”உபிக்கு ஆளுநரா போய் திருத்துங்க!” - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா அட்வைஸ்
சென்னை: அக்னிபாத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரப்பிரதேசத்துக்கு ஆளுநராக சென்று அங்குள்ள மாணவர்களை திருத்துமாறு திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற பெயரில் புதிய துறையை உருவாக்கி இருக்கும் மத்திய அரசு, அக்னிபாத் என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறது.
இத்திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் அக்னி வீர் என்ற பெயர் கொண்ட வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

அக்னிபாத்
17.5 முதல் 21 வயதுக்கு உட்பட்ட 45 ஆயிரம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட இருக்கிறது. இவர்களுக்கு 6 மாத பயிற்சியளிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஒப்பந்த பணி வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்கு பின் 25% பேருக்கு மட்டும் 15 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் பணி வழங்கப்படும். மீதம் உள்ள 75 சதவீதம் பேர் எந்தவிதமான ஓய்வூதிய பலனும் இன்று பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். எதிர்ப்பை தொடர்ந்து இந்த வயது வரம்பு 23 ஆக அதரிக்கப்பட்டது.

போராட்டமும் வன்முறையும்
இந்த புதிய திட்டத்துக்கு ராணுவத்துக்கு தயாராகி வரும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பீகார், உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளனர். தெலுங்கானா, உபி, பீகாரில் ரயில்களுக்கு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தீ வைத்தனர். பல இடங்களில் பாஜக அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இளைஞர்கள் குமுறல்
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணிகள் நடைபெறவில்லை. ராணுவ பணிக்காக 2 ஆண்டுகளாக பலர் காத்துள்ள நிலையில், ராணுவம் வயது வரம்பை தளர்த்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு கூட 5 ஆண்டுகள் வழங்கப்படும்போது வெறும் 4 ஆண்டுகளை கொண்டு எங்களால் என்ன செய்ய முடியும்? மத்திய அரசின் இந்த திட்டம் இளைஞர்களை முட்டாள்களாக்குவதாகும் என இளைஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆதரவு
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வ.உ.சி.யின் 150 வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "அக்னிபாத் ஒரு புரட்சிகரமான திட்டம். 17 வயது மாணவர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சியளிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. வருமானத்துடன் பயன் தரும் திட்டம் இது. இதை தவறாக புரிந்துகொண்டு இளைஞர்கள் அரசு பொருட்களை சேதப்படுத்துகின்றனர்." என்றார்.

திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா
தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்த கருத்து குறித்து தனியார் ஊடக வெளியிட்டுள்ள செய்தி படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, "அதுக்கு தான் சொல்றோம் நீங்க உடனடியாக உத்தர பிரதேசத்துக்கு கவர்னர் பொறுப்பு வாங்கிட்டு அங்க போய் கருத்து சொல்லி அந்த புள்ளைங்கள திருத்துங்க." என்று விமர்சித்து இருக்கிறார்.











Click it and Unblock the Notifications