பக்கத்து தெருவுக்கு போனால் கூட அபராதம் வசூல்! போக்குவரத்து போலீஸ் செய்வது நியாயமில்லை -ஜி.கே.வாசன்
சென்னை: பக்கத்து தெருவுக்கு போனால் கூட அபராதம் வசூலிக்கும் போக்குவரத்து போலீஸாரின் செயல்பாடு நியாயமற்றது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது என்றும் ஆனால் அதற்காக பக்கத்து தெருவுக்கு கூட மக்களை செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி பைன் போடுவது ஏற்கதக்கத் தல்ல எனவும் கூறியுள்ளார்.
கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் போக்குவரத்து போலீஸார் காட்டும் கெடுபிடியால் வாகன் ஓட்டிகள் வேதனையும், கலக்கமும் அடைந்துள்ளனர்.

போக்குவரத்து போலீஸார்
ஹெல் மெட் போடாதவர்கள், இன்ஸ்யூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், சீட் பெல்ட் அணியாதவர்கள் என கடந்த 2 நாட்களாக போக்குவரத்து போலீஸார் விரட்டி விரட்டி சோதனை செய்து அபராதத் தொகை வசூலித்து வருகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், ஹெல்மெட் விலையை காட்டிலும் அபராதத் தொகை அதிகம் இருப்பது தான்.

ஜி.கே.வாசன் அதிருப்தி
இதேபோல் 46 வகையான விதிமீறல்களை உருவாக்கி ஒவ்வொன்றுக்கும் அபராதத் தொகை தனித் தனியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், போக்குவரத்து போலீஸாரின் செயல்பாடு கொஞ்சம் கூட நியாயமற்றது என்றும் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது என்றும் ஆனால் அதற்காக பக்கத்து தெருவுக்கு கூட மக்களை செல்லவிடாமல் தடுத்து நிறுத்துவதை ஏற்க முடியாது எனவும் அனல் கக்கினார்.

அபராதத் தொகை
பொதுமக்களில் நிறைய பேருக்கு இந்த அபராதத் தொகை பற்றியே தெரியவில்லை என்றும் இது குறித்து முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்தி கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அரசை அவர் கேட்டுக் கொண்டார். ஃபைன் என்ற பெயரில் மக்களை சங்கடப்படுத்தும் வேலைகளில் போக்குவரத்து போலீஸ் ஈடுபடக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜி.கே.வாசன். ஏற்கனவே மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வால் அல்லல் படும் மக்களுக்கு புது புது நடவடிக்கைகள் பெரும் சுமையை தருவதாக கவலை தெரிவித்தார்.

2 நாட்களாக
கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் போக்குவரத்து போலீஸார் சோதனையை தீவிரப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஜிகே வாசன் சொல்வதை போல் முதற்கட்டமாக மக்களுக்கு விதிமீறல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டு கால அவகாசம் கொடுத்து அபராதம் வசூலிக்கலாம் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.