நகைக்கடன்.. தங்கத்தை அடமானம் வைக்கும்போது கவனம் மக்களே.. சென்னையில் 238 பவுன் தங்கம் கற்பித்த பாடம்
சென்னை: எப்போதுமே அடமான நகைகளை வங்கி அல்லது நிதி நிறுவனங்களுக்கு வைத்து கடன் பெறும்போது, அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையை முழுமையாக சரிபார்க்க வேண்டும், பதிவு, அங்கீகாரம், உரிமையாளர் விபரங்கள் உட்பட அனைத்துமே தெரிந்திருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அடிக்கடி அறிவுறுத்தப்பட்டே வருகிறது. ஆனாலும், ஒருசிலர் நம்பிக்கை காரணமாக, மிக மோசமாக ஏமாந்து போகும் சூழல் ஏற்பட்டுவிடுகிறது. .என்ன நடந்தது சென்னையில்?
பொதுவாக வங்கிகளில் நகைகளை அடமானம் வைப்பதாக இருந்தால், நகையின் தூய்மை, எடை, மதிப்பீடு எவ்வாறு கணக்கிடப்படும்.. இதற்கான ரசீதையும் வாடிக்கையாளர்கள் சரியாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

தங்க நகை அடகு
வட்டி விகிதம், தவணை காலம், அபராதம், நகை மீட்பு விதிமுறைகள் அனைத்தையும் எழுத்துப்பூர்வமாக தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.. அங்கீகரிக்கப்பட்ட வங்கியை தேர்வு செய்து, நகை பாதுகாப்பு மற்றும் காப்பீடு உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
வங்கிகளுக்கே இப்படியென்றால் நிதி நிறுவனங்கள் என்றால் சற்று கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கிறது.. காரணம், வங்கிகளை விட நிதி நிறுவனங்களில் வட்டி அதிகமாகவும், அபராத விதிகள் கடுமையாகவும் இருக்கும்..
எனவே ஒப்பந்த நிபந்தனைகளை முழுமையாக வாசித்து ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும், நிறுவனம் RBI-யில் பதிவு செய்யப்பட்டதா, ரசீது, நகை விவரம், மீட்பு காலம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும் கட்டாயமாக உறுதி செய்ய வேண்டும்.
238 சவரன் நகை கடன் அடமானம்
இதெல்லாம் தெரியாமல் ஒருசிலர் நம்பிக்கையின் பேரில் இன்னமும் நகைகளை இழந்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.. அப்படி ஒரு சம்பவம்தான் சென்னையில் நடந்துள்ளது..
மவுலிவாக்கத்தைச் சேர்ந்தவர் கணேஷ். தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு சேத்துப்பட்டை சேர்ந்த, தனியார் நிதி நிறுவனம் நடத்தி வரும் சுரேந்தர், மற்றும் அந்த நிதி நிறுவனத்தில் இயக்குநராக உள்ள சூளைமேட்டை சேர்ந்த காஜா மொய்தீன் பஷித் ஆகியோரது அறிமுகம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், தன்னுடைய தொழிலை விரிவுபடுத்தும் வகையில் தன்னிடமிருந்த 238 சவரன் தங்க நகைகளை வங்கியில் அடமானம் வைத்து ரூ.1 கோடி பணம் பெற்றிருந்தார் கணேஷ். அந்த நகைகளின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும்..
அடகு நகை - குறைந்த வட்டி
ஆனால், அதை மீட்க முடியாமல் தவித்து வந்துள்ளார் கணேஷ்.. அப்போது, சுரேந்தர் கணேஷிடம், நாங்கள் உங்கள் நகைகளை மீட்டு தருகிறோம்., எங்கள் நிதி நிறுவனத்தில் அந்த நகையை அடமானம் வைத்தால் அதிக பணம் தருகிறோம். அதோடு குறைந்த வட்டியை உங்களுக்காக தருகிறோம் என்று ஆசைவார்த்தை சொல்லி உள்ளனர்..
இதை நம்பிய கணேஷூம், நகையை மீட்டு, சுரேந்தர் நிதி நிறுவனத்தில் மறு அடகுக்கு வைத்தார்.. ஆனால், உறுதி அளித்தபடி நகைக்கான கூடுதல் பணத்தை சுரேந்தர், காஜா மொய்தீன் இருவருமே தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது...

அடமானம் - நகைக்கடன்
கணேஷ் தன்னுடய நகைகடன் முழுவதையும் வட்டியுடன் தந்து விடுவதா சொல்லி மொத்த நகைகளையும் திரும்பத் தருமாறு கேட்டாராம்.. அப்போதும் அவரது நகைகள் திரும்ப கொடுக்கப்படவில்லை.
இதனால் அதிர்ச்சியும், விரக்தியும் அடைந்த கணேஷ் இது குறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், நகை பெற்று மோசடி செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சுரேந்தர், காஜா மொய்தீன் பஷித் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications