நடிகை கௌதமி கொடுத்த நில மோசடி புகார்.. சென்னை, மதுரையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
சென்னை: தனது சொத்துகளை அழகப்பன் குடும்பத்தினர் அபகரித்ததாக நடிகை கௌதமி அளித்த புகாரின் பேரில், சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கௌதமியின் புகாரில் பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் ஹீரோயினாக நடித்தவர் கௌதமி. இவர், சினிமாவில் நடித்து சேர்த்த பணத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சொத்துகளை வாங்கி வைத்திருந்தார். 2004 ஆம் ஆண்டு கௌதமிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டபோது அவரது சொத்துகளை பராமரிப்பதற்காக பவர் ஆப் அட்டர்னியாக சினிமா படத் தயாரிப்பாளரும், பாஜக நிர்வாகியுமான சி.அழகப்பனை நியமித்திருந்தார்.

அதன்படி, 2004 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் சொத்தை விற்று செங்கல்பட்டு மாவட்டம், நீலாங்கரையில் வேறு சொத்தை அழகப்பன் வாங்கியுள்ளார். அந்த இடத்தை கௌதமி பெயரிலும் தனது மனைவி நாச்சியாள் பெயரிலும் பதிவு செய்திருந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு தனது சொத்துகள் மோசடி செய்யப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து நடிகை கவுதமி அளித்த புகாரின் பேரில், அழகப்பன், அவரது மனைவி நாச்சியாள், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, அழகப்பனின் சகோதரர் கே.எம்.பாஸ்கர், ஓட்டுநர் ஜி.சதீஷ்குமார் ஆகிய 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
சென்னையில் மட்டுமல்லாது திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராமநாதபுரம் என அழகப்பன் மூலம் நடிகை கௌதமியின் சொத்துகள் அபகரிக்கப்பட்ட இடங்களில் தனித்தனியாக நடிகை கௌதமி புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் தனித்தனியாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கௌதமி கொடுத்த புகாரின் பேரில் சென்னை, மதுரையில் அழகப்பனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
வழக்கில் பணப்பரிவர்த்தனைகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான கோணங்களில் விசாரணை நடத்த அமலாக்கத்துறை களமிறங்கியுள்ளது. இன்று காலை முதல் நடைபெற்று வரும் இந்த சோதனை நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications