சர்க்கரை அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்.. ரேஷனில் இனி இந்த பொருளை தாராளமாக பெறலாம்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: ரேஷன் கடைகளில் கோதுமைக்கு தட்டுப்பாடு வந்துவிடுமோ என்ற லேசான கலக்கம் சூழ்ந்து வந்த நிலையில், தற்போது மகிழ்ச்சி தகவல் ஒன்றை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. பண்டிகை நேரத்தில் இப்படியொரு அறிவிப்பு வந்திருப்பது, ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நம்பிக்கையை தந்து கொண்டிருக்கிறது.
கோதுமை ஒதுக்கீட்டை பொறுத்தவரை, தமிழகத்துக்கு 1,038 டன்னாக இருந்த அளவினை மத்திய அரசு, கடந்த வருடம் திடீரென குறைத்துவிட்டது. பிறகு, தமிழக அமைச்சர்கள் நேரடியாகவே டெல்லி சென்று, மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசியதையடுத்து, 8500 டன் கோதுமையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
இதற்குபிறகு, கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.. இந்த கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்று, தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை, மாதம் 8,500 டன்னில் இருந்து, 17,100 டன்னாக அதிகரித்து, மத்திய அரசு உத்தரவிட்டது.

மத்திய அரசு: கோதுமையை உயர்த்தி வழங்குமாறு, மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன், உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, செயலர் ராதாகிருஷ்ணன், உணவு வழங்கல் துறை இயக்குனர் மோகன் உள்ளிட்ட அதிகாரிகளும் மத்திய அரசை வலியுறுத்தியதையடுத்து, இந்த கோதுமையை மத்திய அரசு அதிகரித்து உத்தரவிட்டிருந்தது.. எனவே, இந்த கோதுமை இந்த மாதம், 24ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதாக தகவல்களும் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் இம்மாதம் முதல் கூடுதல் கோதுமை வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி நம்பிக்கை தகவல் வெளியிட்டிருக்கிறார்.. திண்டுக்கல் அருகே வடகாட்டில் புதிய ஊராட்சி அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த பின் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் பேசினார்..
கோதுமை ஒதுக்கீடு: அப்போது அவர் சொல்லும்போது, தமிழ்நாட்டுக்கு 25,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்தோம். அதன் பயனாக தற்போது 17,100 மெட்ரிக் டன் கோதுமை வழங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்த மாதம் முதல் கூடுதல் கோதுமை நியாயவிலைக் கடைகளுக்கு வந்து சேரும். தகுதியானோர் விண்ணப்பித்தால் 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது.
தமிழகத்தை இன்னும் 10 ஆண்டுகளில் குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், ஏழை, எளிய மக்களுக்கு காங்கிரீட் வீடுகளை கட்டி வழங்கும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8 லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது. அதில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளன.
விளையாட்டு மைதானம்: இளைஞர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில் ஆத்தூர் மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தலா ஒரு விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வருக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
நிம்மதி தகவல்: இப்படி ஒரு மகிழ்ச்சி தகவலை அமைச்சர் வெளியிட்டிருப்பதால், ரேஷன்தாரர்களுக்கு கோதுமை பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் துவங்க உள்ள நிலையில், தமிழக அரசு அறிவித்திருக்கும் இந்த அறிவிப்பானது, குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிம்மதியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications