அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி!
சென்னை: திருப்பரங்குன்றம் கோயிலில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தரிசனம் செய்தபோது, மரபை மீறி கோயில் நடை திறந்து வைக்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை என்று கூறியிருக்கிறது.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் நடை, வழக்கமாக நண்பகல் 1 மணிக்கு அடைக்கப்படும். இப்படி இருக்கையில் அமைச்சர் தரிசனத்தின்போது மரபை மீறி கோயில் நடை அடைக்கப்படாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் கூறியிருக்கும் கருத்து கவனம் பெற்றிருக்கிறது.
என்ன நடந்தது?

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கடந்த மே 15ம் தேதி திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். தரிசனத்தின்போது பக்கதர்களின் வழிபாட்டை தொந்தரவு செய்யும் விதமாகவும், அமைச்சரின் தரிசனத்திற்காக வேண்டும் என்றே மரபை மீறி, கூடுதல் நேரம் நடை திறந்து வைக்கப்பட்டிருந்ததாகவும் புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து சிறப்பு தரிசன கட்டணம் குறித்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்தமுறை விசாரணையின்போது இந்த விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இன்று மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றபோது அறநிலையத்துறை செயலாளர் அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.
அதேபோல, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் ஆஜராகியிருந்தார். கோயில் நடை அடைப்பதற்கு முன்னரே அமைச்சர் கோயிலுக்கு சென்றுவிட்டதாகவும், இதற்கான சிசிடிவி காட்சிகள் ஆதாரமாக தங்களிடம் இருப்பதாகவும் பாலசுப்பிரமணியன் கூறியிருந்தார். நண்பகல் 1 மணிக்குதான் கோயில் நடை அடைக்கப்படும் என்றும், ஆனால் 12.50 மணிக்கே அமைச்சர் உள்ளே நுழைந்துவிட்டதாகவும், இதனால் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பாலசுப்பிரமணியன் விளக்கமளித்திருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் யாரையும் தர்ம சங்கடத்தில் ஆழத்த விரும்பவில்லை என்றும், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை என்றும் நீதிபதிகள் கூறியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications