விஜய், சீமான் கையில் உள்ள GEN Z வாக்குகள்.. உதயநிதியின் புது வியூகம்.. திமுகவுக்கு பலன் கிடைக்குமா?
சென்னை: சட்டசபைத் தேர்தலில் விஜய் மற்றும் சீமான் பெரும்பாலான வாக்குகளை கவர்வதற்கு வாய்ப்புகள் இருப்பதால், திமுக உடனடியாக புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏராளமான கல்லூரிகளில் மாணவர் மன்றங்களை திறக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டு, செயல்படுத்தி வருகிறார். இதனால் Gen Z வாக்காளர்களை அரசியல்படுத்தவும் திமுக திட்டமிட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருப்பதால், திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. ஏற்கனவே கூட்டணியை இணக்கமாக வைத்திருக்கும் சூழலில், கூடுதலாக சில கட்சிகளை தங்கள் பக்கம் கொண்டு வரவும் காய்களை நகர்த்தி வருகிறது. இருப்பினும் திமுகவுக்கு மிகப்பெரிய தலைவலியாக விஜய் மற்றும் சீமான் உருவாகி இருக்கின்றனர்.

ஏனென்றால் ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் சீமான் மற்றும் விஜய் இருவரும் பிரிக்கும் வாக்குகளே வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் என்பது தெரிய வந்துள்ளது. அதேபோல் ஒவ்வொரு தேர்தலிலும் சீமானின் வாக்கு சதவிகிதம் உயர்ந்து கொண்டே போகிறது. 2021 சட்டசபைத் தேர்தலில் 6.2 சதவிகிதமாக இருந்த நாதகவின் வாக்குகள், லோக்சபா தேர்தலில் 8.2 சதவிகிதமாக உயர்ந்தது.
அதேபோல் விஜய்க்கு கூடும் இளைஞர்கள் கூட்டம் அரசியல் கட்சியினர் மத்தியில் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதிலும் பெருவாரியாக இளைஞர்கள் தவெகவுக்கு ஆதரவாக இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. இதனிடையே திமுக தரப்பில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் சீமான் வாக்கு சதவிகிதத்தை தக்க வைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வந்திருக்கிறது.
இதனால் திமுக தலைமை உடனடியாக GEN Z வாக்காளர்களை கவர புதிய வியூகம் அமைத்திருக்கிறது. அதனடிப்படையில் தான் திமுக இளைஞரணி சார்பாக வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்ட அறிவுத் திருவிழாவாகும். அதனை தமிழ்நாடு முழுக்க கொண்டு செல்ல உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். அதேபோல் கல்லூரிகளில் மாணவர் தமிழ் மன்றங்கள் திமுக சார்பாக தொடங்கப்பட்டு வருகின்றன.
இது கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கையில் வைத்துள்ள ஃபார்முலா.. அதாவது இளைஞர்கள் அரசியல்படுத்த வேண்டிய அவசியத்தை திமுக உணர்ந்துள்ளது. ஏற்கனவே சென்னையின் பல்வேறு கல்லூரிகள் திமுக சார்பாக மாணவர் மன்றம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதனை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்திக்கு உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதற்கான பணிகளை இளைஞரணி நிர்வாகிகளும் தீவிரப்படுத்தி இருக்கின்றனர். மாணவர் மன்றங்கள் மூலமாக சமூகநீதி அரசியலின் முக்கியத்துவம், திராவிட அரசியல் வரலாறு ஆகியவற்றை பிரச்சாரமாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக மாணவர்களை அரசியல்படுத்தி திமுகவிலும் இணைக்க திட்டமிட்டிருக்கிறது.
இதனால் GEN Z வாக்காளர்களின் முக்கியத்துவத்தை திமுக தலைமை உணர்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. விஜய் தனது பேச்சிலேயே GEN Z வாக்காளர்கள் என்று பேச தொடங்கிவிட்டதால், உதயநிதி ஸ்டாலின் இன்னும் தீவிரமாக பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறார். திமுகவின் இந்த செயல்பாடுகளுக்கு உடனடி பலன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications