வரும் காலம் வசந்த காலமாக அமையட்டும்! புத்தொளி பிறக்கட்டும்! ஜிகே வாசன் புத்தாண்டு வாழ்த்து!
சென்னை: வரும் காலம் வசந்த காலமாக அமையட்டும் என்றும் புத்தொளி பிறக்கட்டும் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், நேர்மையான, வெளிப்படையான, ஊழலற்ற, நல்லாட்சி நடைபெற மத்திய மாநில அரசுகள் உறுதி ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து வருமாறு;

2024 ஆங்கிலப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் அனைவருக்கும் வரும் காலம் வசந்த காலமாக அமைய வேண்டும். குறிப்பாக அனைவரது வாழ்க்கையில் இன்பம் பெருகவும், துன்பங்கள் நீங்கவும் புத்தொளி பிறக்கட்டும். அனைத்து தரப்பு மக்களிடையே நட்புணர்வு, சகோதரத்துவம், ஒற்றுமை மேம்பட வேண்டும்.
கடந்தகால இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட துயரங்கள், இழப்புகள், பாதிப்புகள் இனி ஏற்படாமல் இருக்க இப்புத்தாண்டு நல்ல சூழலை ஏற்படுத்தட்டும்.மனித இனம் உயிர் வாழ அடிப்படையான, அத்தியாவசியமான, இன்றியமையாத விவசாயத் தொழில் வளம்பெற வழி பிறக்கட்டும்.
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான புத்தாண்டாக இப்புத்தாண்டு பிறக்க வேண்டும். நேர்மையான, வெளிப்படையான, ஊழலற்ற, நல்லாட்சி நடைபெறவும், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வு மேம்படவும் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் மத்திய மாநில அரசுகளும், பொது மக்களும் உறுதி ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்.
வளமான தமிழகம், வலிமையான பாரதம் உருவாகும் வகையில், உலக நாடுகளின் ஒற்றுமை மேலோங்கும் வகையில் இப்புத்தாண்டு அமைய வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நாட்டு மக்கள் அனைவருக்கும் 2024 புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications