நகைக்கடன் வேணுமா? கூட்டுறவு வங்கிகளில் வருகிறது சூப்பர் வசதி.. தமிழக அரசின் சர்ப்ரைஸ்.. இனி நிம்மதி
சென்னை: சென்னை, கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில், 10 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில், நகைக்கடன் வழங்க வசதியாக, பாதுகாப்பு பெட்டகங்கள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில், ஏழை எளிய மக்களுக்கு நியாயமான வட்டியில், வீட்டுக் கடன்கள் வழங்குவதற்காகவே மொத்தம் 680 வீட்டுவசதி சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன..

நிதி நிலைமை: இவைகளில் நிதி நிலைமை மேம்பட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள், இப்போதைய சூழலுக்கு ஏற்றபடி புதிய கடன்களை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.. அந்தவகையில், வீட்டுக்கடன் மட்டுமின்றி, நகைக் கடன்களையும் இந்த சங்கங்கள் வழங்கி வருகின்றன.
நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் அவசர தேவைக்காக அவர்களிடம் உள்ள தங்க நகைகளுக்கு ஈடாக இந்த கடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் நகைகடன் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கு இந்த நகைகடன் திட்டம் பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.
கூட்டுறவு துறை: அதுமட்டுமல்ல, 2024-2025 நிதியாண்டில் நகைக்கடன் 43 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயம் செய்து கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அதாவது, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மூலம் நகைக்கடன் 3 ஆயிரம் கோடி ரூபாயும், மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் நகைக்கடன் 15 ஆயிரம் கோடி ரூபாயும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் நகைக்கடன் 25 ஆயிரம் கோடி ரூபாயும் என மொத்தம் 43 ஆயிரம் கோடி ரூபாய் நகைக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.
என்ன காரணம்: இப்படிப்பட்ட சூழலில், நகைக்கடன் தர வசதியாக வீட்டு வசதி சங்கங்களில் பாதுகாப்பு பெட்டக வசதிகள் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது, முறையான பாதுகாப்பு பெட்டக வசதி இருக்கும் சங்கங்களில் மட்டுமே, தற்போது நகைக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், மற்ற சங்கங்களில் நகைக்கடன் வழங்க அனுமதி இருந்தாலும், நகைகளை பாதுகாப்பாக வைப்பது என்பது சிக்கலை தந்துவிடுகிறது..
எனவே, நகைக்கடன் பெறுவதில், பொதுமக்களும் ஏராளமான இடர்பாடுகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடுகிறது. இத்தகைய சிக்கல்களை சரிசெய்வதற்காகவே, அந்தந்த சங்கத்திலேயே பாதுகாப்பு பெட்டகங்களை தமிழக அரசு அமைக்க போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பாதுகாப்பு பெட்டகம்: வீட்டுவசதி சங்கங்களில் வணிக நடவடிக்கைகளை மேம்படுத்த தேவையான வசதிகளை செய்யப்பட்டு வருகின்றனவாம்.. அந்தவகையில், சென்னை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர் என 5 மாவட்டங்களிலுள்ள, 10 வீட்டு வசதி சங்கங்களில், பாதுகாப்பு அறை மற்றும் பெட்டக வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், இந்த பணிகளை, 57 லட்சம் ரூபாயில் மேற்கொள்ள அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் பணிகள் துவங்க உள்ளதாகவும் கூட்டுறவு வீட்டுவசதி துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications