தான பத்திரம், பவர் பத்திர சொத்துக்கள்.. சென்னையில் ரூ.3.66 கோடி நிலம்.. போலி ஆவணம் இவரா தயாரித்தார்?
சென்னை: போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலமோசடி நடந்துள்ளது.. பொது அதிகாரப்பத்திரம், செட்டில்மென்ட் ஆவணம், தான பத்திரம், பத்திரப்பதிவு, இப்படி அனைத்துமே போலியான ஆவணங்களை வைத்து நடந்துள்ளது. இதையடுத்து, தீவிரமான விசாரணைக்கு பிறகும், தேடுதல் வேட்டைக்குப்பிறகும், சம்பந்தப்பட்ட 2 பேரையுமே கைது செய்து, புழல் ஜெயிலில் அடைத்துள்ளார் போலீசார். சென்னையில் என்ன நடந்தது தெரியுமா?
தமிழகத்தில் போலியான பத்திரங்களை, அச்சு அசல் ஒரிஜினல் போலவே தயார் செய்கிறார்கள் சில மோசடிப்பேர்வழிகள்.. இந்த போலி பத்திரங்களை வைத்துக்கொண்டு, நில அபகரிப்பு முதல் லஞ்சம் பெறுவது வரை ஏராளமான குற்றச்செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

மோசடி பத்திரங்கள்
இதன்காரணமாக பத்திரங்களை பதிவதிலும், மோசடிகள் பெருகிவருகின்றன. இவைகளை களைவதற்கான முயற்சியில் தமிழக பதிவுத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எனினும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதோ சென்னையிலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.
சென்னை ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில், அண்ணாநகரை சேர்ந்த ஜெயசந்திரன் என்ற 33 வயது நபர், கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் ஒன்றை தந்திருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, "நான் வேர்அவுஸ் தொழில் செய்து வருகிறேன். என்னுடைய வீட்டின் அருகே குடியிருந்து வரும் பராக்சூடா என்பவர் மூலம் சுரேந்தர் என்பவர் அறிமுகமானார்.
தான செட்டில்மென்ட்
சுரேந்தர் என்பவர் பொது அதிகாரம் பெற்ற திருமுல்லைவாயல் பாலாஜி நகரில் 7,200 சதுர அடி இடம் உள்ளது. அவரிடம் விலைபேசி மேற்படி இடம் ரூ.3.66 கோடிக்கு பேசி அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் எனது தந்தை அருணாச்சலம் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதில் 3,600 சதுரடி இடத்தை உண்மையான உரிமையாளரான உமையாள் போல் ஆள்மாறாட்டம் செய்து உமையாள் (எ) ராணி என்பவர் கோவை மாவட்டம் பல்லடம், மீனாம்பாறை பகுதியைச் சேர்ந்த பவானி (எ) பூங்கொடி (45) என்பவருக்கு போலியான தான செட்டில்மென்ட் கொடுத்துள்ளார்.
போலியான தான செட்டில்மென்ட்டை வைத்து பவானி (எ) பூங்கொடி சுரேந்தர் என்பவருக்கு பொது அதிகாரம் கொடுத்துள்ளார். சுந்தரேசன் என்னுடைய அப்பா அருணாச்சலத்திற்கு விற்பனை செய்து மோசடி செய்துள்ளார்.
பொது அதிகார பத்திரம்
மேற்படி போலியான செட்டில்மென்ட் ஆவணம் மற்றும் போலியான பொது அதிகார பத்திரம் ஆகியவற்றை முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டியராஜனின் உதவியாளர் முத்து பாண்டியனின் அண்ணனான விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து (52) போலி பத்திரம் தயார் செய்து கொடுத்து, அதை விருதுநகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய உடந்தையாக செயல்பட்டுள்ளார்.
மேற்படி இடத்தில் காம்பவுண்ட் சுவர் கட்ட செல்லும்போது அடையாளம் தெரியாத ஒருநபர், மேற்படி இடம் நாராயணன் என்பவருக்குச் சொந்தமானது என்றும், அந்த இடத்தை தரை வாடகைக்குதான் வாங்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
போலியான ஆவணங்கள்
வேறு ஒருவருக்குச் சொந்தமான சொத்தை முன்னாள் அமைச்சரின் உதவியாளரின் அண்ணன் கூட்டு சேர்ந்து போலியான ஆவணங்கள் தயாரித்து மற்றும் போலியான நபர்களை வைத்து எனக்கு விற்பனை செய்து சட்ட விரோத லாபம் அடைந்துள்ளார். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த புகாரின்பேரில், ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் தேடிவந்தனர். இறுதியில், கோயம்புத்தூர் பல்லடம் பகுதியைச் சேர்ந்த பவானி (எ) பூங்கொடி (45) மற்றும் விருதுநகர் மாவட்டம், சிவகாசி திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து (52) ஆகிய 2 பேரையும் கைது செய்து , புழலில் அடைத்துள்ளனர். மோசடி சம்பவத்தில் பெண் உட்பட மாஜி அமைச்சர் உதவியாளரின் அண்ணனும் சம்பந்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications