“அன்பே சிவம்.. அறிவே பலம்” - திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு விவகாரத்தில் கமல் கருத்து!
சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது. பொது அமைதிக்கும் மதநல்லிணக்கத்துக்கும் ஊறு விளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது. அன்பே சிவம், அறிவே பலம்." எனத் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவைத் தொடர்ந்து, கார்த்திகை தீபத் திருநாளான நேற்று முன்தினம் (டிசம்பர் 3), திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் ஏற்றாமல் உச்சிப் பிள்ளையார் கோயிலில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்று இந்து அமைப்பினர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், போலீசார் உள்பட பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, போராட்டம் செய்த இந்து அமைப்பினரை போலீசார் கைது செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையடுத்து மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராம ரவிக்குமார் நேற்று முன்தினம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, மதுரை ஆட்சியரின் 144 தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், திருப்பரங்குன்றம் தர்கா அருகே உள்ள தீபத்தூணில் உடனே தீபம் ஏற்ற வேண்டும் என்றும், உத்தரவை நிறைவேற்றிய நகலை நாளை (அதாவது இன்று) காலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். பரபரப்பான சூழலில் பாஜக, இந்துத்வ அமைப்பினர் ஏராளமானோர் திருப்பரங்குன்றத்துக்கு வருகை தந்தனர்ர். அப்போது, 144 ரத்து உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்வதால் அனுமதிக்க முடியாது எனக் கூறி தடுத்து நிறுத்தினர்.
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக எம்.பிக்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டிசை வழங்கினர். மாநிலங்களவையில் திருச்சி சிவாவின் வேண்டுகோளுக்கு மாநிலங்களவை தலைவர் சிபி ராதாகிருஷ்ணனன் அனுமதி மறுத்ததால் திமுக கூட்டணி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரம் தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பிவிட்டுள்ளது.
இந்நிலையிலையில் மாநிலங்களவை எம்.பி கமல்ஹாசன் தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது. பொது அமைதிக்கும் மதநல்லிணக்கத்துக்கும் ஊறு விளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது. அன்பே சிவம், அறிவே பலம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications