தமிழக அரசு ஏன் இப்படி செய்தது? தமிழ் கலாச்சாரத்தின் வளர்ச்சி பிடிக்கவில்லையா? காயத்ரி கேள்வி
சென்னை: காசியில் நடந்த தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு திமுக ஏன் போகவில்லை, எனக்கு வருத்தமாக இருக்கிறது என பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
காசி தமிழ் சங்கமம் எனும் நிகழ்ச்சி மத்திய அரசு சார்பில் உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் கடந்த மாதம் 17ஆம் தேதி தொடங்கியது. இந்த விழா 30 நாட்கள் என திட்டமிட்டு டிசம்பர் 16ஆம் தேதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வுக்கு நாட்டில் உள்ள தமிழர்கள் ஒன்று கூடினர். இந்த நிகழ்வில் கருத்தரங்குகள், கலாச்சார பாரம்பரிய நிகழ்வுகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. காசி தமிழ் சங்கமத்திற்கு சென்னை ஐஐடியும் வாரணாசியில் உள்ள இந்து பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தின.

அறிவு சார்ந்த சங்கமம்
அறிவு சார்ந்த இந்த சங்கமத்தில் பங்கேற்க தமிழகத்திலிருந்து பலரும் சென்றிருந்தனர். ஆனால் இந்த நிகழ்வில் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. வாரணாசி நிகழ்வுக்கு தமிழ்நாடு அரசின் பங்கேற்பையும் உதவியையும் கூறி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதாக தெரிகிறது.

தமிழக அரசு
ஆனால் இந்த கடிதத்திற்கு தமிழக அரசிடம் இருந்து எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என தெரிகிறது. மேலும் தமிழ் தொடர்பான இந்த நிகழ்வில் தமிழக அரசு பங்கேற்காதது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானது. தமிழக அமைச்சர்கள் கூறுவது என்னவெனில், இது சங்கம் கிடையாது, சங்கமம் தான், அதாவது தமிழர்கள் ஒன்று கூடுவது. இதில் தமிழக அரசு ஏன் கலந்து கொள்ள வேண்டும்?

இந்தி திணிப்பு
இந்தி திணிப்பை செய்யும் மத்திய அரசு எங்கோ வடமாநிலத்தில் தமிழை வளர்த்து என்ன செய்ய போகிறார்கள் என கேள்வி எழுப்பினர். நேற்றைய தினம் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான இறுதி விழா நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். ஆனால் தமிழக அரசு இந்த விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

காயத்ரி ரகுராம்
இதுகுறித்து பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் கூறியிருப்பதாவது: தமிழ் மொழி, தமிழ் ஆன்மிகம், தமிழ் கலாச்சாரம், தமிழ் கலை மற்றும் கலைஞர்கள், தமிழ் விளையாட்டுகளை காசியுடன் இணைத்து கௌரவித்ததற்கு நன்றி. மிக நீண்ட காலத்தில் நடந்த சிறந்த விஷயம். நன்றி.

ஆன்மீகம் காரணமா
இதில் பங்கேற்ற அனைத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், ஆட்சியர்களுக்கு மற்றும் தலைவர்கள் நன்றி. திமுக அரசு அக்கறை காட்ட தவறியது ஏன்? ஆன்மீகம் காரணமா? அல்லது வடக்கோடு இணைக்க விரும்பவில்லையா? அல்லது பரவலான தமிழ் கலாச்சாரத்தின் வளர்ச்சி பிடிக்கவில்லையா?

வருந்திய காயத்ரி
காசி தமிழ் சங்கமம் முதல் அனுபவத்தை தவறவிட்டேன். நான் இன்னும் வருத்தமாக உணர்கிறேன். எனது அணிக்காகவும் நான் வருத்தப்படுகிறேன். ஓம் நமசிவாய என தனது ட்விட்டரில் காயத்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார். தமிழ் வளர்ச்சி கலாச்சார பிரிவின் பாஜக தலைவராக இருந்தவர் காயத்ரி ரகுராம். கடந்த மாதம் நடந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவரான தன்னை அழைத்து செல்லவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீதான அதிருப்தியை தெரிவித்திருந்தார் காயத்ரி. மேலும் டெய்சி சரணுக்கும் திருச்சி சூர்யாவுக்கும் இடையேயான ஆபாச உரையாடலுக்கு கண்டனத்தையும் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications