சென்னை புரசைவாக்கம் பக்கம் போறீங்களா? டிராபிக் போலீஸ் முக்கிய அட்வைஸ்.. இது தெரியாமல் போகாதீங்க
சென்னை: சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதன் காரணமாக புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் தெருவில் அமைந்துள்ள சாலையில் இன்று (28.11.2024)-ம் தேதியன்று காலை 05.00 மணி முதல் 12.00 மணி வரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் சிவன் ஆலயம். காசிக்கு இணையான கோயில் என இது போற்றப்படுகிறது. சென்னையில் உள்ள பஞ்சபூத தலங்களில் புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் ஆலயம், நீர் தலமாக போற்றப்படுகிறது. இந்த கோயிலில் மூலவர் கங்காதீஸ்வரர் உள்ளார்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கோயில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் குடமுழுக்கு விழா இன்று நடைபெறுகிறது. குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி சென்னை புரசைவாக்கம் பகுதியில் இன்று மதியம் 12 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் கூறியதாவது:-
கங்காதீஸ்வரர் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் இன்று காலை 05.00 மணி முதல் நடைபெறவுள்ளதால், அன்று கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காகவும், வாகன ஓட்டிகளின் வசதிக்காகவும். வரும் 28.11.2024-ம் தேதியன்று வியாழக்கிழமை காலை 05.00 மணி முதல் 12.00 மணி வரையில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
எனவே இன்று வியாழக்கிழமை காலை 05.00 மணி முதல் 12.00 மணி வரையில் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
1. 28.11.2024 அன்று காலை 05.00 மணி முதல் மஹாகும்பாபிஷேகம் முடியும் வரை கங்காதீஸ்வரர் கோயில் தெரு வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
2. மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து கங்காதீஸ்வரர் கோயில் தெருவை நோக்கி வரும் வாகனங்கள் நேராக டவ்டன் பாலம் (அல்லது) சர்வீஸ் சாலை, டவ்டன் சந்திப்பு (வலது) ரிதர்டன் சாலை வழியாக ஈவிஆர் பெரியார் சாலையை அடையலாம்.
3. டவ்டன் சந்திப்பிலிருந்து கங்காதீஸ்வரர் கோயில் தெருவை நோக்கி வரும் வாகனங்கள் ஈவிஆர் பெரியார் சாலையை அடைய ரிதர்டன் சாலையில் திருப்பி விடப்படும்.
4. ஜெர்மியா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் டவ்டன் பாலத்தில் அனுமதிக்கப்படாது. அந்த வாகனங்கள் சர்வீஸ் ரோடு மற்றும் டவ்டன் சந்திப்பு வழியாக (இடது) ரிதர்டன் சாலைக்கு செல்லலாம்.
5. பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் இருந்து கங்காதீஸ்வரர் கோயில் தெருவை நோக்கி வரும் வாகனங்கள் இடதுபுறம் நாராயணகுரு சாலைக்கு சென்று (வலது) ஹன்டர்ஸ் சாலை, ஈவிகே சம்பத் சாலை, ஈவிஆர் பெரியார் சாலைக்கு திருப்பி விடப்படும். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மிக முக்கிய பகுதிகளில் ஒன்றாக புரசைவாக்கம் உள்ளது. வணிக நிறுவனங்கள் அதிகம் நிறைந்துள்ள புரசைவாக்கத்தில் எப்போதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும். இன்றைய தினம் கோயில் குடமுழுக்கு விழா காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் கூடுதல் வாகன நெரிசல் நிலவ வாய்ப்புள்ளது. எனவே பயணிகள் முன்கூட்டியே தங்களது பயணத்தை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications