சர்க்கரை அட்டைதாரர்களுக்கு இனிப்பு மேட்டர்.. ரேஷன் பொருள் வீடு தேடி வருதாம்.. தமிழக அரசு குட்நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் வீடுகளுக்கே நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டசபையில் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பானது, பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 3வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

நியாய விலைக்கடைகள்
இன்றைய தினம், கேள்வி, பதில் நேரத்தில் பேசிய பாஜக எம்எல்ஏ எம். ஆர்.காந்தி, ஏழை எளிய மக்கள் அதிகாலை பணிக்கு சென்று இரவு நேரத்தில் வீடு திரும்புவதால் நியாய விலைக்கடைகளில் பொருட்களை பெற முடியவில்லை என்பதால் நாகர்கோவில் தொகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நடமாடும் நியாய விலைக்கடைகள் அமைக்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, "நாகர்கோயிலில் ஏற்கனவே 31 நியாய விலைக்கடைகளும், 10 பகுதிநேரக் கடைகளும் இயங்கி வருவதால் நடமாடும் நியாயவிலைக்கடைகள் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் இல்லை" என்றார்.
வீடு தேடி வரும் ரேஷன்
இதையடுத்து, பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன், "கர்நாடக மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். எனவே, அதேபோல் தமிழ்நாட்டிலும் செயல்படுத்த அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.
செங்கோட்டையனின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி, "ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, வரும் 20ஆம் தேதி தமிழக உணவுத்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட உள்ளனர். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மளிகை கடைகள்
முன்னதாக, "வேலைக்குச் சென்று விட்டு இரவு லேட் ஆக வரும் மக்கள் பயன்பெறும் வகையில் கர்நாடகா மாநிலத்தில் ஆங்காங்கே பெரிய மளிகை கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்கும் போது ரேஷன் பொருட்கள் வழங்கும் வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுமா?" என்று செங்கோட்டையன் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு அமைச்சர் சக்கரபாணி, "ஆந்திராவில் இதே போல வீடுகளுக்கே சென்று பொருள்கள் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. 20ம் தேதி உணவுத்துறை அதிகாரிகள் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பிற மாநிலங்களுக்கு சென்று ரேஷன் கடைகள் பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த இருக்கிறார்கள்.
அவர்கள் வந்து அறிக்கை தந்த பின்னர் அதனை ஆய்வு செய்து அந்த திட்டங்களை செயல்படுத்தலாம் என்று முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு முடிவெடுக்கப்படும்" என்று பதிலளித்திருந்ததும் பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications