அக்னிபாத் திட்டத்தை கொச்சைப்படுத்துவதா..? ப.சிதம்பரத்துக்கு எதிராக வரிந்து கட்டி வந்த ஜிகே வாசன்!
சென்னை: அக்னிபாத் திட்டத்தை கொச்சைப்படுத்துவதா என ப.சிதம்பரத்துக்கு எதிராக வரிந்துக் கட்டியிருக்கிறார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்.
இளைஞர்களுக்கு அரசியல் தலைவர்கள் நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை அவர்களிடம் தவறான கருத்துக்களை கொண்டு சேர்க்க வேண்டாம் என வாசன் கேட்டுக்கொண்டார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

மா.பொ.சி. சிலை
எல்லை காத்த வீரர் என்றழைக்கப்படும் மா.பொ.சிவஞனத்தின் 117-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஜி.கே.வாசன், அக்னிபாத் திட்டம் குறித்து தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாக வேதனைத் தெரிவித்தார். அக்னி பாத் திட்டத்துக்கு ஆதரவாக பேசுவதில் பாஜகவினரையே பின்னும் தள்ளும் வகையில் வாசன் பேசினார்.

ராணுவத்தின் மதிப்பு
ராணுவத்தின் மதிப்பை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட ஜி.கே.வாசன், இளைஞர்களின் நல்வாழ்வுக்கு யாரும் இடையூறாக நிற்க வேண்டாம் எனக் கோரினார். இளைஞர்களுக்கு நல்லது செய்கிறோம் என்ற பெயரில் அவர்கள் மத்தியில் தவறான தகவல்களை கொண்டு சேர்ப்பது மோசமான செயல் என்று கூறிய வாசன், அக்னி பாத்தை கொச்சைப்படுத்தி பேசுவது நாட்டு நலனுக்கு நல்லதல்ல என வாசன் தெரிவித்தார்.

போதைப் பொருள்
போதைப் பொருட்கள் தடுப்பு தொடர்பாக அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனக் கூறிய வாசன், பள்ளி , கல்லூரி மாணவர்கள் மத்தியில் இத்தகைய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். முன்னதாக பேசிய வாசன், சென்னையை ஆந்திராவுடன் இணைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து தலைநகரை காத்த மா.பொ.சி.க்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
Recommended Video

வாசன் செயல்பாடு
இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும் போது தான் ஜி.கே.வாசனை காண முடிகிறது. மற்ற நேரங்களில் எல்லாம் அவர் என்ன செய்கிறார் என்றே தெரியாத அளவுக்கு இருக்கும் இடம் தெரியாமல் அமைதி காத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications
