மார்ச்சில் தங்கம் விலை கிராம் ரூ.15 ஆயிரத்தை எட்டும்.. வெள்ளி ரூ.500ஐ தொடும்.. வியாபாரி கொடுத்த ஷாக்
சென்னை: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் ரூ.500 வரை உயரும் என்றும் கணித்திருக்கின்றனர். இப்படி தங்கம் விலை தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து வருவது ஏன் என்பதை காணலாம்.
தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. டிசம்பர் 15ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ஒரு லட்சத்தை கடந்த நிலையில், நேற்று ஒரு சவரன் ரூ.1,04,800க்கு விற்பனை செய்யப்பட்டது. காலையில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்த தங்கம் விலை, மாலையில் ரூ.800 உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.13,100க்கு விற்பனையாகி வருகிறது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே தங்கம் விலை மிகப்பெரிய உயர்வை சந்தித்து வருகிறது. ஒரே ஆண்டில் ரூ.50 ஆயிரம் வரை ஒரு சவரன் தங்கம் உயர்ந்திருப்பது சாமானிய மக்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது. ஏனென்றால் இந்தியாவில் சாமானிய மக்களின் ஒரே முதலீடாக தங்கம் மட்டுமே இருந்து வருகிறது. தற்போது அந்த முதலீடு செய்வதே மிகப்பெரிய சிக்கலாக உருவாகி இருக்கிறது.
தங்கம் மட்டுமல்லாமல் வெள்ளி விலையும் ஒவ்வொரு நாளும் உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.31 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2.85 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் வெள்ளியில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களில் வெள்ளியின் விலையும் வேகமாக உயர்வது புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது.
இந்த நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு தொடர்பாக தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் பேசுகையில், இனி வரும் காலங்களில் தங்கம் விலை உயரவே அதிக வாய்ப்புகள் உள்ளது. மார்ச் மாதத்திற்குள் ஒரு கிராம் தங்கம் ரூ.15 ஆயிரத்தை கடந்துவிடும் என்றும், ஒரு கிராம் வெள்ளி ரூ.500ஐ எட்டிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கான பின்னணி தொடர்பாக பேசிய அவர், சர்வதேச பொருளாதார மந்தம், அமெரிக்கா ஃபெடரல் வங்கி வைப்புக்கான வட்டி விகிதம் குறைப்பு, தங்கத்தின் தேவை அதிகரிப்பு, முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. வெள்ளியிலும் தொழில்துறையினர் அதிகளவில் வாங்கி குவித்து வருகின்றனர். இதனால் விலை அதிரடியாக உயர்கிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications