தங்க நகை அடகு.. 72 பைசா வட்டி.. நம்ப முடியாத அளவிற்கு கிராமுக்கு 9200 வரை தரும் வங்கிகள்
சென்னை: தங்க நகையை அடகு வைத்து தான் இன்று பலர் தொழில் தொடங்குகிறார்கள். தங்க நகைகளை அடகு வைத்து தான் திருமணம் நடத்தி வைக்கிறார்கள். பல்வேறு சுபகாரியங்களை மேற்கொள்கிறார்கள். சிலர் தங்க நகைகளை அடகு வைத்துதான் வீடு வாங்குகிறார்கள். சிலர் தங்க நகைகளை அடகு வைத்து தான் நிலம் வாங்குகிறார்கள். பல்வேறு மருத்து அவசர தேவைக்கும் தங்கம் உதவி வருகிறது. அப்படிப்பட்ட தங்க நகையை சரியான இடத்தில் அடகு வைக்க வேண்டும். தங்க நகைக்கு நம்ப முடியாத அளவிற்கு கிராமுக்கு 9200 வரை தரும் வங்கிகள் பற்றி பார்ப்போம்.
தங்க நகை இருந்தால் போதும், உங்களுக்கு சிபில் ஸ்கோர்தேவையில்லை. மாத வருமானம் இவ்வளவு இருக்க வேண்டும் என்ற விதியும் இல்லை.. எந்த பிணையும் வங்கிகள் கேட்காது. தங்க நகையை கொண்டு போனால் உங்களுக்கு சில நிமிடங்களில் பணம் கைக்கு கிடைக்கும். இந்தியாவில் தங்கத்தை மட்டுமே பிணையாக வைத்து எளிதாக கடன் பெற முடியும். தங்க நகைக்கடன் என்பது மற்ற கடன்களை விட இப்போது அதிகமாகிவிட்டது. பலரும் தங்க நகையை அடகு வைத்து பணம் வாங்குகிறார்கள். ஆனால் தங்க நகையை அடகு வைப்போர், சரியான இடத்தில் வைத்தால் மிகக்குறைந்த வட்டியில் அதிக பணம் பெறலாம்.

தங்க நகைகளை அவசர தேவை மிக அதிக பணம் தேவைப்படுகிறது என்றால் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் போய் வைக்கிறார்கள். ஆனால் தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், அதிக பணத்தை தங்கத்தை நம்பி தந்தாலும், 22 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறார்கள். தனியார் வங்கிகளில் குறைந்த பட்சம் 10.50 சதவீதம் முதல் 16 சதவீதம் வரையில் உள்ளன. சில தனியார் நிதி நிறுவனங்களில் 22 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றன.
அதேநேரம் வங்கிகளை விடவும் மிகமிக அதிகமான தொகையை தனியார் நிதி நிறுவனங்கள் தருகின்றன. இதனால் ஏழை மக்கள் பலர் தங்க நகை அடகு வைத்து அதிக பணம் பெறலாம் என்ற ஆசையில், அதிக கடனுக்கு, தினசரி வட்டியில் அடகுவைத்து நகைகளை பறிகொடுக்கிறார்கள். 1 லட்சத்திற்கு ஒரு நகையை 22 சதவீதம் வட்டியில் வைத்தால், ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 602 ரூபாய் மொத்தம் கட்ட வேண்டியதிருக்கும். ஒட்டுமொத்தமாக வட்டி மட்டுமே 24,602 ஆக இருக்கும். அதேபோல் அசலை ஓராண்டு முடிவில் செலுத்திவிட்டு, வட்டியை மட்டும் மாதம் மாதம் செலுத்தினால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் தோராயமாக ₹ 1,833.33 கட்ட வேண்டியிருக்கும். ஒரு கட்டத்தில் கட்ட முடியாமல் நகையை பறிகொடுக்கும் நிலை வர வாய்ப்பு உள்ளது.
எனவே தனியாருக்கு பதில் பொதுத்துறை வங்கிகளில் வைத்தாலே அதிக பணத்தை பெற முடியும். எந்தெந்த வங்கிகளில் வட்டி எவ்வளவு, எந்த அளவிற்கு பணம் தருகிறார்கள் என்பதை பார்ப்போம். கனரா வங்கி, எஸ்பிஐ, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் பரோடா போன்ற பொதுத்துறை வங்கிகளில் வட்டி மிக குறைவாகவே இருக்கும். இந்த வங்கிகளில் கிராமுக்கு 7155 முதல் 7700 வரை தருகின்றன. தங்க நகை விலையை பொறுத்து தினரி சற்று மாறுபடலாம்.
அதேநேரம் எல்லா வங்கிகளும் விவசாயத்திற்கு நகைக்கடன் என்றால் மிக அதிகபணம் தருகின்றன. இந்தியன் வங்கி உள்பட சில வங்கிகள் கிராமுக்கு 9200 வரை தருகின்றன. வட்டி விகிதம் வெறும் 72 பைசா தான். அதாவது 8.64% சதவீதம் வட்டியில் கடன் தருகின்றன. ஒரு லட்சம் நீங்கள் கடன் வாங்கிய பின்னர் மாதம் மாதம் 8 ஆயிரம் கட்டினால். 14 மாதத்தில் கடனை நெருக்கி முடிந்துவிடும். 14 வது மாதத்தில் மிககுறைந்த பணம் கட்ட வேண்டியதிருக்கும். குறைந்த வட்டியாக ₹5,910.64 மட்டுமே இருக்கும். தனியார் 22 சதவீத வட்டியில் வாங்கினால் வட்டியாக மட்டுமே 24 ஆயிரம் கட்டியிருப்பீர்கள். எனவே தங்க நகையை அடகு வைக்கும் போது, பொதுத்துறை வங்கிகளில் அடகு வைக்கலாம்.












Click it and Unblock the Notifications