• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இதை செய்தால் மாணவர்கள் தற்கொலையை தடுக்கலாம்...ஐடியா கொடுக்கும் தமிழருவி மணியனின் இயக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தற்கொலை மாணவர்களை மீட்க இதுதான் வழி என சில அறிவுறுத்தல்களை காந்திய மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காந்திய மக்கள் இயக்கம் நிர்வாகி வெளியிட்ட செய்திக் குறிப்பில், நீட் தேர்வு தேவையில்லை, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்' என்று தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது; இது இரண்டாவது முறை. ஏற்கனவே எடப்பாடி அரசு தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, திரும்பி வந்துவிட்டது.

Gandhiya Makkal Iyakkam releases press release over how to curb Neet suicides

ஆட்சி மாற்றத்திற்குப் பின் திமுக அரசும் தன் பங்குக்கு, ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதன் கதி என்ன ஆகும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளபடி, பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறையில் மாநில அரசின் அதிகாரம் செல்லாது என்பது நாமறிந்த ஒன்று.

'நீட் தேர்வை நம்மால் ரத்து செய்ய முடியாது' என்று நன்றாகத் தெரிந்த பின்பும், கழகத் தலைவர், இளைஞரணித் தலைவர், மகளிரணித் தலைவி போன்ற குடும்ப உறுப்பினர்கள், திமுக முன்னோடிகள் வாக்குறுதியை வாரி வழங்கினர். தற்போது, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத சூழலில், 'நாங்கள் ஒன்றும் சும்மா இருக்கவில்லை, சட்டப் போராட்டம் நடத்துகிறோம்' என்று மக்கள் முன்னே சமாளிப்பதற்காகக் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தமிழக மக்களை ஏமாற்றும் முயற்சி.

இன்று உள்ள அத்தனை குளறுபடிகளுக்கும் மத்திய அரசின் தலையீடுகளுக்கும் காரணம், கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு, அன்றைய பிரதமர் இந்திரா அவர்களால் மாற்றப்பட்டது தான். நீட் தொடர்பாக காந்திய மக்கள் இயக்கம் ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளபடி, அண்மையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளபடி, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான முன்னெடுப்புகளுகக்குத் தமிழ்நாடு தலைமை ஏற்க வேண்டும். இதற்கான முயற்சிகள் தளர்வின்றி, தடையின்றித் தொடர வேண்டும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள தனது உறுப்பினர் பலத்தைப் பயன்படுத்தி அதற்கான தீர்மானங்களை திமுக கொண்டு வரவேண்டும். தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிட, மாநில உரிமைகளுக்காகப் போராடும் அனைத்துக் கட்சியினரின் ஆதரவையும் பெற்றிட வேண்டும். உண்மையாகவே, மாணவர்களின் மரணம் தங்களைப் பாதிக்கிறது என்று திமுக கருதுமானால், இதை ஒரு வேள்வியாக எடுத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும்.

நீட் தொடர்பாக சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. மாநில அரசு சட்டம் இயற்றி அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்துவிட்டால் செல்லுபடியாகும். நீட் தேர்வுக்கான சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. மாநிலத்தில் சட்டம் இயற்றிய பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது என்பது அடுத்த கட்டமான நடவடிக்கையாக இருக்கும். ஆனால் குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைக்குமா? உறுதியாகச் சொல்வதற்கில்லை. மேலும் இது போன்று வேறு எந்த மாநிலங்களும் செய்யவில்லை.

எனவே நீட் தேர்வு ரத்து குறித்தான தீர்மானம் ஒருபுறம் இருந்தாலும், நீட் தேர்வுக்காக மாணவர்களைத் தயாராக்கும் பயிற்சி தொடர்ந்து நடைபெற வேண்டும். மாநிலக் கல்வித் திட்டம் மேலும் செறிவு படுத்தப்பட்டு, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் நிலைக்கு மேம்படுத்தப்பட வேண்டும். மாணவர்கள், போட்டித் தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்ள உளவியல் வல்லுநர்களைக் கொண்டு அரசுப் பள்ளிகளில் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். காரணம், நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது உள்பட அனைத்தும் முடிந்து விட்டது.

  நீட் தற்கொலை.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்!

  நீட் தேர்வு விவகாரத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரிய மாணவர்களின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் ஆஜரானார். இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது என அனைவருக்கும் தெரியும். இந்த விவகாரத்தில் பல்வேறு சலுகைகளை வேண்டுமானால் மாநில அரசு முன்வைக்கலாம். குறிப்பாக, கேள்விகளைத் தமிழில் தயாரிப்பது, மாநில அரசின் பாடத் திட்டத்தில் கேள்விகள் என மத்திய அரசிடம் கோரிக்கைகளை வைக்கலாம். அதை விடுத்து தற்போது நடைபெறும் முயற்சிகள், மாணவர்கள் மத்தியில் குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும்.

  மேலும், தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதமும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்கியுள்ளனர். இதனை அதிகப்படுத்துவதற்கான வேலைகளில் இறங்கலாம். இதன் மூலம் அதிகப்படியான மாணவர்களை சேர்க்கலாம். இவற்றையெல்லாம் செய்வதற்கான வழிவகைகளை ஆராயாமல், அடுத்தாண்டுக்குள் நீட் தேர்வு ரத்து செய்து விடுவோம் என மாணவர்களை ஏமாற்றுவது ஏற்புடையதல்ல. துயர நிகழ்வுக்குப் பின் நிதி அளிப்பதையும், ஆறுதல்கள் வழங்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ள இரண்டு கழகங்களும், வருமுன் காப்பதற்கு முன் நிற்க வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

  English summary
  Gandhiya Makkal Iyakkam releases press release over how to curb Neet suicides.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X