ஏற்றி வைத்து. ஒவ்வொரு துறையையும் தங்களது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால் வளர்த்து வரும் எனது அருமை அமைச்சரவை சகாக்களால்தான் இந்த வெற்றியையும் உயர்வையும் பெற்று வருகிறோம் என்பதை எப்போதும் மறக்காமல் சொல்லி வருகிறேன். அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டணிக்கட்சியாக இருந்தாலும் பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டி. சுட்டிக்காட்ட வேண்டிய நேரத்தில் கனிவோடு சுட்டிக்காட்டும் கூட்டணிக் கட்சியின் விவாதங்களுக்கு பதில் சொல்வதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். அந்த பதிலைக் கேட்பதற்குத்தான் அ.தி.மு.க. தயாராக இல்லை. ஒருபுறம் தேர்தல் தோல்வி மறுபுறம் சொந்தக் கட்சியில் நெருக்கடி என இரண்டுக்கும் இடையே சிக்கிக் கொண்டு அதில் இருந்து தப்பிப்பதற்காக அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தியது அதி.மு.க. நாம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து எதிர்க்கட்சியினர் இந்த அவையில் எவ்வளவு நேரம் பேசியுள்ளார்கள் என்பதையும் அதிமுக ஆட்சியில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எங்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதையும் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டு ஆட்சிகளின் ஜனநாயகப் பண்பும் தெரியும் புரியும்!

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே ஆசிரியருக்கே உரிய கண்டிப்புடனும் தெளிந்த அறிவுக்கூர்மையுடனும் அதே நேரத்தில் சுவைபடவும் இந்த அவையை நடத்திச் செல்லும் தங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த ஆண்டு மானியக் கோரிக்கையில் 100 அறிவிப்புகள் உள்ளன. அதில் சிலவற்றை மட்டும் இப்போது அறிவிக்க விரும்புகிறேன். மீதமுள்ள அறிவிப்புகளை நான் படித்ததாகக் கருதி அவைக்குறிப்பில் சேர்த்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய போக்குவரத்துக் காவல் நிலையங்கள், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை புறக்காவல் நிலையம் படப்பை ஆதமங்கலம்புதூர். திருப்பரங்குன்றம் கோவில் ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.

* மாண்புமிகு அவை முன்னவர். மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் இன்று காலை நான் அவைக்கு வந்தவுடன், நெடுநாள் கோரிக்கை என்று தெரிவித்து என்னிடம் ஒரு கோரிக்கையைக் கொடுத்தார். அதாவது, பேரணாம்பட்டில் இருக்கக்கூடிய காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றிட வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார். அது நிச்சயமாகப் பரிசீலிக்கப்படும்

* கொளத்தூர் கேளம்பாக்கம். செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். தாம்பரம் காவல்

* ஆணையரகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும். கோவை பொள்ளாச்சி திருப்பூர் நல்லூர் ஆகிய இடங்களில் 229 காவல் குடியிருப்புகள் கட்டப்படும்.

* தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஆளிநர்கள் பணியின்போது உயிரிழப்போ உடலுறுப்பு இழப்போ காயமோ ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத் தொகை உயர்த்தப்படும். சிறப்பு இலக்குப் படையில் பணியாற்றும் ஆளிநர்களுக்கும் அத்தொகை உயர்த்தி வழங்கப்படும்.

* ஊர்க்காவல் படையில் பணியாற்றும் ஆளிநர்கள் உயிரிழக்கும்போது அவர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு ஊர்க்காவல் படை நலன் மற்றும் கருணைக் கொடை நிதியிலிருந்து வழங்கப்படும் இழப்பீடு 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாகவும். காயமுற்றவர்களுக்கான நிதி 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

* கோவை மாநகராட்சியை விபத்தில்லாத மாநகரமாக மாற்ற 5 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

* தஞ்சாவூர் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் 5 கோடியே 21 லட்ச ரூபாய் செலவில் புதிய ஆயப்பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.

* தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 1,500 தற்காப்பு உடைகளும் மீட்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சிறிய உபகரணங்களுடன் கூடிய 3,000 மீட்பு உடைகளும் 4 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் வழங்கப்படும்.

* ஏரல்: கருமத்தம்பட்டி, மடத்துக்குளம். கோவளம், படப்பை. திருநெல்வேலி மாநகரம், புதுவயல் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்கள் நிறுவப்படும்.

* சமயபுரம், மேடவாக்கம் பெரம்பலூர், தியாகதுருகம் நீடாமங்கலம் கொளத்தூர் ஆகிய 6 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்படும். மேசையைத் தட்டும் ஒலி

* அது மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியர்களைச் சார்ந்துள்ள தாய் தந்தையரையும் பயனாளிகளாக சேர்த்திட வேண்டுமென்று காவல் துறையினர் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்களிடம் இருந்தும் கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. அவற்றை உரிய முறையில் ஆராய்ந்து அரசு அலுவலர்களைச் சார்ந்து வாழும் அவர்களது பெற்றோருக்கும் மருத்துவக் காப்பீட்டின் பலன் சென்றடையும் வகையில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களின் விருப்பத்தைப் பெற்று, தற்போது நடைமுறையில் உள்ள புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மறுசீரமைக்கப்படும்.

* மேலும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களைப் பெறும் அரசு அலுவலர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களை களைந்திட தலைமைச் செயலாளர் தலைமையில் விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்திடவும் தேவைப்படும் நெறிமுறைகளை வழங்கிடவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே எங்களது இலக்கு மிகப்பெரியது எங்களது கொள்கை மிகமிகப் பெரியது எனவே, எங்களது பயணமும் மிகமிக நீண்டது. நூற்றாண்டு கால திராவிட இயக்கத்தின் கனவுகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சிந்தனைகளை பேரறிஞர் அண்ணாவின் பாணியில் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் செயல்வேகத்தோடு கொண்டு செலுத்தி வருகிறேன். எங்களது இலக்கில் நாங்கள் வெல்வோம்! வென்று கொண்டே இருப்போம்!" என கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+