Gold Loan Waiver: நகைக் கடன் தள்ளுபடி! கூட்டுறவு வங்கிகளில் குவியும் மக்கள்? உண்மை என்ன?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் நகைக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை கொடுப்பார்கள் என கூறப்படுவதை அடுத்து, கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடியை பெற பலர் தங்களது நகைகளை கொண்டு போய் அடகு வைத்து கடன் வாங்கும் நிலை இருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவும், மே 4ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன. இத்தேர்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட தேர்தல் அறிக்கைகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கடந்த 2021ல் திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோது, 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை சுமார் ரூ. 6,000 கோடி மதிப்பில் தள்ளுபடி செய்தது. இம்முறையும் திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிடும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பின்னணியில், மக்கள் கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. இதன் உண்மைத்தன்மை தெரியவில்லை. தள்ளுபடியை பெற நகைகளை அடகு வைக்கிறார்களா, இல்லை உண்மையிலேயே அவர்களுக்கு பணத்தேவை இருக்கிறதா என்பது தெரியவில்லை. இரு திராவிடக் கட்சிகளும் நகைக்கடன் தள்ளுபடியை அறிவித்தால், யார் ஆட்சிக்கு வந்தாலும் சலுகை உறுதி என்பதால் மக்கள் உற்சாகத்தில் உள்ளனர். எனினும், இதற்கு நிபந்தனைகள் உள்ளன.
குடும்ப அட்டைக்கு 5 சவரன் (40 கிராம்) அல்லது அதற்குக் குறைவாக அடகு வைத்தவர்கள் மட்டுமே தகுதியானவர்கள். தள்ளுபடி தொடக்க வேளாண், மத்திய, நகரக் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு மட்டுமே பொருந்தும். சரியான ரேஷன் அட்டை, ஆதார் விவர இணைப்பு கட்டாயம்.
ஒரு குடும்பத்தின் மொத்த நகைக்கடன் அளவு 5 சவரனுக்குள் இருக்க வேண்டும். வெவ்வேறு வங்கிகளில் பெற்றாலும், மொத்தம் 5 சவரனைத் தாண்டினால் தள்ளுபடி கிடைக்காது.
நகைக்கடன் தள்ளுபடி என்பது தற்போது வெறும் யூகமே. திராவிடக் கட்சிகள் அதைத் தேர்தல் அறிக்கையில் அறிவித்து, ஆட்சிக்கு வரும் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பின்னரே இந்தச் சலுகை நடைமுறைக்கு வரும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எனவே மக்கள் யாரும் அவசரப்பட்டு தேவையில்லாமல் நகைகளை அடகு வைத்து பின்னர் அந்த திட்டத்தை கொண்டு வராவிட்டால் நிதி சிக்கலில் சிக்க வேண்டாம் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. யார் ஆட்சிக்கு வந்தாலும் நிதி நிலைமையை பார்த்து, ஒவ்வொரு திட்டங்களாகத்தான் கொண்டு வருவார்கள். எனவே நகைக் கடன் தள்ளுபடியுடன் விவசாயக் கடன் தள்ளுபடி, மாணவர்களின் கல்விக் கடன் உள்ளிட்டவையும் இருப்பதால் புதிய அரசும் முக்கியத்துவத்தின் பேரிலேயே தள்ளுபடியை அறிவிக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications